ஏறாவூர் மீராகேணி அரிசி ஆலைகளினால் மக்கள் பாதிப்பு: பாதிக்கப்பட்டவரின் வாக்கும் மூலம்: ஏறாவூர் அரசியல்வாதிகளே இதற்கு தீர்வு எப்போது?

0
326

2017-07-17-PHOTO-00000014தத்ஏறாவூர் முஹம்மது அஸ்லம்

அன்புள்ள பொது மக்களுக்கும், அரிசி ஆலை சங்க உரிமையாளர்களுக்கும் இம்மடலை விழித்து எழுதுகிறேன்.

அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் அரிசி ஆலைகளுக்கெதிரான புரட்சியொன்று (எதுவும் நடக்கப் போவதில்லையாயினும், காரணம் பிறகு சொல்கிறேன்) நிகழ்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அந்த வகையில், குறிப்பிட்ட சில ஆலைகளினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் எனது கருத்துக்களையும் மக்கள் மன்றில் சமர்ப்பிக்க இம்மடலினூடாக விளைகிறேன்.

நான் மீராகேணி பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன். அந்த வகையில், எனது சுவாசப்பைக்குள் சென்று வந்த வளி அளவில் நைதரசனுக்கு அடுத்ததாக அரிசி ஆலைகளின் உமிக்கரிகளே இருக்குமென்பது திண்ணம். மற்றும் கண்கள் கண்ட காட்சிகளில் அதிகமானவை உமிக்கரிகள் வளியாடு சேர்ந்து விளையாடிய காட்சிகளென்பதும் திண்ணம்.

இது என்னைப்போன்ற சக உறவுகளுக்கும் பழக்கமாகிப்போன அவஸ்தை என்றாலும், அடுத்த தலைமுறையும் இதே அவஸ்தையில் தானா வாழ வேண்டுமென்ற எழுதப்படாத விதிக்கு விடை காண வேண்டிய தேவையுள்ளது.

குடியிருப்பு வலயங்கள், தொழிற்சாலை வலயங்கள் என்ற சொல்லாடல்கள் பாடப்புத்தகங்களில் மட்டும் தான் என்றதொரு உண்மை மீராகேணியை நோக்கிப்பயணிக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

ஆரம்ப காலங்களில் “குளணி” என்றதொரு இழிவுச்சொல்லாடலோடு பார்க்கப்பட்ட இப்பிரதேசம், சில மக்கள் மனதிலும் ஆழமாய் வேறூன்றியதன் வெளிப்பாடு அங்கே போய் தொழிற்சாலைகளை அமைத்துக் கொள்ளலாம் மற்றும் அங்குள்ளவர்களை வைத்து இலகுவாக வேலை வாங்கிக் கொள்ளலாமென்ற அசட்டு தைரியத்திலும், இப்பகுதி எக்காலத்திலும் உருப்படாது நாம் உழைத்துக் களைத்து விடலாமென்ற நம்பிக்கையிலும் சில பண முதலைகள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்கிறது.

(இங்கு சில நடுநிலை நக்கிகள் நகர்ப்பிரதேசத்திலும் தானே கட்டப்பட்டன என வரிந்து கட்டிக்கொண்டு வருவர். ஆமாம், எல்லைப்பிரதேசங்களில் எல்லைகள் விரிவடைய விரிவடைய அவைகள் காணாமல் போயின. ஆனால் மிச் நகர், மீராகேணி பிரதேசங்கள் இன்னும்??)

ஆம், இன்னும் அதே இரத்தத்தில் பிறந்த இழிவு மனப்பான்மை கொண்ட அவர்களின் வாரிசுகளே ஆள்கிறார்கள் என்பதை மீராகேணியின் நுழைவாயிலில் வரவேற்கும் எதுவித கழிவு முகாமைத்துவமற்ற அரிசி ஆலைகள் சாட்சி பகர்ந்து நிற்கின்றன.

பகல் நேரங்களில் பாதையால் செல்லும் போது, கண்களில் உமித்தூசி பட்டிருக்காத, அந்தி வேளையில் உமியிலிருந்து வந்து கண்ணைத் தாக்குகின்ற சில பூச்சிகளின் தாக்குதலுக்குள்ளாகியிராத அப்பாதையில் பயணித்த யாரும் இருக்க முடியாது (அரசியல் “வியாதிகளையும்” அதிகாரிகளையும் தவிர. ஏனெனில் அரசியல்வாதிகள் வாகனத்தில் செல்வதாலும், அதிகாரிகளின் கண்களில் அரிசி துணிக்கைகள் விழுந்திருப்பதாலும்)

மேலும், இரவு வேளைகளில் சுமார் 9 மணிக்குப் பின்னால் ஆலை உரிமையாளர்களின் குறுக்குப் புத்தி வேலை செய்யத் தொடங்கும். அதாவது கரிக்கப்படும் உமித்துகள்களாக வெளியேறி பாதையால் செல்வோரின் கண்களைத் தாக்கும்.

இத்துகள்கள் கண்ணிலுள்ள மெல்லிய மென்படலங்களைக் கீறிக்கிழிக்கும் வல்லமையுடையவை. தவிர, ஆலைகளுக்கருகில் இருப்பவர்கள் தப்பித்தவறியேனும் இரவில் வெளியில் ஆடைகளைக் காயப்போட்டு விடக்கூடாது. அதிலும் பாடசாலை மாணவர்களென்றால் அடுத்த நாள் பெரும்பாலும் விடுமுறை தான்.

மேலும், ஆலைகளுக்கருகிலிருப்பவர்களின் வீடுகள் கூரைக்குக்கீழ் பொலித்தீன் அல்லது சீட் அடிக்கப்படாமலிருந்தால், இரவில் தூக்கம் வரவில்லையே என்று மறந்தும் கண்ணைத்திறந்து விடக்கூடாது. திறந்தால் நிரந்தரமாக தூக்கம் போய் விடும்.

இவற்றுக்கு மேலாக அவ்வப்போது ஆலைகளிலிருந்து வரும் துர்நாற்றமோ கொடுமையிலும் கொடுமை. குழந்தைகள், நோயாளிகள் அருகிலிருந்தால், குவான்டனாமோ சிறச்சாலைகளின் நிலைமை தான். ஆக, ஆலைகள் இவ்வளவு தானா கொடுமை செய்கிறது எனக்கேட்டால் சொல்லப்பட்டது வெறும் 10 வீதம் தான்.

1.உடலியல்
2.உளவியல்
3.சூழலியல் எனப்பல்வகைப்படுத்தி இதனை ஆராயலாம். இருந்தாலும், ஆராயப்பட்ட கட்டுரை இடைநடுவில் கிடப்பில் கிடக்கிறது.

காரணம் ஆலை உரிமையாளர்கள் யாரும் ஆறாம் வகுப்பு சித்தியடையாதவர்கள். ஆக, எழுதப்பட்ட விடயங்களைப் புரிந்து கொள்ளுமளவு கெப்பாசிட்டி இருக்காது. ஏனெனில், பணமொன்றே குறிக்கோளென வாழும் வேற்றுக்கிரகவாசிகள் அவர்கள்.

சரி சித்தியடைந்து அல்லது அரசியல்வாதியின் அனுசரணயில் குறிப்பிடப் பட்ட அதிகாரத்துக்கு வந்து விட்ட கோட்சூட் பிச்சைக்காரர்களாவது புரிந்து கொள்வார்களெனில், அதுவும் கொம்புத்தேன் தான்.

வேண்டுமானால், காக்கிச்சட்டை அணிந்து திரியும் (பொலீசாரை சொல்லவில்லை) ஒரு களவாணிப் பயலிடமாவது கேட்டுப்பாருங்கள். ஏதாவது ஆலையினுள் உங்கள் காலடி பட்டுள்ளதா என்று? இருக்கவே இருக்காது. வேண்டுமானால் “வேண்டிக்கொண்டதற்கிணங்க” நற்சான்றுப்பத்திரம் வழங்கப் போயிருப்பார்கள்.

ஏறாவூரில் ஒரேயொரு ஆலையைத்தவிர எந்தவொரு ஆலையும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் விதிக்கமைவாக இயங்கவில்லை. இத்தகவல் அதிகார சபையின் மட்டக்களப்பு கிளையினூடாக வழங்கப்பட்டதே ஆகும்.

விடயத்துக்கு வருகிறேன்…கடந்த 3 வருட காலமாக மீராகேணியில் இயங்கி வரும்  அரிசி ஆலைகளினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவன் நான். (மட்டுமல்ல சுமார் 30 குடும்பங்கள்) இது சம்பந்தமாக பல முறைப்பாடுகள் உரிய இடங்களுக்கு பல தடவைகளில் மேற்கொள்ளப்பட்டும். உரிய தீர்வுகள் எட்டப்படவில்லை.

காரணம், ஒன்று மட்டும் புரிகிறது. அதாவது உரிமையாளர் முறைப்பாடு செய்தால், “எனக்குத்தெரியும் என்ன செய்ய வேண்டுமென்று, நீங்கள் வேண்டிய இடங்களில் முறைப்பாடு செய்யலாமென்ற “திமிரான அனுமதியைத் தருகிறார். இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும்.

ஆக, இதற்குத்தீர்வு தான் என்ன?

தீர்வுக்கு மறுமை வரை காத்திருக்கிறோமென்றாலும் (மிகத்துல்லியமாக கணக்குத் தீர்க்கப்படுமல்லவா) தூசிகள் வளியில் விடப்பட்டதைப் போன்று, அவ்வாலைக்காக அயலவர்களின் பதுவாக்கள் சுற்றியலைய விடப்பட்டுள்ளது. உலகத்திலும் ஆலையோடு பிடிக்கும் நெருப்பு மறுமையிலும் குறிப்பிட்ட உரிமையாளரை விட்டு வைக்காது என்பது திண்ணம்.

அதிகாரங்கள் கொடுக்கப்பட்டவர் பொறுப்புக்களைப் பற்றி விசாரிக்கப்படும் போது, பைல்களைப் புரட்டிக்காட்டி தப்பித்து விடும் நாளில் விசாரிக்கப்படமாட்டீர்கள். எங்களின் வியர்வைகள் பிழியப்பட்ட பணத்தில் சம்பளம் வாங்கும் உங்கள் கணக்கும் தீர்க்கப்பட வேண்டுமல்லவா?

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால், எமதூரைப் பொறுத்தவரை குறிப்பிட்ட இப்பிரச்சனையைத் தீர்க்க முடியுமாகவுள்ளவர்களில் (அரசியல்வாதிகள் உட்பட) அனேகர் முஸ்லிம்கள்.

நேற்றைய முன்தினம் ஒரு காக்கி டவுசர் அணிந்த ஒருவர் (அநேகமாக சுகாதாரப்பரிசோதகராக இருக்க வேண்டும்) ஒரு விடயத்தைக் கூறினார். தன்னை அறிவாளியாகக் காட்டிக்கொள்ள முனைந்தவர் “அரிசி ஆலைகளுக்கருகில் வீடுகளைக்கட்டி விட்டு, அதனை எழுப்புவதில் என்ன நியாயம்?” என்றதொரு பாமரத்தனமான கேள்வியை முன்வைக்கிறார்.

“இது சுத்தமாக ஓசியில் அரிசி சாப்பிடாத ஒருவரால் நிச்சயமாகக்கேட்க முடியாது” என்பது திண்ணம். இது இவ்வாறிருக்க, சகோதரர் ஒருவரின் மாற்றுப்பதிவுக்கான விளக்கமும் வழங்கப்பட வேண்டுமென நினைக்கிறேன்.

அதாவது, குறிப்பிட்ட ஆலை உரிமையாளர் சகோதரர்  ஒருவரிடத்தில் கடந்த 8 மாதத்திற்கு முன்னால் எல்லா வேலைகளும் முடிந்து விட்டது. பழைய போட்டோக்களைப் பதிவேற்றியுள்ளார் எனக்கூறியிருக்கிறார்.

அந்த போட்டோக்கள் என்னால் பிடிக்கப்பட்டவை தான். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் முறைப்பாடொன்றுக்காக பிடிக்கப்பட்டது. இதில் 8 மாதத்திற்கு முன்னால் ஆலையின் கழிவு முகாமைத்துவ வேலைகள் முடிக்கப்பட்டதென்பது அல்லாஹ் மீது ஆணையாக கலப்படமற்ற பொய். “நோன்புக்குள் நாங்கள் ஸஹர் வேளையில் சாப்பிட்டது சோறுடன் உமிக்கரியும் சேர்த்துத்தான்”

“கூடவே அவ்வேளையில் அவனுக்கு நாங்கள் செய்த பதுவாவும் வீண்போயிருக்காது..”

விரிவஞ்சி இம்மடலை முடித்துக்கொள்கிறேன்.

கடந்த 17.07.2017ம் திகதியன்று அயல் வீடுகளில் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.2017-07-17-PHOTO-00000014தத் 20231956_1326738997424750_9040586818524170938_o 20232787_1326711797427470_53900342026752292_o 20245631_1326738370758146_8488286113414471754_n டவ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here