நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட மீராவோடை காணிக்கு தேரரிடம் நீதி கேட்கின்றனர் – பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

0
215

IMG_5723எஸ்.எம்.எம்.முர்ஷித்

வடக்கில் இடம்பெயர்ந்த ஒன்றரை இலட்சம் முஸ்லிம் மக்களை மீள்குடியெற்றம் செய்வதன் மூலம் தான் வடபுலத்திலுள்ள தமிழ் முஸ்லிம் உறவு ஐக்கியப்படும் என்பது உண்மை என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் எறாவூர் ஹிதாயத் நகர் பகுதியில் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (21.07.2017) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக வாழ்கின்ற சந்தர்ப்பம் இல்லை என்று சொன்னால் காவியுடை தரித்தவர்கள் எமக்கு நீதிபதியாக வருவார்கள் அவ்வாறு வரும் போது நாம் ஒன்றுபடுவதை அவர்களில் சிலர் விரும்பவும் மாட்டார்கள்.

எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவைப்பற்றி பேசுவதற்கு தயாராக இருக்க வேண்டுமாக இருந்தால், முஸ்லிம் தமிழ் மக்கள் விட்டுக் கொடுப்புடனும் இந்நாட்டிலே வரவிருக்கின்ற அரசியல் ரீதியான மாற்றங்களுக்கு ஒற்றுமைப்பட்டு ஒரு செய்தியை தேசத்திற்கு சொல்ல வேண்டிய ஒரு தேவைப்பாடு வருமாக இருந்தால், இரண்டு சமூகமும் சேர வேண்டிய புள்ளி முன்பாக வட புலத்திலே துரத்தப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேற்றப்பட்ட பின்னர் தான் அந்தப் புள்ளியில் இருந்து பேச முடியும் என்பது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலவரமாகும்.

வாழைச்சேனை மீராவோடை பகுதியில் நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட்ட காணி விடயத்தை பூதாகரமாக்கி, மட்டக்களப்பு தேரரை அந்தப் பகுதிக்கு மக்கள் வரவழைத்து நீதி, நியாயம் கேட்கின்ற நடைமுறை வட கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று சொன்னால் இரண்டு சமூகத்திற்கும் பாரிய பிரச்சனையை ஏற்படுத்தும் நிம்மதியாக வாழ முடியாது என்பது என்னுடைய கருத்தாகும்.

பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் தான் தமிழ் சமூகம்.  அவர்கள் கற்றுக்கொண்ட பாடம், கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட நஷ்டங்கள், துன்பங்கள் என்ற விடயம் அந்த தரப்பினரால் இன்னுமொரு இனத்தவருக்கு ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.

தமிழர் தமிழர்களை முஸ்லிம் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொள்கின்ற அரசியல் அல்லது இருவருமாக பிரிந்திருந்து செய்கின்ற அரசியல் இந்த நல்லாட்சி அரசியலிலே தமிழர்களுக்கும் முஸ்லிம்களும் எந்த மாற்றங்களும் கிடைக்கப்போவதில்லை.

ஒரு நிலவரம் வருகின்ற போது இதனை கொடுக்கக்கூடாது என்று சொன்னால் முஸ்லிம் தலைவர்களை அழைத்து தமிழ் மக்கள் இப்படி கேட்கின்றார்கள் நீங்கள் இதற்கு உடன்படுவீர்களா? என்று அவர்கள் சொல்லாமலே சொல்லுவார்கள். இதற்கு முரண்படுங்கள் என்று.

முஸ்லிம்களின் பிரச்சனை வரும் போது தமிழ் தலைவர்களை அழைத்து இப்படி கோரிக்கையை வைக்கின்றார்கள். உங்களுடைய கருத்து என்ன என்று சொல்லுகின்றளவுக்கு சொல்லும் பொழுது மீண்டும் பழைய நிலமைக்கு செல்லுகின்ற நிலவரத்திலே தான் எங்களை இவர்கள் எல்லோரும் மாறி மாறி கடந்த காலத்திலே கசக்கி பிழிந்தவர்கள்.

தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமிழ் முஸ்லிம் பகுதியில் இனவாதத்தை தூண்டுகின்ற எல்லா சக்திகளும் ஒரு காலத்தில் யோசிக்க தவறுமாக இருந்தால் இந்த சந்தர்ப்பம் நழுவப்படுமாக இருந்தால் யாருக்குமே இந்த நாட்டிலே ஒரு மாற்றத்தை பெற்றுக் கொள்ள முடியாது.

நீண்ட காலப்போராட்டத்திலே நிகழ்ச்சித்துக் கொண்ட எந்தவொரு நிகழ்வையும், எந்தவொரு சமூகமும் சாதித்துக் கொள்ள முடியாமல் போகின்ற துர்ப்பாக்கிய நிலைமைக்கும் இரு சமூகமும் தள்ளப்பட்டுப்போய் விடும்.

இரண்டு சிறுபான்மை சமூகம் பிரச்சனைப்பட்ட காலம் போதுமானது. எங்களை இன்னும் பிரித்து வைத்து தந்ரோபாய அரசியலுக்குள் எங்களை மீண்டும் அமிழ்த்தி எடுத்து ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை எங்களுடைய நிறங்களை மாற்றி மாற்றி சொல்லுகின்ற அரசியல் கலாசாரத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று அரசியல் தலைமைகள் விரும்புமாக இருந்தால் வட புலத்தில் இருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் மக்கள் விடயத்தில் அவசரமாக சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராஜா, சுமந்திரன் போன்றவர்கள் இந்த வேலைத்திட்டத்தில் ஒரு முடிவை கொண்டுவருவதன் மூலம் சிறந்த முனைப்பை செய்ய முடியும்.

ஐக்கிய தேசிய கட்சி இவ்வருட இறுதிக்குள் உள்ளூராட்சி சபைத்தேர்தலை தொகுதி வாரியாக எழுபது வீதமும் பிரதேச வாரியாக முப்பது வீதமாக நடாத்த வேண்டும் என அவசரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாண சபை உரிய காலத்தில் கலைக்கப்பட வேண்டும். மாகாண சபை கலைக்காமல் இருக்க வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுவருவதன் மூலம் தான் அதனை நீட்டுவதா என்கின்ற விடயம் சொல்ல முடியும்.

தற்போதைய நடவடிக்கையின் பிரகாரம் மாகாண சபையின் காலத்தை நீடிப்பது கிடையாது என்றும் தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் ஏறாவூர் பிரதேச செயலக பிரிவில் தையல் பயிற்சியை முடித்த பதின்மூன்று யுவதிகளுக்கு பிரதியமைச்சரினால் தையல் இந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் பிரதியமைச்சர் பொண்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு சந்தைப்படுத்தல் மற்றும் பயிற்சி நிலையத்தில் ஹிதாயத் நகர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் எம்.கலீல் தலைமையில் நடைபெற்ற போது அதிதிகளாக பிரதியமைச்சரின் இணைப்பாளரும் எறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளருமான எம்.எல்.ஏ.லத்தீப், ஏறாவூர் பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சி.றமீஸா, பிரதி திட்டப்பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.IMG_5705 IMG_5710 IMG_5716 IMG_5717 IMG_5723 IMG_5726 IMG_5730

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here