இஸ்லாத்தின் பார்வையில் போக்குவரத்துச்சட்டங்கள்-ஷியான் யாக்கூப்

0
348

Untitled-1ஷரீஆவானது சில விடயங்களைச் செய்வதற்கு அனுமதியளித்து, சில விடயங்களைச் செய்வதையிட்டும் தடுத்துள்ளது. இதனைக்கொண்டு எது சட்டபூர்வமானது? எது சட்டபூர்வமற்றது என்ற முடிவிற்கு எம்மால் இலகுவாக வர முடிகின்றது. ஆனால், ஷரீஆவின் வேறு சில இடங்கள் வெறுமையாவை. இவ்வெறுமையான பகுதி காலத்திற்கும் சூழ்நிலைக்குமேற்ப பொருத்தமான சட்டங்களினால் நிரப்பப்பட வேண்டும். இவ்வாறான வெறுமையான பகுதிகள் தான் ஷரீஆவின் விசாலத்தன்மைக்கும், நெகிழ்வுத்தன்மைக்கும் வழியேற்படுத்தி, அதனை காலா காலத்திற்கும் எல்லாச்சூழலிற்கும் பொருத்தப்பாடுடையதாக மாற்றுகின்றது.

இவ்வாறு இயற்றப்படுகின்ற போக்குவரத்துச்சட்டங்கள் “மஸாலிஹ் முர்ஸலா” விற்குள் அடங்குகின்றன. ஆனால், இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத போதும் நாங்கள் ஷரீஆவிற்கு முரண்படாத போக்குவரத்து விதிகள், ஒழுங்குகளுக்கு மதிப்பளித்து கட்டுப்படுவது கட்டாயமானவொன்றாகும். ஒவ்வொரு அரசாங்கங்களினாலும் பொது மக்களைப் பாதுகாப்பதற்காகவும், அசெளகரியங்களைத் தவிர்ப்பதற்காகவும் அந்தந்த நாடுகளின் சூழ்நிலைகளுக்கேற்றவாறு தனித்தன்மை வாய்ந்த போக்குவரத்துச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

ஒருவர் பாதையில் நடந்து செல்லும் போது, வலப்பக்கமாகவோ, இடப்பக்கமாகவோ செல்ல முடியும். எப்பக்கத்தினால் செல்ல வேண்டுமென்பதற்கு எவ்விதமான தெளிவான சட்டங்களுமில்லை. ஆனால், அரசாங்கமானது வீதி ஒழுங்கினைப் பேணுவதற்காகவும், விபத்துக்களினைத் தடுப்பதற்காகவும் வலது பக்கத்தினால் நடந்து செல்ல வேண்டுமென சட்டமியற்றியுள்ளது.

வாகனங்கள் எந்த வேகத்தில் செல்ல வேண்டும்? குறைந்த வேகமா? கூடிய வேகமா? எங்கு வாகனங்களை நிறுத்த வேண்டும்? எங்கு நிறுத்தக் கூடாது என்பதற்கு தெளிவான சட்டங்களில்லை. ஆனால், இவையெல்லாம் ஆராயப்பட்டு, பொருத்தமான சட்டதிட்டங்கள் மக்களுக்காக இயற்றப்பட்டுள்ளன.

இவற்றினைப் பின்பற்றுவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.  காரணம், இவையே எமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்குகின்றன. உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இஸ்லாத்தில் கடமையானவொன்றாகும். நாம் இப்போக்குவரத்துச் சட்டங்களினை மீறுவதென்பது குற்றம் மட்டுமன்றி, ஒரு பாவமான செயலுமாகும்.

மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்து விட முடியாது. மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. (17:37)

இங்கு “பெருமையாய் நடத்தல்” என்பதன் மூலம் குறிக்கப்படுவது என்னவென்றால், மற்றோரை வேதனைப்படுத்தும் படி கர்வமாகவும், அகந்தையுடனும் நடத்தலாகும். தேவையற்று ஏனைய வாகனங்களுக்கு இடையூறு செய்து தமது வாகனங்களை ஓட்டுவதும், தேவையற்ற விதத்தில் வாகனத்திலிருந்து ஒலி எழுப்புவதும் அல்குர்ஆன் கூறுகின்ற பெருமையாய் நடத்தல் என்பதன் அர்த்தத்தினையே கொடுக்கக் கூடியன.

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் யாரென்றால், அவர்கள் தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள். மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” சொல்லி (விலகிப்போய்) விடுவார்கள். (25:63)

இங்கு “பணிவுடன் நடத்தல்” என்பதன் மூலம் குறிக்கப்படுவது என்னவென்றால், மேற்கூறப்பட்ட பெருமையுடன் நடத்தல் என்பதற்கு எதிர்மாறான கருத்தாகும். அதாவது, ஏனையவர்களுக்கு இடையூறு விளைவிக்காது நடந்து கொள்வதாகும். வாகனங்களைப் போதுமான வேகங்களில் ஓட்டிச்செல்வதும், வேகமாகச் செல்லும் ஏனைய வாகனங்களுக்கு வழி விடுவதும் அல்குர்ஆன் கூறுகின்ற “பணிவாக நடத்தல்” என்ற கருத்தினையே கொடுக்கக்கூடியன.

அதே வசனத்தில் இறைவன் இன்னுமொரு முக்கியமான விடயத்தினையும் குறிப்பிடுகின்றான். “மூடர்கள் அவர்களுடன் பேசி வாதாட முற்பட்டால், “ஸலாம்” சொல்லி விலகிப்போய் விடுவார்கள். நாம் வீதியில் போகும் போது சில வேளைகளில் நெருக்கடியான நிலைமைகளினைச் சந்திக்கின்றோம்.

சில ஓட்டுனர்கள் நம்மை கோபப்படுத்துவது போல் ஓட்டிச்செல்வார்கள். சிலர் தேவையற்ற இடங்களில் காது வெடிக்க ஒலியெழுப்பிக் கொண்டு செல்வார்கள். சிலர் மிக வேகமாக மோதுவதைப்போல் பயணிப்பார்கள். சிலர் தடுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை வேண்டுமென்றே நிறுத்தியிருப்பார்கள்.

இவ்வாறான நிலைமைகளில் நாம் உணர்ச்சி வசப்படுவதும் கோபப்படுவதும் எதார்த்தமானவை. இக்கோபத்தில் நாமும் அவர்களுடன் போட்டிக்கு இதே தவறுகளைச் செய்ய முற்பட்டால் நிச்சயமாக விளைவுகள் பாரதூரமானவையாகவே இருக்கும். ஆனால், இவ்வாறான நேரங்களில் அல்லாஹ்வின் அடியார்கள் அவ்வாறானவைகளை விட்டும் விலகிச் சென்று விட வேண்டுமெனவே இவ்வசனம் எம்மை வழிப்படுத்துகின்றது.

வாகனத்தின் வேகமென்பது சூழ்நிலைகளுக்கேற்ப தீர்மானிக்கப்பட வேண்டியவொன்றாகும். சன நெருக்கடியான இடங்களில் வாகனங்களை அதிகமான வேகத்தில் ஓட்டுவது தடுக்கப்பட வேண்டியதாகும். சில இடங்களில் பின்னாலுள்ளவர்களுக்கு அசெளகரியத்தினை தரும் வகையில் வேண்டுமென்றே மிக மெதுவாக ஓட்டுவதும் தடுக்கப்பட வேண்டியதாகும்.

உமர் பின் சைத் (ரழி) அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் நடந்த ஒரு விடயத்தினைக் குறிப்பிடுகின்றார்கள். ரஸூல் (ஸல்) அவர்கள் பாதை வெறுமனே இருக்கும் போது, வேகமாகவும், பாதையில் சன நடமாட்டம் இருக்கும் போது மெதுவாகவும் பயணித்தார்கள். (புஹாரி)

சாய்வான பள்ளத்தாக்குகளில் பயணிக்கும் போது கூட ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஒவ்வொருவராக கண்ணியமாகவும் மெதுவாகவும் பயணிக்குமாறு கூறினார்கள். தொழுகைக்கு வருவதாயிருப்பினும், அவசர அவசரமாக ஓடி வராது கண்ணியமாக வருமாறே ரஸூல் (ஸல்) பணித்திருக்கின்றார்கள்.

மெதுவாக நடவுங்கள். வேகமாக நடை எந்த நன்மையும் பயக்காது என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒஸாமா (ரழி) அறிவிக்கின்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)

அறபிகள் தங்களுடைய ஒட்டகங்களின் கழுத்துக்களில் மணிகளைக் கட்டி விடுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒட்டகங்களில் கூட்டமாக போகும் இடமெல்லாம் அவ்வொட்டகைகளின் கழுத்தில் தொங்கவிடப்பட்ட மணிகள் ஓசை எழுப்பிக் கொண்டே சென்றன.

இவ்வாறு தேவையற்று சத்தம் எழுப்புவதனை ரஸூல் (ஸல்) அவர்கள் தடுத்திருக்கிறார்கள். ஆனால், இன்று நாய் குரைப்பதையும், குழந்தை அழுவதையும் தமது வாகனங்களின் “ஹோர்ன்” சத்தங்களாகப் போட்டுக் கொண்டு, மற்றவர்களைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் சத்தம் எழுப்பித்திரிவதை பார்க்கின்றோம். இவை தடுக்கப்பட வேண்டியவைகளாகும்.

வழியில் தடையாக இருக்கும் பொருளொன்றினை அகற்றுவது கூட நன்மையான காரியம் என ரஸூல் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)

வழியிலுள்ள தீங்கு விளைவிக்கும் பொருளையே அகற்றச்சொல்லிப் போதிக்கின்ற மார்க்கத்தினைப் பின்பற்றுகின்ற நாம் சூழலுக்கு தீங்கு விளைவிக்கின்ற, சூழலை மாசுபடுத்துகின்ற வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பெண்கள் செல்லுகின்ற பாதைகளிலும், பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதைகளிலும் ஆண்கள் பயணம் செய்வது கூடாது என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்ன் உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூ தாவூத்)

பெண்களும், பாதையில் நடந்து செல்லுகின்ற ஏனையவர்களும் அவர் அவர்களுக்குரிய பாதையில் நடந்து செல்ல வேண்டுமெனவும், நடந்து செல்லும் பாதைகளில் வாகனங்களினை நிறுத்தக்கூடாது எனவும் ரஸூல் (ஸல்) கூறியதாக அபூ உஸைத் அன்ஸாரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here