வட மாகாண முஸ்லிம்களும் தமிழ் மக்களின் கடமையும்.

0
233

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி)

download‘சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல் வராது’ என்று சொல்வார்கள். ஏனெனில் நாம் பிறந்து, வளர்ந்த மண்ணுக்கும் நமக்கும் இடையிலான உறவென்பது தொப்புள்கொடி உறவு போன்றது. மரத்தின் கிளைகள் எவ்வளவு பரந்து விரிந்து இருந்தாலும் மண்ணுக்குள் புதைந்திருக்கின்ற வேர்களுக்கு இருக்கின்ற முக்கியத்துவத்தைப் போல் பிறந்த மண் என்பது நம்முடைய அடிநாதமாகின்றது.

இன்று புலம்பெயர்ந்து கனடா, இலண்டன், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சுவிஸ்டர்லாந்து, நோர்வே, கனடா போன்ற மேற்குலக நாடுகளில் செல்வச் செழிப்போடும் சகல சௌபாக்கியங்களோடும் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களைக் கேட்டால்…. தாய் மண்ணின் பெறுமதி பற்றி சொல்வார்கள். அவர்கள் அடுக்குமாடி வீடுகளில் வசித்தாலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் பென்ஸ் கார்களில் பயணித்தாலும், வடக்கு, கிழக்கில் உள்ள தமது தாய்மண்ணின் குடிசை வீடுகளையும் பழைய சோற்றையும் மாட்டு வண்டில்களையும் இழந்திருக்கின்றோமே என்ற கவலை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.

புலம்பெயர் தமிழர்கள் எல்லோருமே வெளிநாட்டு வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமது  பூர்வீக மண்ணுக்கு என்றாவது திரும்பிவிட மாட்டோமா என்ற ஆசையுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இயந்திர வாழ்க்கைக்கும் ஐரோப்பிய சொகுசுகளுக்குள்ளும் அவர்கள் காலத்தின் கட்டாயத்தால் சிக்கிக் கொண்டுள்ளனரே, தவிர தமது சொந்த நிலம் பற்றி அவர்கள் நினைக்காத நாளில்லை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இது தமிழர்களுக்கு மட்டுமல்ல உள்நாட்டில் இடம்பெயர்ந்த, வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் உள்ள உணர்வுதான். ஏனென்றால் இது மனிதப் பண்பு. நாம் வெளியூருக்கு பயணம் போனால் வீடு திரும்பி வரும்வரைக்கும் இருக்கின்ற பதைபதைப்பு உணர்வுக்கு அடிப்படைக் காரணம், பிறப்பிலேயே நம்முடன் இரண்டறக் கலந்திருக்கின்ற தாய்மண்ணுக்கும் நமக்கும் இடையிலான பந்தமாகும்.
எனவே, தமது சொந்த மண்ணை விட்டு புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் வாழ்கின்ற தமிழ் சகோதரர்கள் தம்முடைய சொந்த ஊருக்கு போக வேண்டும் என்று எந்தளவுக்கு கவலையும் விருப்பமும் கொண்டிருப்பார்களோ, அதற்கு சற்றும் குறையாத கரிசனையையும் பெரும் விருப்பத்தையுமே வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் கொண்டிருப்பார்கள் என்பதை இந்த இடத்தில் அழுத்தமாக உரைக்க வேண்டியிருக்கின்றது.

யுத்தத்தால் இடம்பெயர்ந்து, மெனிக் பாம் உள்ளிட்ட முகாம்களில் தற்காலிகமாக தங்கியிருந்த, வேறு பிரதேசங்களுக்கு நிரந்தரமாகவே இடம்பெயர்ந்து விட்ட தமிழ் மக்களின் தாய்மண் பற்றிய ஏக்கத்தை விட, 27 வருடங்களாக அகதி வாழ்க்கை வாழும் வடபுல முஸ்லிம்களின் கவலை குறைத்து மதிப்பிடக் கூடியதும் அல்ல.
இப்படியிருக்கையில், வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு இன்னும் தமது  பூர்வீக இடத்திற்கு திரும்பாத முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் இழுத்தடிக்கப்படுவதும், அவர்களை குடியேற்ற மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு தடைபோடுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் மனிதாபிமானத்தை கேள்விக்குட்படுத்தும் செயல் என்பது மட்டுமன்றி, இடம்பெயர்ந்த ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளையும் மதிக்காத நடவடிக்கையும் என்றே கூற வேண்டியிருக்கின்றது.
பிட்டும் தேங்கய்ப்பூவும்
‘பிட்டும் தேங்கய்ப்பூவும் போல,’ ‘நகமும் சதையும் போல’ அல்லது அதை விட இறுக்கமாக வாழ்ந்தவர்கள்தான் தமிழர்களும் முஸ்லிம்களும். இன்றும் இந்த உறவு முற்றாக சிதைந்து போகவில்லை. என்றாலும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உறவில் எப்போது கீறல்கள் விழத் தொடங்கின என்பதும், அது எவ்வாறு பெருப்பிக்கப்பட்டது என்பதும் நாம் அறியாத வரலாறு அல்ல.

அதேபோன்று, வடக்கில் வாழையடி வாழையாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள் எவ்வாறு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள், கிழக்கில் என்ன நடந்தது என்பதும் தமிழர்கள் அறியாத சங்கதியல்ல. ஆனால் அதுவெல்லாம் கசப்பான அனுபவங்கள் என்று சொல்லி அதற்கு பரிகாரம் செய்ய முனைகையில், வேறு வேறு காரணங்களைச் சொல்லிக் கொண்டு குறுக்கே நிற்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாக இருக்கின்றது. அத்துடன், பழங்கதை தெரியாதோருக்கு அதை மீள ஞாபகப்படுத்த வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களும் தமிழர்களும் இறுக்கமாக வாழ்ந்த அளவுக்கு உலகில் வேறு எங்கும் இரு இனமக்கள் நெருக்கமாக வாழ்ந்திருப்பார்களோ தெரியாது. குறிப்பாக சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்தில் முஸ்லிம்களின் அரசியல் என்பது பெருமளவுக்கு தமிழர் அரசியலைச் சார்ந்திருந்தது. பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகித்த ஓரிரு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு புறம்பாக தமிழ் அரசியல்வாதிகளே முஸ்லிம்களின் உரிமை பற்றி அதிகம் பிரஸ்தாபித்தனர்.
முஸ்லிம்கள் தனியொரு இனக்குழுமம் என்பதையும் அவர்களுக்கு பிரத்தியேகமான விருப்பு வெறுப்புக்கள் இருக்கின்றது என்பதையும் தந்தை செல்வா, அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் பலர் உணர்ந்திருந்தார்கள் என்று சொல்லலாம். 1956இல் தமிழரசுக் கட்சியின் 4ஆவது மாநாட்டிலும், 1961இல் 9ஆவது மாநாட்டிலும் 1977இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் முஸ்லிம்களுக்கு தனியான சுயாட்சி அல்லது சம ஆட்சி அலகு பிரகடனம் செய்யப்பட்டதும் இவ்விதமே என்று கூற முடியும். அதாவது, முஸ்லிம்கள் கேட்டுப் போராடமலேயே அன்றைய தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உணர்ந்து செயற்பட்டார்கள் என்பது கவனிப்பிற்குரியது.
எனவேதான் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் தமிழர் அரசியலில் இணைந்து பணியாற்றினார்கள். சமகாலத்தில் விடுதலைப் புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.பி.டி.பி., ஈரோஸ்., ஈ.என்.டி.எல்.எப். என கிட்டத்தட்ட எல்லா ஆயுத இயக்கங்களிலும் முஸ்லிம் இளைஞர்கள் பரவலாக இணைந்து களத்தில் நின்று போரிட்டனர். ஆனால், 80களில் இந்தக் களநிலைமைகள் மாறின.
விரிசலடைந்த உறவு

ஜூலைக் கலவரம், இலங்கை – இந்திய ஒப்பந்தம், வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, இந்திய அமைதிகாக்கும் படையின் வருகை, தமிழ் ஆயுதக்குழுக்கள் முன்கையெடுத்தமை என பலதரப்பட்ட காரணங்களின் பின்னணியில் தமிழ் – முஸ்லிம் உறவுகளில் கீறல்கள் விழத் தொடங்கின. தமிழர் அரசியலில் இருந்தும் முஸ்லிம்கள் விலகிப் பயணிக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், விடுதலைப்புலிகள் மற்றுமுள்ள ஆயுத இயக்கங்கள் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கைகளே தமிழ் – முஸ்லிம்களின் உறவில் கரும்புள்ளியாக அமைந்தது.
இதில் மிக முக்கியமான சம்பவம், வடக்கில் ப10ர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றியமையாகும். 1990ஆம் ஆண்டு சில மணிநேர இடைவெளியில் கிட்டத்தட்ட 80ஆயிரம் முஸ்லிம்கள் வட மாகாணத்தில் இருந்து புலிகளால் வெளியேற்றப்பட்டமை. தமிழ் மக்கள் இந்த சம்பவத்தை தமது மனக்கண்ணால் நினைத்துப் பார்க்க வேண்டும். தமது விடுதலைக்காக போராடும் ஒரு ஆயுத இயக்கம் இன்னுமொரு சிறுபான்மையின மக்களை ஏதோ காரணத்திற்காக தாய் மண்ணிலிருந்து வெளியேற்றிய போது, முஸ்லிம்களின் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும்? திடீரென வெளியேறுங்கள் என்று சொன்னால் தமது பிள்ளைகுட்டிகளுடன் அவர்கள் எங்கு போவார்கள்??

ஆனால், வேறு வழியில்லை என்று வந்தபோது, கால்நடையாகவும் மாட்டு வண்டில்களிலும் உழவு இயந்திரங்களிலும் சிறிய ரக படகுகளிலும் வெளியேறினார்கள். எங்கு போகின்றோம் என்று திக்குத் தெரியாமல் பயணித்த இந்த மக்களுள் கணிசமானோருக்கு புத்தளம் அடைக்கலம் கொடுத்தது. வேறு சிலர் வேறு பிரதேசங்களில் குடியேறினர். இப்படியாக 27 வருடங்களாக அவர்கள் அகதி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை மீளவும் தங்கள் சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் என்பதை எந்தவொரு தமிழ் சகோதரனும் ஏற்றுக்கொள்வான். இன்று, பல்கிப் பெருகி நிற்கின்ற வடமாகாண முஸ்லிம்களுக்கு முன்னரை விட அதிக நிலப்பரப்பு தேவைப்படும் என்ற யதார்த்தத்தையும் மறுதலிக்க முடியாது.

இதேபோல இடம்பெயர்ந்து, மீளக் குடியேறும் தேவையுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தமது தாய்மண்ணில் ஏதோ ஒரு அடிப்படையில் குடியேற்றப்பட்டு விட்டனர். அது மிகவும் அவசியமானதும் அவர்களது அடிப்படை உரிமையுமாகும். ஆனால், 27 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களின் கண்களுக்கு முன்னே புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் கணிசமானோர் இன்னும் மீள் குடியேற்றப்படவில்லை.

நடைமுறைச் சிக்கல்கள்
வடபுல முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துவதில் இயற்கையாகவே பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், அதற்குப் புறம்பாக செயற்கையாக பல்வேறு தடங்கல்கள் ஏற்படுத்தப்படுவதும், எதிர்ப்பு காட்டப்படுவதுமே மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றது. வடக்கையும், கிழக்கையும் இணைக்க வேண்டுமென கோருபவர்கள் தங்களது எல்லைக்குள் முஸ்லிம்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்காதது முரண்நகையாகவே தெரிகின்றது.
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கும், அதன்பிறகான அநேக சம்பவங்களுக்கும் அப்பாவித் தமிழர்கள் பொறுப்பல்ல. மறுபக்கத்தில், முஸ்லிம்கள் பக்கத்திலும் வடக்கு, கிழக்கில் சில தவறுகள் இடம்பெற்றிருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேவேளை, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது சகோதர வாஞ்சையுள்ள தமிழ் மக்களும், ஓரிரு அரசியல்வாதிகளும், முற்போக்கு எழுத்தாளர்களும் அவ்வெளியேற்றத்தை பகிரங்கமாக எதிர்த்தனர். குறிப்பாக, “முஸ்லிம்கள் தனது சொந்த இடத்திற்கு திரும்பும் வரை நான் எனது தாய்மண்ணுக்கு திரும்பமாட்டேன்” என்று அறிவித்த மு.சிவசிதம்பரம், கடைசி மூச்சுவரையும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தமை நன்றியுடன் நினைவு கூரத்தக்கது.
இவ்வாறு இடம்பெயர்ந்த வடபுல முஸ்லிம் குடும்பங்களில் இதுவரை சுமார் 15 ஆயிரம் குடும்பங்களே மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். வடக்கின் பல பகுதிகளிலும் மீள்குடியேறுவதற்காக 25019 முஸ்லிம் குடும்பங்களும் 10083 சிங்களக் குடும்பங்களும் தமது பெயர்களை பதிவு செய்திருக்கின்றனர். இவர்களில் ஒரு பகுதியினரை குழாமுறிப்பு பிரதேசத்தில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து, அதற்கு எதிர்ப்பும் கிளம்பியிருக்கின்றது.
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் குழாமுறிப்பு பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்டளவான குடும்பங்களை குடியேற்றுவதற்கு மீள்குடியேற்ற விஷேட செயலணியின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் றிசாட் பதியுதீன் இதில் கூடிய கரிசனை எடுத்துச் செயற்படுகின்றார்.

இந்நிலையில், அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அண்மையில் இடம்பெற்ற வேளையில் குழாமுறிப்பு மீள்குடியேற்றம் பற்றிய கருத்துக்களால்; அமளிதுமளி ஏற்பட்டது. “தமிழர்களை விடுத்து முஸ்லிம்கள், சிங்களவர்களை குடியேற்றுவதற்காக மட்டும் ஏன் இப்புதிய செயலணி உருவாக்கப்பட்டுள்ளது” என்று தமிழ் தரப்பினர் இதன்போது கேள்வி எழுப்பியதாக அறியமுடிகின்றது.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் றிசாட், “இந்த செயலணியில் தமிழர்களுக்கும் இடம் வேண்டுமென்றால் ஜனாதிபதியிடம் கதைத்து அதைப் பெறுங்கள். தமிழர்கள் ஒரு தொகுதியினர் மீள் குடியேற்றப்பட வேண்டியுள்ளனர். அதற்கு நான் உதவிகளைச் செய்கின்றேன். அதற்காக குழாமுறிப்பு குடியேற்றத்தை இழுத்தடிக்க வேண்டாம்” என கோரியதாகவும் அங்கிருந்த ஒருவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, வவுனியாவுக்கு விஜயம் செய்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் இனநல்லிணக்கத்தை விரும்புபவராக தன்னைக்காட்டிக் கொள்ளும் தோரணையிலும், மீள்குடியேற்ற விடயத்தில் அமைச்சர் றிசாட் இனஉறவு பாதிக்கும் விதத்தில் நடந்து கொள்கின்றார் என்ற தொனியிலும் கருத்துத் தெரிவித்திருந்திருந்ததாக கூறப்படுகின்றது. அவ்வாறு சொன்னது உண்மையாயின், அதனை எதிர்ப்பு அரசியல் கருத்தாகவே கருத முடியும்.

எதிர்ப்பு பேரணி
இந்தப் பின்னணியில், சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அமைப்பினால் முல்லைத்தீவில் எதிர்ப்பு பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. ‘திட்டமிட்டு காடுகளை அழித்தும் தமது (தமிழர்களின்) இனப்பரம்பலை சிதைக்கும் விதத்திலும் மேற்கொள்ளப்படும் குடியேற்றத்திற்கு இந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் எதிர்ப்பு’ தெரிவித்துள்ளனர். இரு தினங்களுக்குப் பின்னர், மீளக்குடியேற உத்தேசிக்கப்பட்டுள்ள வனத்தின் ஒரு பகுதிக்கு விஷமிகள் தீ வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தாம் எதிர்ப்பில்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ள போதிலும், வடக்கின் நிர்வாக கட்டமைப்பிலும் வேறு பல வழிகளிலும் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடுப்பதற்கு ஏற்படுத்தப்படும் தடைக்கும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொடர்பிருப்பதாக அனுமானிப்பது கடினமானதன்று. வடக்கில் எத்தனையோ காடுகளை அழித்து, சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஏற்படாத அக்கறை இப்போது முஸ்லிம்கள் மீள்குடியேறும் போது ஏற்பட்டிருப்பதே இதற்கு சான்றாக அமையலாம்.

தமிழர்களின் தார்மீகம்
மீள்குடியேற்றச் செயலணியின் நடவடிக்கையிலோ, அமைச்சர் றிசாட் போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகளின் முன்னெடுப்புக்களிலோ தவறுகள் இருக்கலாம். அதனுடன் வடக்கு மாகாண சபையும் தமிழ் மக்களும் உடன்படாதிருக்கலாம். ஆனால், அவ்வாறான காரணங்களுக்காக வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடை போடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும். தமது நிலத்திற்காக போராடுகின்ற தமிழ் சமூகம் இன்னுமொரு சமூகத்தின் தாய்மண்ணை மறுதலிப்பதாக இது அமைந்துவிடும்.

இங்கு ஒரு விடயத்தை நன்கு கவனிக்க வேண்டும். அதாவது, தமிழர்கள் ஆதரித்த விடுதலைப் போராட்டத்திற்காகவே முஸ்லிம்கள் வடக்கில் இருந்து புலிகளால் வெளியேற்றப்பட்டனர். புலிகள் அமைப்பு கவலை வெளியிட்ட ஒரு சில விடயங்களுள் இதுவும் ஒன்று. “உரிய காலத்தில் முஸ்லிம்களுக்கு மீள்குடியேற அழைப்பு விடுப்போம்” என்று அவ்வமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் பகிரங்கமாக கூறியிருந்தார்.
எனவே, தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன செய்தாலும் வட மாகாண சபையோ தமிழ் தேசியக் கூட்டமைப்போ என்ன நிலைப்பாட்டை எடுத்தாலும், வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் யார் என்ன அரசியல் செய்தாலும், அங்குள்ள தமிழ் சகோதரர்களுக்கு இவ்விடயத்தில் தலையாய தார்மீகப் பொறுப்பிருக்கின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.
முஸ்லிம்கள் தனிநாடு தேவைப்படவில்லை. ஆனால் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு முழுப் பங்களிப்பையும் வழங்கினார்கள். தமிழ் சகோதரர்களுக்கு ஆபத்தான நேரங்களில் அடைக்கலத்தையும் உதவி ஒத்தாசையையும் வழங்கியவர்கள் முஸ்லிம்களே. அப்படியிருந்தும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் விடயத்தில் விடுதலைப் போராட்டம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்ற கவலை முஸ்லிம்களுக்கு இருக்கின்றது.

எனவே, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற தமிழர்கள், சிவில் அமைப்புக்கள் அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் கடந்தகால தவறுகளுக்கு பரிகாரம் தேட வேண்டும். அதேபோன்று முஸ்லிம்கள் வடக்கில் மீளக் குடியேறுவதை தமிழ் தரப்பு விரும்புமாக இருந்தால், அதனை றிசாட் பதியுதீனோ அல்லது வேறு முஸ்லிம் அரசியல்வாதியோ அதைச் செய்ய வேண்டியதில்லை. தமிழ் அரசியல்வாதிகளே அதைச் செய்திருக்க முடியும்.
வடமாகாணம் என்பது முஸ்லிம்களுக்கும் தாய் மண்ணே. எனவே, வட மாகாண சபையே தமது மக்களை தானாக முன்வந்து மீள அழைத்து, முறைப்படி குடியேற்ற வேண்டும். முஸ்லிம்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களான எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகள் அதற்காக முன்னிற்க வேண்டும்.
வடக்கில் முஸ்லிம்களை மீளக் குடியேற்றாமல், தமிழ் – முஸ்லிம் உறவு பற்றி பேசிக் கொண்டிருப்பதால் மட்டும் பயனேதும் கிடையாது.
– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here