புதிய நிருவாக சபைக்கும் கல்குடா மஜ்லிஸ் ஷூராவுக்கும் சம்பந்தமில்லை-அஷ்ஷெய்க் ஹாமி ஷதக்கா -வீடியோ

0
209

Untitled-1ஊடகப்பிரிவு-கல்குடா மஜ்லிஸ் ஷூரா

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட புதிய நிருவாக சபைக்கும் கல்குடா மஜ்லிஸ் ஷூராவுக்கும் சம்பந்தமில்லை என்பதுடன், கல்குடா மஜ்லிஸ் ஷூராவில் அங்கம் வகித்த ஒரு சிலர் தங்களது தனிப்பட்ட நலனை அடைந்து கொள்வதற்காக சமூகத்திலுள்ள ஒரு சில நற்பிரஜைகளை தவறாக வழி நாடாத்தி, கல்குடா  மஜ்லிஸ் ஷூராவுக்கான நிருவாக சபையொன்றை புதிதாக உருவாக்கியுள்ளனர் என்பதை பொறுப்பு வாய்ந்த, மக்கள் ஆதரவினைப் பெற்ற கல்குடா ஷூரா சபையின் தலைவர் என்ற வகையில் கல்குடா வாழ் பொது மக்களுக்கும் கல்விச்சமூகத்துக்கும் தெரிவிக்கொள்கின்றேன் என கல்குடா மஜ்லிஸ் ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஹாமி ஷதக்கா அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கல்குடா மக்களின் பூரண ஆதரவு பெற்ற அங்கீகாரமுள்ள நிருவாகமொன்று இருக்கின்ற நிலையில், கல்குடா மஜ்லிஸ் ஷூராவில் அங்கம் பெற்ற ஒரு சிலர் தமது தனிப்பட்ட நலனை அடைந்து கொள்ளும் நோக்கிலும், சிலரால் எதிர்பார்க்கப்படும் அடைவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் நிருவாகத்திலுள்ள எவருக்கும் அறியப்படுத்தாது, தங்களுக்கு ஒத்தியங்கக்கூடிய ஒரு சிலரை அழைத்து குறித்த புதிய நிருவாகத்தெரிவை செய்துள்ளனர்.

உண்மையில் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு இதன் உண்மைத்தன்மை அறியாத நிலையில் கலந்து கொண்டுள்ளதுடன், நிருவாகத் தெரிவிலும் பங்கு கொண்டுள்ளனர் எனத்தெரிய வருகின்றது. இதனூடாக கட்டுக்கோப்புடன் இருக்கும் ஷூராவினையும் மக்களையும் குழப்பி சிலர் குளிர்காய எத்தனிப்பதை இதனூடே கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

கல்குடா மஜ்லிஸ் ஷூராவைப் பொறுத்த வரை கடந்த காலங்களில் சிதறுண்டு கிடந்த மக்களை ஒன்றிணைக்கும் பணியை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வெற்றியும் கண்டுள்ளதுடன், புதிதாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தனிப்பட்ட நபர்களால் முன்னெடுக்கப்படும் எந்தச்செயற்பாடுகளுக்கும் கல்குடா மஜ்லிஸ் ஷூரா பொறுப்பாகமாட்டாது என்பதை தெட்டத்தெளிவாக மக்கள் மன்றத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரம், கல்குடா மக்களின் ஏகோபித்த அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு சபையாக கல்குடா மஜ்லிஸ் ஷூரா கடந்த காலங்கள் போன்று செயற்படும்.

கல்குடா சமூகத்தை தவறான வழியில் நடாத்தும் நோக்கில் குறிப்பிட்ட ஒரு சிலர் சேர்ந்து தெரிவு செய்துள்ள புதிய நிர்வாகத்திற்கும் எமக்கும் சம்பந்தமுமில்லை. அத்தோடு, சமூக ஒற்றுமையை இல்லாதொழிக்கும் நோக்கில் செயற்படும் இவ்வாறனவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கல்குடா மக்களும் கற்ற சமூகமும் விழிப்படைய வேண்டும்.

இல்லாதவிடத்து, இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெற்று ஒற்றுமையாக இருக்கின்ற எமது பிரதேசம் சீரழிந்து  சின்னாபின்னமாகி, பலகீனமடைந்து போகின்ற நிலையேற்பட வாய்ப்புள்ளதை சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்பிரதேசத்தில் கல்குடா பிரதேச முஸ்லிம்களை மையப்படுத்தி கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் செயற்பாடுள்ள ஒரு நிருவாக சபை இருக்கும் நிலையில், இவ்வாறான ஒரு சபை மீள உருவாக்கப்படுவதற்கான தேவை என்னவென்பதை சகலரும் ஒரு கணம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

குறிப்பிட்டுச் சொல்லப்போனால் தனிப்பட்ட நலனே தவிர வேறு எதுவும் கிடையாது எனலாம். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் படித்த ஒரு சமூகம் பிழையாக வழி வழி நடாத்தப்பட்டுள்ளதுடன், பாரிய பிளவொன்றை ஏற்படுத்தி அதில் குளிர்காயவும் தனிப்பட்ட நலனை அடைந்து கொள்ளவும் ஒரு சிலர் முனைகின்றமை தெளிவாகின்றது.

அதே நேரம் இதன் பின்னணியில் எவர் உள்ளனர்? இதன் பிளவினால் எதிர்பார்க்கப்படும் நன்மைகள் என்னவென்பது தொடர்பிலும் தெளிவொன்றை இப்பிரதேச மக்களுக்கு வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டுள்ளமையை உணர்த்தும் நோக்கிலேயே இந்தச்சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

கல்குடா மஜ்லிஸ் ஷூரா இப்பிரதேசத்தில் பல்வேறு சமூகப்பணிகளை கடந்த காலங்களில் செய்து வந்துள்ளதுடன், இப்பிரதேசம் எதிர்நோக்கிய பாரிய குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொள்வதில் பாரிய வெற்றியையும் அதனூடாக இப்பிரதேசத்திற்கு நன்மைகளையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

அத்துடன், பிரதேச எல்லை கடந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் போதும், அளுத்கம-பேருவளை இனக்கலவரங்களின் போதும் பாரிய தொகை நிதியினைச் சேகரித்து உதவியுள்ளதுடன், கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் இவ்வாறான செயற்பாடுகளில் மக்களினதும் இப்பிரதேச சமூக, சமய அமைப்புக்களினதும் ஒத்துழைப்பு எமக்கு இருந்துள்ளமை கல்குடா சமூகத்தின் ஆதர பெற்ற ஒரேயொரு அமைப்பு கல்குடா மஜ்லிஸ் ஷூரா என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், எமது சகல தரப்பு மக்களின் ஆதரவினையும் பெற்ற ஒரு அமைப்பாக மென்மேலும் கல்குடா மஜ்லிஸ் ஷூரா சபை வளர்ந்து விடக்கூடாது எனும் பாரிய சதித்திட்டங்களின் பின்னணியிலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகினறன.

இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள் தனிப்பட்ட நலன்சார்ந்து சுயநலமாகச் சிந்திக்காது, ஒட்டு மொத்த கல்குடா மக்களின் நலன் தொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டும். அத்துடன், இவ்வாறான கட்டுக்கோப்பான அமைப்புக்களை மலினப்படுத்தி எமது மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் மலினப்பட்டுப் போகின்ற சமூகமாக நாமும் சமூக அமைப்பாக கல்குடா மஜ்லிஸ் ஷூரா சபையும் எதிர்காலத்தில் அமைந்து விடக்கூடாது என்பதுடன், அதற்கு எமக்குள் இருப்போரே காரணகர்த்தாக்களாக இருந்து விடவும் கூடாது. அதே நேரம், இவ்வாறான சமூக விரோதச்செயற்பாடுகளை மேற்கொள்வோர் தொடர்பிலும் எமக்கு விழுப்புணர்வு தேவையாகவுள்ளது.

ஆகவே, இவ்வாறான செயற்பாடுகளை கைவிட்டு ஒற்றுமையூடாக எமது சமூகமும் பிரதேசமும் அடைந்து வேண்டிய பல்லாயிரம் தேவைப்பாடுகள், உரிமைகளை வென்றெடுக்கத் தேவையான செயற்பாடுகளை சகல தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க முன்வர வேண்டும் .

அத்துடன், கல்குடா மஜ்லிஸ் ஷூரா (Majlisussoorah Kalkudah Majlisussoorah) எனும் முகநூல் முகவரியில் (https://www.facebook.com/majlisussoorahkalkudah) வெளியிடப்படும் எந்த செய்திக்கு நாம் பொறுப்பல்ல என்பதுடன், majlisussoorahkalkudah@gmail.com  எனும் மின்னஞ்சலூடாகப் பகிரப்படும் தகவல்கள் தொடர்பிலும் மேலதிகத் தகவல்கள் தொடர்பிலும் எம்மோடு தொடர்பு கொண்டு ஊர்ஜிதப்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

அதே நேரம், கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் சிறப்பாக செயற்பாடுகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கும் நோக்கில் நிருவாகக் கட்டமைப்பை புனரமைப்புச் செய்வதற்கான திட்டங்களையும் யாப்பு ரீதியான திருத்தங்களையும் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், சமூகத்தின் மீது பற்றுள்ளோரையும் கல்வியியலாளர்களையும் உள்வாங்கத் தேவையான முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டு வருவதாகவும் எதிர்காலத்தில் அரசியல் கடந்து சமூகத்தின் நன்மையை கருத்திற்கொண்டு செயற்படவுள்ளோம் என கல்குடா மஜ்லிஸ் ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஹாமி ஷதக்கா அவர்கள் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

இன்றைய சந்திப்பில் கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் தலைவர் அஷ்ஷெய்க் ஹாமி ஷதக்கா உட்பட மஜ்லிஸ் ஷூராவின் உயர் சபை அங்கத்தவர்கள், நிருவாக சபை அங்கத்தவர்கள், உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Untitled-1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here