தாயிபில் நபியும்: நமதூரின் அழைப்பாளர்களும்

0
555

dscscscscscsM.I. Muhammadh Safshath, University of Moratuwa
இஸ்லாத்தை அதன் வடிவில் நபி வழியில் பாரெங்கும் பறைசாற்ற வேண்டியது திருத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயத்தினரான எம்மீதுள்ள மிகப்பெரும் கடமையென்பதில் மறுகருத்தில்லை. நபி வழியில் அழைப்புப்பணி செய்ய விழையும் நாம் அதன் ஒழுங்கில் பாங்கில் அனைத்திலும் நபி வழியைக் கைக்கொள்வது மிகக்கட்டாயமாகிறது.

முற்போக்கு வாதமும் தீவிரவாதமும் கொண்டு நாம் நபி வழியை நிலை நாட்ட எத்தனிப்பின் நடைமுறை காண விழைவது நபி வழியேயாயினும், நடைமுறைப்படுத்தப்படும் விதம் முற்றிலும் நபி வழிக்கு முரணானது என்பதில் ஐயமென்ன? அது தரக்கூடிய பயன் தான் என்ன? அழைப்புப்பணி என்றும் நபி வழி அழைப்பு என்றும் கூறிக்கொள்வதில் பயனில்லை. எமது செயல்களில் நபி வழி பிரதிபலிக்க வேண்டும். அவர் காட்டிய முன்மாதிரிகள் பிரதிபலிக்க வேண்டும்.

ஆனால், இன்றைய நமது சமூகத்தில் அழைப்புப்பணியின் நிலை விளைவாக்கியுள்ள நிலைகளச் சற்று சிந்தித்துப் பாருங்கள். தூய்மைவாதத்தின் அடிகோலிகளாக சிலர், அமைப்பு வெறியின் அடித்தளங்களாக சிலர், சில கருத்து வேறுபாடுகளையும் காபிர்கள் எனும் அறிவிப்புச்செய்து கொண்டு சிலர், பொது விடயங்களில் மக்கள் சமூகத்தை விலக்கிக்கொண்டு தனித்தனி குழுக்களாக சிலர், தனி மனித வழிபாட்டில் சிலர், தனி அமைப்பு வழிபாட்டில் சிலர், இல்லாததை இஸ்லாமாக்கிக்கொண்டு சிலர், பல கருத்தில் நடுநிலை பேண முடியாத திணித்தலில் சிலர், காழ்ப்புணர்வு காரணமாக தெளிவான நபி வழியையும் ஏற்க மறுக்கும் சிலர், மார்க்கத்தகுதி அடிப்படையில் வகிக்க வேண்டிய பொறுப்புகளில் அதில் கேள்விக்குறியான சிலர்.

விளைவு அழைப்புப்பணிகள் பொலிஸாரின் மத்தியஸ்தம் நாடுகின்றன. வெட்கித்தலை குனிய வேண்டிய செய்தியை நீதியை நாடுகிறோம் என அதிலும் பிரபலம் தேடுகிறோம். இது தான் நபிகளாரின் வழிமுறையை நிலை நாட்டும் முன்மாதிரியா? (வெட்கித்துக் கொள்வோம்)

கி.பி. 619 இல் அது ஒரு கோடை காலம் ஒட்டகம் ஏற்பாடு செய்வதில் சிரமமிருந்தது. எனவே, கால்நடையாகவே நபிகளாரின் பயணம் தொடர்கிறது. பிறருக்கு சந்தேகம் எழுவதைத் தவிர்த்தாக வேண்டும். எனவே, முக்கிய தோழர்களும் உடன் அழைக்கப்படவில்லை. இளம் நபித்தோழரும், வளர்ப்பு மகனுமான ஸைத் இப்னு ஹாரிதாவுடன் மக்காவுக்கு கிழக்கில் 60 மைல் தொலைவில் அமைந்திருந்த கோடை வாசஸ்தலமான தாயிப் நகரத்தை நோக்கிய அழைப்புப்பணியின் பயணமது.

தாயிபின் அதிகாரம் பனூ மாலிக், பனூ அம்ர் என்ற இரண்டு வம்சங்களுக்கிடையே வலம் வந்தது. இதில் பனூ மாலிக்குகள் ஹிஜாஸீலிருந்த ஹவாஸின் குலத்தாரோடு நட்பு வைத்திருந்தனர். பனூ அம்ருகள் மக்காவின் குறைஷிகளோடு நட்பு வைத்திருந்தனர். பெருமானாரும் குறைஷிக் குலத்தைச்சார்ந்தவர் என்பதால், நபி (ஸல்) அவர்கள் பனூ அம்ரு குடும்பத்தைச்சேர்ந்த சகோதர்ர்களான அப்து யாலைல், மஸ்வூத் மற்றும் ஹபீப் ஆகிய மூவரையும் சந்தித்து ஏகத்துவத்தை எத்தி வைக்கின்றார்கள். அடைக்கலக்கோரிக்கை முன்வைக்கிறார்கள்.

கோரிக்கையை ஏற்க மறுத்தனர். எள்ளி நகையாடினர். சிறுவர்களை ஏவி கல் மாரி பொழிந்தனர். சுமார் 5 கிலோ மீட்டர் வரை அவர்கள் பெருமானாரைப் பின் தொடர்ந்து தாக்கினார்கள். பெருமானாரின் மேனியெங்கும் இரத்த விளாரானது. கால் வழியாக இரத்தம் வழிந்து காலில் அணிந்திருந்த தோலால் செய்யப்பட்ட மோசா சிவப்பானது.

பெருமானார் (ஸல்) அவர்கள் மயக்கமடையும் நிலைக்கு ஆளானார்கள். நடைபெற்ற கல் வீச்சுக்கள் ஏச்சுக்களின் நடுவே நபி (ஸல்) பெருமானாரின் நாவு “இவர்கள் அறியாத மக்கள்“ என்று முனகிய வண்ணமிருந்தது. ஊருக்கு வெளியிலிருந்த ஒரு திராட்சைத் தோட்டத்தில் புகலிடம் தேடிச்சென்றார். மேனியெங்கும் குருதி மயமான அந்த நிலையிலும் நபிகளார் தமது இயலாமைக் குறித்தும், இறைவனிடம் அடைக்கடலம் தேடியும், பிரார்த்தித்தவாறே இருந்தார்.

திராட்சைத்தோட்டம் ராபிஆவின் மகன்களான உத்பா மற்றும் ஷைபா என்ற இரண்டு சகோதரர்களுக்குச் சொந்தமானது. நபிகளாரின் நிலையைக்கண்டு இரக்கம் கொண்ட அவர்கள், இளைப்பாற அனுமதித்தார்கள். கூடவே, தட்டு நிறைய திராட்சைக்கனிகளை தங்களின் பணியாள், கிறித்துவ சமயத்தைச்சேர்ந்த அத்தாஸிடம் கொடுத்தனுப்பினார்கள். அத்தாஸிடம் திராட்சைக் கனிகளைப் பெற்றுக் கொண்ட நபிகளார், “இறைவனின் திருநாமத்தால்” என்று பொருள்படும் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!” என்று மொழிந்து உண்ணலானார்கள்.

அதுவரையிலும், அந்தப்பகுதியில் கேட்காத இந்த சொல்லாடல், வந்தவருக்கு வியப்பளித்தது. அதை, நபிகளாரிடம் வெளிப்படுத்தவும் செய்தார். கிறித்துவ சமயத்தைச்சேர்ந்த அத்தாஸ் ஈராக்கைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதை நபிகளார் தெரிந்து கொண்டார். மலர்ந்த முகத்துடன் நபிகளார், “எனதருமை சகோதரர் யூனுஸ் (Jonah) அவர்களின் நகரத்தைச் சேர்ந்தவரா நீங்கள்?” என்று அன்புடன் விசாரிக்கவும் செய்தார்.

“யூனுஸை உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று பணியாள் வியப்புடன் கேட்க, “அத்தாஸ், யூனுஸ் என்னைப்போலவே இறைவனின் தூதராவார்!” என்று நபிகளார் பதிலளித்தார். உண்மையின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட அத்தாஸ் உடனே பணிந்து நபிகளாரின் தலையிலும், கரத்திலும், பாதத்திலும் முத்தமிட்டார்.

இந்தச்சம்பவத்தை உத்பாவும், ஷைபாவும் பார்த்தவாறே இருந்தார்கள். “இவர் நமது பணியாளை தனது பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் அதோ… பார்..!” என்றார் ஒருவர் மற்றொருவரிடம். அத்தாஸ் திரும்பி வந்ததும், “அவர் முன் பணிவதும், கை,கால்களில் முத்தமிடுவதும் உனக்கு அவமானமாக இல்லையா?” என்று கண்டிக்கவும் செய்தார்கள். “இந்த உலகில் இவரை விட எனக்கு முக்கியமான நபர் வேறு யாருமில்லை. அவர் என்னிடம் சொன்னது, ஒரு இறைத்தூதர் அன்றி வேறு யாராலும் சொல்ல முடியாதது!” என்று அத்தாஸ் உறுதியுடன் சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள் அந்தத்தோட்டத்திலிருந்து வெளியேறி மிகவும் கவலையுடன் உள்ளம் உடைந்தவர்களாக மக்கா நோக்கி திரும்பும் வழியில் “கர்னுல் மனாஜில்” என்ற இடத்தை அடைந்த போது, அல்லாஹ் அவர்களிடம் ஜிப்ரீலையும், (மலைகளின் வானவர்) மலக்குல் ஜிபாலையும் அனுப்பினான். மலக்குல் ஜிபால் தாயிஃப்வாசிகளாகிய இம்மக்களை இரு மலைகளையும் ஒன்று சேர்த்து நசுக்கி அழித்து விடவா’? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.

ஆயிஷா (ரழி) இச்சம்பவத்தின் விவரத்தைக் கூறுகின்றார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘உஹுத் போரை விடக்கடுமையான நாள் எதுவும் உங்களது வாழ்க்கையில் வந்துள்ளதா?’ என்று கேட்டேன். அதற்கு ‘உனது கூட்டத்தாரின் மூலம் நான் பல துன்பங்களைச் சந்தித்துள்ளேன். அவற்றில் நான் சந்தித்த துன்பங்களில் மிகக்கடுமையானது “யவ்முல் அகபா” என்ற தினத்தில் எனக்கு ஏற்பட்ட வேதனையேயாகும். நான் அப்து யாலிலின் மகனிடம் என்னை அறிமுகப்படுத்தினேன்.

ஆனால், அவன் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் கவலையுடன் திரும்ப மக்காவை நோக்கிப் பயணமாகி “கர்னுல் மனாஜில்” என்ற பெயருள்ள “கர்னு ஸஆலிப்” என்ற இடத்தில் வந்து தங்கிய போது தான், எனக்கு முழுமையான நினைவே திரும்பியது. நான் தலையைத் தூக்கிப் பார்த்த போது, என் தலைக்கு மேல் ஒரு மேகம் நிழலிட்டுக் கொண்டிருந்தது. அந்த மேகத்தில் ஜிப்ரீல் இருந்தார். அவர் என்னை அழைத்து “நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் உங்களது கூட்டத்தாரிடம் பேசியதையும் அவர்கள் உங்களுக்குக் கூறிய பதிலையும் கேட்டுக் கொண்டான்.

இம்மக்கள் விஷயத்தில் நீங்கள் விரும்பியதை மலக்குல் ஜிபாலுக்கு ஏவ வேண்டுமென்பதற்காக அவரை உங்களிடம் அனுப்பி இருக்கின்றான்” என்று கூறினார். மலக்குல் ஜிபால் என்னை அழைத்து எனக்கு ஸலாம் கூறி ‘முஹம்மதே! ஜிப்ரீல் கூறியவாறே அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளான். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? நீங்கள் விரும்பினால், இவர்களை இரண்டு மலைகளையும் கொண்டு நசுக்கி விடுகிறேன்’ என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) ‘அதை ஒருக்காலும் நான் விரும்பமாட்டேன். மாறாக, அவர்களிலிருந்து அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு இணை வைக்காதவர்களை அவன் உருவாக்குவான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்’ என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு சமூகத்தின் மீதான நபியின் அழைப்பு, பத்து நாட்கள் தங்கி மேற்கொண்ட தியாகம் வலிகளையும் வேதனைகளையும் கருவாக்கி கொடுமைகளை அச்சமூகம் கட்டவிழ்த்தும் பொறுமையை கைக்கொண்ட அம்மக்கள் அழிக்கப்படாதிருக்க அவர்கள் நலம் விரும்பிய நபிகளாரின் இறைஞ்சுதல் தனது ஆற்றல் குறைவையும் திறன் குறைவையும் முன்னிறுத்தி அவனிடத்தில் இறைஞ்சுவதாய் தான் இருந்தது.

எல்லாம் வல்ல இறைவனால் தேர்ந்தெடுத்த அவ்வுத்தம தூதர் தனது அழைப்பின் குறைபாடோ என்று அஞ்சி இறைஞ்சுகிறார் என்றால் நாமிருக்க வேண்டிய நிலையையும் இன்று நாம் உள்ள நிலையையும் சற்றே சிந்தியுங்கள். இதோ அத்தருணத்தில் நபிகளார் செய்த பிரார்த்தனை:

‘அல்லாஹ்வே! எனது ஆற்றல் குறைவையும் எனது திறமைக்குறைவையும் மனிதர்களிடம் நான் மதிப்பின்றி இருப்பதையும் உன்னிடமே முறையிடுகிறேன். கருணையாளர்களிலெல்லாம் மிகப்பெரியகருணையாளனே! நீ தான் எளியோர்களைக் காப்பவன் நீ தான் என்னைக் காப்பவன். நீ என்னை யாரிடம் ஒப்படைக்கிறாய்? என்னைக்கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடமா? அல்லது என்னுடைய காயத்தை நீ உரிமையாக்கிக் கொடுத்திடும் பகைவனிடமா? உனக்கு என் மீது கோபமில்லையானால் (இந்த கஷ்டங்களையெல்லாம்) நான் பொருட்படுத்தவே மாட்டேன்.

எனினும், நீ வழங்கும் சுகத்தையே நான் எதிர்பார்க்கிறேன். அதுவே எனக்கு மிக விசாலமானது. உனது திருமுகத்தின் ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசமடைந்தன. இம்மை மறுமையின் காரியங்கள் சீர்பெற்றன. அத்தகைய உனது திருமுகத்தின் ஒளியின் பொருட்டால் உனது கோபம் என் மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது அதிருப்தி என் மீது இறங்குவதிலிருந்தும் நான் பாதுகாவல் கோருகிறேன். அல்லாஹ்வே! நீயே பொருத்தத்திற்குரியவன். நீ பொருந்திக் கொள்ளும் வரை உன் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வே! பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருள் இல்லாமல் முடியாது.’

நபியிலும் சிறப்பாகவா இஸ்லாமிய அழைப்பு எம்மால் சாத்தியம்? சிந்தித்துப்பாருங்கள்!

இது தான் நபியின் வழிமுறையாக நான் அறிந்தது. சமூகத்தை நலவில் வழி நடத்த வேண்டிய மார்க்க அறிஞர்கள் எனக்கூறிக்கொள்ளும் பலரும் இந்த முன்மாதிரிகளை தர மறுப்பது ஏன்? பொலிஸ் நிலையத்தில் நிற்பதும், அமைப்பிலிருந்து நீங்கிய பின் நபர்களில் பாலியல் குற்றச்சாட்டு எழுவதும்! சமூக விடயங்களிலும் குழுக்களாவதும்! தெளிவான நபி வழி எடுத்துக்கூறப்படினும் பிடிவாதமும் காழ்ப்புணர்வும் கொண்டு ஏற்க மறுப்பதும், பள்ளிவாயல்களின் கண்ணியம் மறந்து செயல்படுவதும் தான் நாம் அடைந்துள்ள முன்னேற்றங்கள்.

நாம் நமக்குள்ளே வெட்கித்துக்கொள்வோம். நபி வழியிலும் நாம் எத்தனை தொலைவு என்பதை உணர்ந்து கொள்வோம். நபி வழியை நபி காட்டி தந்த நபி வழியில் நிலை நாட்டுவோம். தெளிவான நபி வழி எடுத்துக்காட்டப்படின் சகல காழ்ப்புணர்வுகளும் கலைந்து, அதை வாழ்வில் ஏற்க முன்வருவோம். சிதறிக்கிடந்து பலமமில்லை. அல்லாஹ்வின் கட்டளையில் ஒன்றிணைவோம் சகோதரர்களே!

“ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத்தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” {சூறா அல் அஸ்ர் 103:3}

(உசாத்துணை: அர்ரஹீக் அல்மஃக்தூம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here