மண்ணை நேசித்த அமைச்சர் மர்ஹூம் மன்சூர்-எம்.எம்.ஏ.ஸமட் (சிறப்புக்கட்டுரை)

0
282

dvdvdevevஉலகம் தோற்றியது முதல் இன்று வரை கோடான கோடி மக்கள் வாழ்ந்து மறைந்து விட்டனர். அவ்வாறு மண்ணில்  உதித்தவர்கள் எல்லோரும் சாதனை புரியவில்லை. சேவை செய்யவில்லை. சாதிப்பதற்கும் சேவை புரிவதற்கும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கிடைத்தவர்களும் கூட அவற்றை முறையாகப் பயன்படுத்தவில்லை.

ஆனால், சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் காலத்தோடு கச்சிதமாகப் பயன்படுத்திய ஒரு சிலரே தான் சாதனையாளர்களாகவும் சேவையாளர்களாகவும் அன்றும் இன்றும் என்றும் போற்றப்படுகிறார்கள். பாராட்டப்படுகிறார்கள். கௌரவமளிக்கப்படுகிறார்கள். சாதனையாளர்களும் சேவையாளர்களும் மண்ணில் வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டும். பாராட்டப்பட வேண்டும். அவர்களின் சேவையை அவர்கள் பிறந்து வாழ்ந்த மண் ஞாபகமூட்டும் போது, அந்த மண்ணின் மக்கள் ஏன் அச்சேவகர்களைப் பாராட்டக்கூடாது? ஏன் கௌரவிக்க முடியாது என்ற கேள்வி எழுவதில் நியாயம் தெரிகிறது.

அந்த நியாயத்தின் ஓர் ஒளியாய் விளங்குவது தான், இந்த கல்முனைத்தொகுதி மண்ணை நேசித்து, இம்மண்ணுக்காக தனது அரசியல் அதிகாரத்தினூடாகவும் செல்வாக்கினூடாகவும் பல்வேறு துறைகளில் சேவை புரிந்த பண்புள்ள, கபடமில்லாத, கரைபடியாத, பணத்துக்குச் சோரம் போகாத இந்த மண்ணின் சேவகனாக விளங்கிய முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சரும் கல்முனைத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் குவைத் நாட்டினது தூதுவருமான சிரேஷ்ட சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் அவர்களை நேசித்து, மருதமுனை மக்கள் பாராட்டு விழா எடுத்திருப்பதாகும்.

மருதமுனை மண் துறைசார் நிபுணர்களையும் வெற்றி கொள்ளும் மாணவச்செல்வங்களையும் மண்ணுக்கு பெருமை தேடித்தரும் மாண்புள்ளோரையும் வாழ்த்திப்பாராட்டும் நற்பண்பைக் கொண்டுள்ளது. இந்த மனித நேயப்பணியானது, எதிர்காலச் சந்ததியினரும் அவரவர் துறையில் சாதனைகளையும் சேவைளையும் புரிவதற்கு ஊக்கியாகச் செயற்படுமென்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.

மனிதனை மனிதன் பாராட்ட வேண்டும். அவனது சேவைக்கு நன்றி செலுத்த வேண்டும். ஒரு மனிதன் செய்த சேவைக்குப் பாரட்டுத் தெரிவிப்பதனாலே நன்றி செலுத்துவதனாலோ நம்மிலிருந்து எதுவும் பறிபோய் விடாது. மாறாக, அது மற்றவர்களையும் நற்பணி செய்யத் தூண்டும். ஊக்கப்படுத்தும். நேர்சிந்தனைகளோடு எதையும் சிந்திக்கச் செய்யும்.

தன்னுடைய முயற்சியும் உழைப்பும் சேவையும் அங்கிகரிக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தை உள்ளத்தில் ஏற்படுத்தும். நம்பிக்கையை வளர்க்கும். இன்னும் நன்கு செயலாற்ற வேண்டுமென்ற வேட்கையை உள்ளத்தில் உருவாக்கும். இது உளவியல் கூறும் யதார்த்தமாகும்.

ஒரு மனிதன் பாராட்டப்படுவதற்கு அவன் புரிந்த பணிகள், சாதனைகள் அவனுக்கு மாத்திரமின்றி, அம்மனிதன் சார் சமூகத்திற்கும் பயனுடையதாக இருந்திருக்க வேண்டும். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்கள் வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டியவர். அதற்கான வரலாற்றுக் காரணங்களும் பலவுண்டு.

முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்கள் 1977ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை அரசியலில் அதிகாரம் வகித்தவர். கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக, முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராக, வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக, ஈட்டில் இலங்கைக்கான குவைத்நாட்டுத் தூதுவராக எனப்பல்வேறு பதவி வகித்து இன்னோரென்ன பணிகளை இந்த மண்ணுக்காகப் புரிந்திருக்கிறார். இந்த உண்மையை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டாக வேண்டும். அது தான் மனித நாகரீகம்.

இன, மத, மொழி, பிரதேச வேறுபாடின்றி அவரது சேவை பரந்து பட்டதாகக் காணப்படுகின்றது. இதற்கு, அவரால் பல்வேறு பிரதேசங்களிலும் பல்வேறு தேவை கருதி  நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்ட கட்டடங்களே இன்று சாட்சி பகர்கின்றன. அத்தோடு, அவரால் வழங்கப்பட்ட பல்வேறு வாழ்வாதர உதவிகளால் இன்றும் இப்பிரதேசத்தில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை மறக்கப்படலாகாது. நன்றியுடன் நினைவு கூறப்பட வேண்டியது.

பிரதேசத்தின் கல்வியில் அபிவிருத்தி ஏற்பட வேண்டும். அதற்கு இப்பிரதேசத்திலிருந்தே ஆசிரியர் சமூகம் உருவாக வேண்டுமென்ற  தூரநோக்குடன் சிந்தித்த, அமைச்சர் மன்சூர் அவர்கள், அன்றைய ஆட்சியாளர்களின் உதவியினால் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியை நிறுவி, அதனைச் செயற்படச்செய்தார். அது மாத்திரமின்றி, தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக நூற்றுக்கணக்கான மில்லியன் ரூபாய்க்களை தனது சொந்த முயற்சியினால் குவைத் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுத்து, இன்று அழகிய சூழலைக் கொண்ட ஒரு பல்கலைக்கழகத்தை நம்மைக்காணச் செய்த பெருமையும் அவரேயே சாரும்.

மட்டக்களப்பு வரையுள்ள ரயில் பாதையானது பொத்துவில் வரை விஸ்தரிக்கப்பட வேண்டும். கிழக்கின் மடடக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டக்கரையோர மக்கள் பல வழிகளிலும் நன்மையடைய வேண்டும். அதற்காக மட்டக்களப்பு–பொத்துவில் வரை ரயில் சேவைக்கான பாதை உருவாக்கப்பட வேண்டுமென்ற தூரநோக்கு சிந்தனையுடன், 1992 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சியின் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அனுமதிக்கிணங்க ஈரான் இஸ்லாமியக் குடியசிக்குச் சென்று இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்.

அதன் பயனாக, 1993ஆம் ஆண்டு ஈரான் அரசியின் பொறியியல் நிபுணர்குழு இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்துக்கு விரைந்து, ரயில் போக்குவரத்துப் பாதையை மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை விஸ்தரிப்புச் செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு, அதற்கான திட்ட வரைவுகளையும் பூர்த்தி செய்தனர்.

விஸ்தரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிமாற்றம் மற்றும் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சியில் போட்டியிட்ட அமைச்சர் மன்சூர் அவர்கள் திட்டமிடப்பட்டு தோற்கடிக்கப்பட்டமை என்பவற்றின் காரணமாக அத்திட்டம் நிறைவேறவில்லை.
1992ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சி முற்றுப்பெறாமல் தொடரப்பட்டிருந்தால், கிழக்கின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டக் கரையோரப்பிரதேசம் பெரும் நன்மையடைந்திருக்கும். மக்களின் வாழ்வு செழிப்புற பொருளாதர வளர்ச்சி ஏற்பட்டிருக்கும்.

ஒரு நாட்டினதோ அல்லது ஒரு பிரதேசத்தினோ பொருளாதார வளர்ச்சிக்கு இலகுவான போக்குவரத்து வசதிகளே முக்கியமானது என்ற பொருளாதார நிபுணர்களின கருத்து இத்தருணத்தில் கருத்திற்கொள்ளத்தக்கதாகும்.

ஒருவர் கொண்டு வரும் திட்டம் மக்களுக்கு நன்மையுள்ளதாக அமையுமாயின், அத்திட்டம் அவரால் நிறைவு செய்ய முடியாது போகும் நிலையில், பின்னர் வருபவர்களினால் அத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வெற்றி கொள்ளப்பட வேண்டும். அது தான் நாகரிகமான அரசியல் சிந்தாந்தம் தெரிந்தவர்களின் நல்ல மனப்பாங்காகும். அந்த மனப்பாங்கு இன்றுள்ள அதிகாரம் கொண்ட மக்கள் பிரதிநிதிகளிடம் உருவாக வேண்டுமென்பதே ஜனநாயகவாதிகளினதும் நல்லுள்ளம் கொண்டோரினதும் அவாவாக இருக்கிறது.

இருப்பினும், அந்தக்கனவை தனது வாழ்நாளில் நிறைவேற்றியாக வேண்டுமமென்பற்காக இன்றும் முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்கள் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கின்றார்.

கடந்த வருடம் இப்பாதை விஸ்தரிப்பின் அவசியம் தொடாபில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு கடிதம் அவரால் எழுதப்பட்டது. அதற்கு ஜனாதிபதியிடமிருந்து தங்களது வேண்டுகோள் தொடர்பில் புகையிரதத் திணைக்களத்தின் பொது முகாமையாளரினால் கவனஞ்செலுத்தப்படும் என்று பதிலும் வந்துள்ளமையை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இவ்வாறு, அரசியல் அதிகாரமிருந்ந காலத்திலும் அதன் பின்னரும் மண்ணையும் மக்களையும் நேசித்து மண்ணுக்காகவும் மக்களுக்காவும் எதிர்காலச் சந்ததியினரின் நன்மைக்காவும் பல்வேறு சேவைகளைப் புரிந்தும், இன்றும் அதைத் தொடர்வதற்காகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு வரலாற்றுப் புருசராக முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்கள் நம்முன் வாழ்கிறார். அவர் மருதமுனை மக்களால் மத்திரமல்லாது, இக்கல்முனைத்தொகுதியின் சகல ஊர் மக்களினாலும் வாழ்த்தப்பட வேண்டியவர். பாராட்டப்பட வேண்டியவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

மனதில் பொறாமையும், தன் திறமையைப் பற்றி தாழ்வான எண்ணமும் அதனால் தோன்றிய உள்ளச்சமும் கொண்டவர்களே அடுத்தவர்களைப் பாராட்ட மறுக்கிறார்கள் என்று உளவியல் கூறுகிறது. தன்னம்பிக்கை கொண்டவர்களும் தன் நிலைமை மீறி ஆசைப்படாதவர்களும் அடுத்தவரைப் பாராட்டத் தயங்குவதே இல்லை. இதையும் உளவியல் தான் சொல்கிறது.

அடுத்தவரைப் பாராட்டும் பழக்கமில்லாமல் போனால், வேறொரு நோயும் நம்மிடம் வந்து சேரும் ‘தற்பெருமை’ என்னும் நோயே அது. இன்று கற்றறிந்த பெரியோர்களிடமும், வழிகாட்ட வேண்டிய தலைவர்களிடமும் இந்த நோய் தலைவிரித்தாடுவதன் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? அடுத்தவரின் திறமையை, சேவையைப் பாராட்டி மகிழாமல், ‘அது அவர்களுக்குத்தான் போட்ட பிச்சை’ என்று எண்ணிக்கொள்வது தான்.

பாராட்டுக்குத் தகுதியானவர்கள் பாராட்டப்பட வேண்டும். அவர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மனப்பூர்வமாக அடுத்தவரைப் பாராட்டுதல், நன்றி தெரிவித்தல் என்னும் உயரிய பண்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

செய்கிற சேவைக்குக் கிடைக்கும் பாராட்டு எவரையும் ஊக்கப்படுத்தும் அந்த வகையில், இந்த மண்ணை நேசித்த, மண்ணின் சேவகனாக விளங்கிய முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சரும் கல்முனைத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் குவைத் நாட்டினது தூதுவருமான சிரேஷ்ட சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ. ஆர் மன்சூர் அவர்களை நேசித்து மருதமுனை மக்கள் எடுத்துள்ள இந்த வராலாறு பேசும் பாராட்டு விழா எதிர்காலச் சந்ததியினருக்கோர் ஊக்க மருந்தாக அமையுமென்பதில் ஐயமில்லை.

(இக்கட்டுரை முன்னாள் அமைச்சர் மர்ஹூம் மன்சூரின் வேண்டுகோளின் நிமித்தம் அன்னாருக்காக 2014ஆம் ஆண்டு மருதமுனை மக்கள் நடாத்திய பாராட்டு விழாவின் போது, வெளியிடப்பட்டட சிறப்பு மலருக்காக எழுதப்பட்டது. தலைப்பு மாத்திரம் மாற்றப்பட்டுள்ளது)

எம்.எம்.ஏ.ஸமட்
உளவள ஆலோசகர்
சிரேஷ்ட ஊடகவியலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here