என் எழுத்துக்களின் ரசிகனை இழந்திருக்கின்றேன்-மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூருடனான ஊடகவியலாளர் ஏ.எல்.அஹ்மட் நிப்ராஸின் அனுபவப்பகிர்வு

0
216

sssஇனி… அவரிடமிருந்து அழைப்புக்கள் வரமாட்டாது.
“தம்பி என்ன செய்கின்றாய் ?” என்று ஒரு காலைப்பொழுதில் அவா் நலன் விசாரிக்கமாட்டார்.

ஏ.ஆர். மன்சூா் சோ் காலமாகி விட்டார்…

அவருக்கும் எனக்குமிடையிலான 15 வருட உறவு முடிந்தது.

நண்பர்களே…

உங்களை விட அதிகமாக நான் அவரை இன்று இழந்திருக்கின்றேன். எனது ஊடகத்துறை வாழ்வின் மறக்க முடியாதவொரு ஆளுமையை, எனது எழுத்துக்களின் ரசிகனை, விமா்சகனை, காத்திரமான கருத்துக்களை முன்வைக்கும் ஒரு சமூக சிந்தனையாளனை நான் இன்று இழந்திருக்கின்றேன்.

ஒரு தந்தை போல உபதேசம் செய்பவரை, சகோதரனை, எனது நலன் விரும்பியை, நான் நலமாக இருக்க வேண்டுமென நினைப்பவரையும் மர்ஹூம் மன்சூரூடாக எனதுலகம் இழந்திருக்கின்றது.

ஏ.ஆா்.மன்சூர் – யாருமே நினைத்துப்பார்க்க முடியாத ஒரு ஆளுமை!

கோட், சேட், டை உடுத்த நேர்த்தியான ஆடை, சப்பாத்து, நிமிர்ந்த நடை, புன்னகையுடனான உபசரிப்பு, தெளிவான பேச்சு, அன்பு… இவை தான் ஏ.ஆா்.மன்சூரின் அடையாளம்.

1977ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்தில் ஒரு எம்.பி.யாக அங்கம் வகித்தார். வா்த்தக வாணிப கப்பல்துறை அமைச்சு என்ற பென்னம்பெரிய அமைச்சை ஐ.தே.க. அவருக்கு வழங்கியிருந்தமை அவர் மீதான நன்மதிப்பின் வெளிப்பாடாகும். யாழ் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி அமைச்சராகவும் அவா் கடமையாற்றினார். பின்பு குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக இருந்தார்.

அவா் தூதுவராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த போது, விடுமுறையில் இலங்கை வந்திருந்த சமயம், வீரகேசரியின் ஊடகவியலாளன் என்ற வகையிலேயே அவரை நான் முதன்முதலாகச்சந்தித்தேன். அன்று அவா் எப்படி இருந்தாரோ, எப்படி வரவேற்றாரோ அது போலவே கடைசி வரையும் என்னை அவர் மரியாதையுடன் நடத்தினார். நன்றி மறக்கின்ற அரசியல்வாதிகளிடையே அவர் வித்தியாசமானவர்.

15 வருடங்களாக அவருடனான எனது உறவு நீடித்திருக்கின்றது. அவா் அமைச்சராக இருந்த போது, அவரை நான் சந்தித்ததில்லை. அதிகாரமில்லாத போது தான் இத்தொடர்பே உருவானது. ஆனாலும், அவருடன் எப்போதும் ஒரு ஈா்ப்பிருந்து கொண்டே இருந்தது. தனது முதுமையிலும் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம், கௌரவமாகப் பழகும் முறை, உபசரிப்பு, மரியாதை, கம்பீரம், தெளிவு என்பன இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

அதற்கப்பால் எனது செய்திகளை, அரசியல் கட்டுரைகளை வரிக்கு வரி வாசிப்பார். ஒவ்வொன்றுக்கும் அழைப்பை எடுத்து அபிப்பிராயம் சொல்வார். நாம் ஏதாவது பிழைகளைச் சுட்டிக்காட்டினாலும், அதிலுள்ள நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அவாரிடம் கண்டேன்.

அவரிடம் அரசியல்வாதிக்கும் அப்பாலான ஒரு புனிதமான உறவை நான் உணர்ந்தேன். எனக்கு பல வருடங்களாக நல்ல ஆலோசனை வழங்குபவராக, காத்திரமான வாசகராக, கஷ்டம் வரும் போது, எந்த அடிப்படையிலாவது நமக்கு ஆறுதல், உதவியளிப்பவராக மன்சூர் இருந்திருக்கின்றார் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.

மிக முக்கியமாக, நான் வீரகேசரியில் ஒரு உதவி ஆசிரியராக இருந்த வேளையில், எனது சொந்த ஊரான அக்கரைப்பற்றில் இடம்பெற்ற எனது திருமணத்தில் கலந்து கொண்ட ஒரேயொரு அரசியல்வாதி என்ற நன்றியுணா்வு எனக்கு எப்போதுமிருக்கின்றது.

அதே போன்று, வீரகேசரி ஆசிரியரின் ஒப்புதலுடன் அவருடைய இறுதிக்காலக்கட்டத்தில் – அவா் செய்த கடந்த கால, நிகழ்கால சேவைகள் தொடா்பில் நிறைய நேர்காணல்களையும் கட்டுரைகளையும் எழுதும் வாய்ப்பை இறைவன் எனக்குத் தந்தான் என்ற ஆத்ம திருப்தி எனக்குள்ளது.

மன்சூர், எனக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையாவது தொலைபேசியில் அழைப்பை எடுப்பார். ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது பேசாமல் இருந்ததில்லை. சில வேளைகளில் நான் பிஸியாக இருக்கும் போது, அவரது அழைப்புக்களை தவற விட்டிருக்கின்றேன். பிறகு கதைக்கும் போது, ”தம்பி நான் கோள் எடுத்தன். நீங்க என்ட கோள்ள ஆன்ஸ்பர் பண்ணல்ல. என்னடப்பா ஏதாவது கோபமோ தெரியாது” என்பார். ஒரு நாள் அவ்வாறு இரண்டு மூன்று தடவை ஆன்ஸ்பர் பண்ணவில்லை என்றதும், மறுநாள் நான் வீரகேசரிக்கு கடமைக்குப் போகும் போது, அரை மணித்தியாலத்திற்கு முன்பு வந்து என்னைக் காத்துக் கொண்டு நின்றார். அதனை – இனியும் மறக்க முடியாதது.

அவரது அன்புக்காக நானும் என் துணைவியும் அவரது இல்லத்திற்கு பல தடவை சென்றிருக்கின்றோம். அவா் ஊருக்கு வந்தால் வரச் சொல்வார். போய் சந்திப்பேன். பிள்ளைகளிடம் என்னைப்பற்றி மிகவும் மதிப்பார்ந்த விதத்தில் சொல்லுவார். முன்னாள் எம்.பி. உதுமாலெப்பை இறந்த செய்தியை முதன்முதலாக அவருக்குச் சொன்ன போது அழுதே விட்டார். அது தான் அவா்.

மன்சூர், இந்த சமூகத்தைப்பற்றிச் சிந்திக்காத நாள் கிடையாது. ”இந்த மனுச மக்களுக்கு ஏதாவது செய்ய வேணுமப்பா” என்று அடிக்கடி கூறுவார். “ஏதோ ஒங்களப் போல கொஞ்சப்போ் தான் எழுதறயல். ஒங்களப்போல இளம் பிள்ளைகள் தான் ஏதாவது செய்யணும்” என்பார்.

இன்றிலிருந்து 3 கிழமைக்கு முன்னா் வட மாகாண சபை உறுப்பினா் ஒருவா் வெளியிட்ட கருத்துத்தொடர்பில் அழைப்பை எடுத்து கதைத்தார். அது தான் அவரிடமிருந்து வந்த கடைசி அழைப்பு.

இன்று அவர் இறந்து விட்டார். இனி அவரிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள் வராது.  ஆனால், தொலைபேசி அழைப்புக்களில் அவா் பேசும் வார்த்தைகள் எனது காதுகளில் இன்று முழுக்க ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. கண்கள் பனிக்கின்றன.

மன்சூர் சேர் !

பிஸியான நேரங்களில் உங்களது சில அழைப்புக்களைத் தவற விட்டதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.

– இப்படிக்கு
நீங்கள் நேசித்த நிப்றாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here