பொத்தானை மக்களது மீள்குடியேற்றப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்-ஜுனைட் நளீமி

0
301

IMG_20170725_115358 (1)மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடிப் பிரதேச சபையின் கீழ் அமைந்ததும் கிரான் செயலகப்பிரிவுடன் தற்காலிகமாக இணைப்புச்செய்யப்பட்டதுமான பொத்தானை கிராம மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் அசமந்தப்போக்கும் பாராபட்சமும் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த, தமக்கான கிராம அபிவிருத்திச்சபை, மீனவர் சங்கம், பாடசாலை, விவசாய அமைப்புக்கள் என தனியாகக் கொண்ட கிராமமாக இது காணப்பட்டது. தமிழ்-முஸ்லீம் சகோதர சமூகங்கள் அமைதியாக பரஸ்பர சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்த போதும், பயங்கரவாத சூழ்நிலையில் முஸ்லிம்கள் இடம்பெயர வேண்டி வந்தது.

உயிரிழப்புக்களுடன் தமது சொத்துக்களை முற்றாக இழந்து கிராமத்தை விட்டும் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டனர். இராணுவத்தினரால் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட பின்னரான சூழ்நிலையில், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளக்குடியேறுவதில் பல சிரமங்களைத் தொடர்ந்தும் எதிர்கொள்கின்றனர்.

உத்தியோகபூர்வ ஆவணங்கள் பல இருந்தும், மாவட்ட செயலாளரினால் மீளக்குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும் இதுவரையில் பூரணமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென்பதனை அவதானிக்க முடிவதுடன், மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட இடம்பெயர்ந்த மக்கள் தொகுதியில் ஒரு பகுதியினர் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மீளக்குடியமர்ந்து தமது இருப்புக்களைப் பலப்படுத்துவதில் முனைப்புக் கொண்டுள்ள போதும், பொத்தானை அணைக்கட்டு தெற்கு, சாளம்பச்சேனை, பலாக்காடு போன்ற பிரதேச மக்கள் மீளக்குடியமர்வதில் பல்வேறு கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்த காரணத்தினால் மக்கள் குடியிருந்த பகுதிகளில் மரங்கள் வளர்ந்து பற்றைக்காடுகளாகக் காணப்படுகின்றன. இவற்றினைத் துப்பரவு செய்து மீளக்குடியமர முயற்சிக்கின்ற போது, அதிகாரிகளினால், வன இலாகா உத்தியோகத்தர்களாலும் இடையூறுகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதாக மக்கள் குறிப்ப்பிடுகின்றனர்.

அத்தோடு, வன இலாகா பகுதியினர் மக்கள் குடியிருந்த காணிகளுக்கூடாக எல்லைக் கற்களை நட்டுள்ளதால், முறுகல் நிலையேற்பட்டு நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த முறுகல் நிலை தொடர்பில் ஆராய மாவட்ட வன இலாகா பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளும், கிரான் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், பிரதேச கிராம அதிகாரி ஆகியோரும் குறித்த பிரதேசங்களுக்கு வருகை தந்திருந்தனர்.

மக்கள் குடியிருந்த பிரதேசங்களின் தடயங்களை களப்பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட வன இலாகா பணிப்பாளர் திரு.விஜயரட்ன தலைமையிலான அதிகாரிகள் மக்கள் குடியிருந்ததற்கான பல்வேறு கலைத்தடயங்களையும் ஆவணங்களையும் கண்டறிந்ததுடன், நியாயமாக மக்களது குடியிருந்த காணிகள் வன இலாகா பகுதியில் இருக்குமாயின், அதனை உரிய முறைப்படி விடுவித்து எல்லைக் கற்களை விடுவதாக வாக்களித்தனர்.

இதனடிப்படையில், சாளம்பச்சேனை பகுதியில் வன இலாகா எல்லை அமையாதெனவும் குறிப்பிட்டனர். இதில் மக்கள் மீளக்குடியமர முடியுமா? என மக்கள் வினவிய போது, இப்பகுதி மாதுறுஓயா யானைகள் சரணாலயத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதால், இது குறித்து பிரதேச செயலாளரே முடிவு செய்ய வேண்டுமென பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்  குறிப்பிட்டார்.

என்ற போதும், குறித்த குடியிருப்புக்கள் அமைந்த பகுதியில் தமிழ் சகோதர இனத்தவர் சிலருக்கு ஒப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், சில மீற்றர்கள் தூரத்தில் மீளக்குடியமர்த்தவும் செய்யப்பட்டுள்ளதனை பொது மக்கள் சுட்டிக்காட்டியதுடன், தமது மீள்குடியரேற்றம் தொடர்பில் பாராபட்சம் காட்டப்படுவதாக விசனம் தெரிவித்தனர்.
எனவே, வன இலாகா மக்களது குடியிருந்த காணிகளில் அத்துமீறுவதும், எஞ்சிய பகுதி மாதுறு ஓயாத்திட்டம் என்ற போர்வையில் பறிக்கப்படும் நிலைமை காணப்படுவதால், தொடர்ந்தும் இடம்பெயர்ந்த மக்கள் தமக்கான நியாயம் கிடைக்காமல் அகதி வாழ்க்கையே தொடர்ந்தும் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதாக பிரதேசவாசிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பில் பல அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் அரசியல் தலைமைகளிடமும் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கப்பெறாமல் கைவிடப்பட்ட ஒரு சமூகமாக பொத்தானை இடம்பெயர்ந்த மக்கள் காணப்படுவது கவலையளிக்கின்றது.

இக்கிராம மக்களது அடிப்படைத் தேவைகளான பாடசாலை, விளையாட்டு மைதானம், வைத்தியசாலை, பொது மயானம் போன்ற பொதுத்தேவைகளுக்கு காணிகள் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லையென்பதுடன், பொது மையவாடிக்கான கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்ட போதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, மேற்படி பொத்தானை மக்களின் மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை, தலையீடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாவட்ட, மாகாண, தேசிய அரசிலுள்ளவர்களும் கூடுதல் கவனஞ்செலுத்தி உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முன் வர வேண்டும் என கோரளைப்பற்று ஓட்டாமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக சேவையாளருமான ஜுனைட் நளீமி வேண்டுகோள் விடுக்கின்றார். IMG_20170725_104133 IMG_20170725_113141 IMG_20170725_113826 IMG_20170725_115358 (1)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here