ஹக்கீமையும் சம்பந்தனையும் பகைத்து மைத்திரி ஆட்சி நடத்த முடியாது – ஏ.எல்.தவம்

0
213

fgrg-ஊடகப்பிரிவு-
அன்று முஸ்லிம்களுக்கெதிரான பௌத்த கடும்போக்கு இனவாதத்தை அரங்கேற்றியவர்களை ஊட்டி வளர்த்தார் என்பதற்காக மஹிந்தவைத் தோற்கடித்து ஆட்சியை மாற்றினோம். இன்று அதே இனவாதம் அரங்கேற்றப்படும் போது, பார்வையாளராக மைத்திரி இருந்தால், இன்னுமொரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரத்தயங்கமாட்டோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் விவகார வேலைவாய்ப்புத்துறைச் செயலாளருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்

அக்கரைப்பற்று பறக்கத் நகர் மற்றும் இலுக்குச்சேனை மக்களுடனான சந்திப்பு நேற்று (25) மாலை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,

கடந்த ஆட்சிக்காலத்தில் இனவாதச்செயற்பாடுகள் உச்ச கட்டத்திலிருந்தன. அளுத்கம எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டதோடு, முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.  முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டன. மத்ரஸாக்கள் இழுத்து மூடப்பட்டன. பர்தாவும் அபாயாவும் போடக்கூடாதென மிரட்டல் விடுக்கப்பட்டது. ஹலால் உணவைப்பெறுவதில் தடைகள் போடப்பட்டன.

இவை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தாமல், அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெறும் பார்வையாளராக இருந்து அனுமதித்து வந்தார் என்ற அடிப்படையில், அவரைத் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினோம். விஷேடமாக அக்கரைப்பற்று மக்கள் மஹிந்தவின் ஊதுகுழலான அதாவுல்லாவையும் தோற்கடித்தனர்.

இப்படி மஹிந்த விட்டுச்சென்ற எச்சங்களிலிருந்து மீண்டும் வைரசுக்கள் பரவ முயற்சிக்கின்றன. அதனால், ஆங்காங்கே பழைய இனவாத நோயின் அறிகுறிகளைக் காணக்கூடியதாகவுள்ளது. இந்நோய்க்கு உடனடியாகச் சிகிச்சை செய்யுங்களென்று யாரால் சிகிச்சை செய்ய முடியுமோ, அவரிடம் கேட்கிறோம்.

அதாவது, இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மு.காவும் தமிழ்க்கூட்டமைப்பும் இணைந்து கேட்டிருக்கின்றன. ஹக்கீமையும் சம்மந்தனையும் ஒதுக்கி வைத்து தாம் ஆட்சி நடத்த முடியாதென்பதைப் புரிந்து கொள்வதற்கு கடந்த ஜனாதிபதித்தேர்தல் முடிவு மிகச்சிறந்த உதாரணமாகும். மைத்திரியும்  அதனை நன்கு புரிந்திருப்பார் என எண்ணுகிறோம்.

எம்மைப் பொறுத்த வரை எமக்கு மஹிந்த மச்சானுமில்லை. மைத்ரி மாமாவும் இல்லை. அதாவுல்லா தனது அரசியலையும் செல்வத்தையும் வளர்த்துக்கொள்ள மஹிந்தவைப் பயன்படுத்தினார். அதனால் மஹிந்தவின் பிடிக்குள் அகப்பட்டு, நன்றிக்கடன் பட்டு, கடந்த தேர்தலில் சமூகத்தை எதிர்த்து மஹிந்தவோடு நின்றார்.

அப்படி நாங்கள் மஹிந்தவிடமோ அல்லது மைத்திரியிடமோ மண்டியிட வேண்டிய எந்தத்தேவையும் எமக்கில்லை. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு நாளும் யாரிடமும் அடிமைப்படாது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், சரணாகதி அரசியலைச் செய்ய நாம் தயாரில்லை என்பதற்கான சமிக்ஞை தான் நேற்று வெள்ளிக்கிழமை அம்பாரை மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள்.

குறிப்பாக, அக்கரைப்பற்றில் ஒன்றரைத் தசாப்தத்தின் பின்னர் சமூகம் சார்ந்த ஒரு விடயத்திற்காக ஆர்ப்பாட்டம் நடந்தது. இறக்காம மக்களுடனும் சமூகத்தோடும் தமது ஒருமைப்பாட்டை அக்கரைப்பற்று மக்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர். இதனைப் பொறுக்காத அதாவுல்லாவின் அடிவருடிகள் சிலர், அதாவுல்லா இல்லாததால் தான் இறக்காம சிலை வைப்பு விவகாரத்தைப்போன்ற விடயங்கள் அம்பரை மாவட்டத்தில் நடக்கின்றன என்று கூறியதாகக் கேள்விப்பட்டு எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

அதாவுல்லா அதிகாரத்திலிருந்த காலத்தில் சமூகத்திற்கு நடந்த எல்லா அநியாயங்களையும் சரி கண்டதோடு, அக்கரைப்பற்றில் மேடை போட்டு அந்த அநியாயங்களை நியாயப்படுத்தியதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இன்று அதிகாரத்தில் இருந்திருந்தாலும், இறக்காம விவகாரத்தையும் அப்படி நியாயப்படுத்தி இருப்பார்.

அத்தோடு, இறக்காம மாயக்கல்லி விவகாரத்தை வைத்து மஹிந்தவை நியாயப்படுத்தவும் சிலர் வெளிக்கிட்டுள்ளனர். அன்று மஹிந்த தட்டிக்கொடுத்த பௌத்த கடும்போக்குவாதம் தான் இன்னும் தனது வக்கிரத்தைக் காட்டிகிறது என்ற விடயத்தை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானதெனவும், பௌத்தர்கள் விரும்பியவாறு தமிழர்களும் முஸ்லிம்களும் அடி பணிந்தே இருக்க வேண்டுமெனவும் அவர் தான் ஊட்டி வளர்த்தார். அப்படிப்பட்டவரை நியாயப்படுத்துவதில் இம்மியளவும் தர்மமில்லை. புகைக்குள் கன்று கட்ட யாரும் முயற்சிக்கக்கூடாது. தேவையேற்பட்டால் ஆட்சியை மாற்றத்துணிவோம். அதற்காக  மஹிந்தவை மாற்றுத்தெரிவாகக் கொள்ள முடியாது. கண்ணை மூடிக்கொண்டு இன்னுமொரு தவறை இழைக்க முடியாது. அதனால், புதிய ஏற்பாடுகள் பற்றியே நாம் சிந்திக்க முடியுமெனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here