கல்குடா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய செயற்பாட்டாளர் சாட்டோ மன்சூர் நாபீர் பெளண்டேசனுடன் இணைவு-வீடியோ

0
316

கவர் போட்டோஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கல்குடாத்தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும், சமூக ஆர்வலரும், முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத்தின் தீவிர அரசியல் செயற்பாட்டாளரும், கல்குடா பிரதேசத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய இயக்குனரும், சமகாலத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்குடா பிரதேசத்திலிருந்து மாகாண சபை வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனப்பேசப்பட்ட சாட்டோ வை.எல்.மன்சூர் அம்பாறை மாவட்டத்தில் சமூக சேவைகள் அமைப்பாகவும், எதிர்வருகின்ற மாகாண சபை, உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களில் பெரும் அரசியல் சக்தியாக வரலாம் எனப்பேசப்பட்டு வருகின்ற நாபீர் பெளண்டேசில் இணைந்து கொண்டுள்ளார்.

கடந்த 24.07.2017 ம் திகதியன்று உத்தியோகபூர்வமாக சம்மாந்துறையிலுள்ள பெளண்டேசனின் காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சாட்டோ மன்சூர் நாபீர் பெளண்டேசனுடைய கல்குடாத்தொகுதி அமைப்பாளராகவும், பெளண்டேசனின் இஸ்தாபகத்தலைவர் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீருடைய மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராகவும் நாபீர் பெளண்டேசனினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிகழ்வில் பெளண்டேசனின் செயலாளர் ஜவாஹிர், இளைஞர் அமைப்பாளர் தானிஸ், அரசியல் செயற்பாட்டாளர் மாஹிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் குறித்த வைபவத்தின் பொழுது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மன்சூர்,

நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபகத்தலைவர் உதுமான்கண்டு நாபீருக்கு சமகாலத்திற்குப் பொருத்தமான தலைமைத்துவ சபையில் நகரக்கூடிய அனைத்து வளங்களும், தகுதியும் இருப்பதாகவே நான் பார்க்கின்றேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் அடையாளத்தினை சம்மாந்துறையிலிருந்து தான் ஆரம்பித்திருக்கின்றது.

அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபகத்தலைவரும் சம்மாந்துறை மண்ணுக்குச் சொந்தக்காரனாகவே இருந்துள்ளார்கள். அவ்வாறான புதியதொரு பாதையில் புதியதொரு அரசியல் கலாசாரத்தினை நோக்கிய பயணமாகவே எனது நாபீர் பெளண்டேசனுடனான இணைவினைப் பார்க்கின்றேன்.

அந்த வகையிலே வடகிழக்கிற்கு வெளியிலுள்ள அரசியல் கலாசாரத்தினை அல்லது கொழும்பு அரசியலினை முஸ்லிம் காங்கிரசின் தலைமை வடகிழக்கில் தினிப்பதனையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படுவதினால், அது வடகிழக்கு முஸ்லிம்களுடைய அடிப்படைப் பிரச்சனைகளுக்கும், முக்கியமாக உறுதிப்படுத்தப்பட வேண்டிய முஸ்லிம்களினுடைய இருப்பு சம்பந்தமாக எந்தவிதத் தீர்வினையும் பெற்றுக்கொடுக்காது என்ற காரணமே, தான் நாபீர் பெளண்டேசனில் இணைந்து கொள்வதற்கு பிரதான காரணமெனத் தெரிவித்தார்.

ஆகவே, எங்களுடைய மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளைப் பல்வேறு துறைகளினூடாக நகர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயக் கடமையாக இருக்கின்றது. அந்த வகையிலே, அடுத்தவருடைய குறைநிறைகளைப் பற்றிப்பேச வேண்டிய அவசியத்தில் எப்பொழுதும் நாங்கள் இருந்தில்லை. முஸ்லிம் சமூகம் என்ற வகையிலே தேசிய முஸ்லிம் உம்மா எதிர்நோக்குகின்ற சவால்களுக்கு நாங்கள் எல்லோரும் சரியான இணைப்பாக்கத்தோடும், தொடர்பாடலோடும், தலைமைத்துவ சபையோடும் முன்னோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருக்கின்றோம்.

அந்த வகையிலே எனது பார்வையில் மனமுவந்து, தன்னார்வமாக தனது பணிகளை மேற்கொண்டு வருகின்ற நாபீர் பெளண்டேசனும் அதனுடைய நிறைவேற்றுப் பணிப்பாளருமான பொறியியலாளர் அல்ஹாஜ் உதுமான்கண்டு நாபீர், பெளண்டேசனுடைய நிருவாக உத்தியோகத்தர்கள், அரசியல் முன்னெடுப்பாளர்களுடைய செயற்பாடுகளெல்லாம் ஒரு தூரநோக்கு சிந்தனைமிக்கதாக இருக்கின்றது.

அத்தோடு, நாங்கள் நேசிக்கின்ற முக்கிய மண்ணாகவும் சம்மாந்துறைப் பிரதேசம் காணப்படுகின்றது. பல புரட்சிகள் சம்மாந்துறை மண்ணிலிருந்து ஏற்படுத்தப்பட்ட வரலாறுகளும் இருக்கின்றது. ஆகவே, புதியதொரு அரசியல் கலாசாரத்தினைக் கொண்ட புரட்சியோடு முன்னோக்கி நகர்த்துவார்கள் என்ற நம்பிக்கையோடு நாபீர் பெளண்டேசனுடன் இணைந்து கொண்டு தன்னாலான அனைத்துப் பங்களிப்புக்களையும் வழக்கத் தயாராக இருப்பதாகவும் மன்சூர் தனது அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தினார்.

சாட்டோ மன்சூர் நாபீர் பெளண்டேசனுடன் இணைந்து கொண்டு ஊடகங்களுகுத் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய காணொளி இங்கே வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ : – www.youtube.com/watch?v=xrPCbIJiX4M&feature=youtu.be

கவர் போட்டோ 1008 - Copy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here