மாகாண சபைத்தேர்தல் பிற்போடப்படுவதையும்; தேர்தல் முறை மாற்றத்தையும் ஏற்க முடியாது -ஏ.எல்.தவம் (கி.மா.ச.உ )

0
188

FB_IMG_1499524217013தற்போதுள்ள விகிதாசார முறையை இல்லாமல் செய்து, கலப்புப்பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத்தேர்தலை நடாத்துவதற்காகவும், ஒரே நேரத்தில் அனைத்து மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடாத்துவதற்காகவும், மாகாண சபைத்தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இச்செய்தி எம்மைப் பொறுத்த வரை கவலைக்குரிய கசப்பான விடயமாகும். தேர்தல்களைப் பிற்போடுவது ஜனநாயக வழி முறைகளில் தடங்கல்களை ஏற்படுத்துவதாக அமைவதோடு, மக்களின் தெரிவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு முயற்சியுமாகும்.

காலம் முடிந்தால், யார் வெல்வார்? யார் தோற்பார்? என்பதை விட, மக்கள் அடுத்து வரும் 5 வருடங்களுக்கான தமது பிரதிநிதி யார்? என்பதைத் தீர்மானிக்கின்ற தெரிவைச் செய்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும். அதில் அதிகாரத்திலுள்ளவர்கள் ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

அது மாத்திரமல்லாமல், தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையினால் பெரும்பான்மை மக்களுக்குள் சிதறி வாழும் சிறுபான்மை சமூகங்களாலும், மாவட்ட ரீதியில் வாக்குகளைச் சேர்ப்பதனூடாக பிரதிநிதித்துவங்களைப் பெற முடிகிறது.

ஆனால், கலப்பு முறை அறிமுகப்படுத்தப்படுமாக இருந்தால், அப்படியான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும். சிறு கட்சிகளுக்கும் இதே சவால் வரக்கூடும். ஜே.வி.பி போன்ற கட்சிகளுக்கு மட்டும் இது சாதகமாக அமையலாம். ஆனால், ஏனைய சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகள் பாதிக்கப்படும்.

உள்ளூராட்சித்தேர்தல் முறையும் பாராளுமன்றத்தேர்தல் முறையும் ஒன்றாக இருப்பதால், மாகாண சபைத்தேர்தல் முறையும் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று ஒன்றும் கட்டாயம் கிடையாது.

உலகளவில் பல நாடுகளில் ஒவ்வொரு அதிகார மட்டத்தேர்தல் முறைகளும் தேவைக்கேற்ப வித்தியாசம் வித்தியாசமாக இருக்கின்றன. அதனால், இலங்கையிலும் மாகாண சபைத்தேர்தல் முறைமை இப்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையே தொடர்வதில் ஒரு தீங்கும் வராது.

எனவே, மாகாண சபைத்தேர்தல் முறைமை மாற்றப்படுவதையும் தேர்தல்கள் பிற்போடப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்பதோடு, மக்களின் தெரிவில் அதிகாரத்திலுள்ளவர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஒவ்வாத செயலை நிறுத்திக்கொள்ளவும் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here