அருந்தவபாலனுக்கு சுமந்திரன் எம்பி பகிரங்க எச்சரிக்கை

0
189

20526188_1032843916853142_8778312542583366214_nபாறுக் ஷிஹான்
அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம். பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் என்ற முறையில் உங்களை எச்சரிக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளைத் தலைவரும் ஓய்வு நிலை அதிபருமான க.அருந்தவபாலனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த வருடத்திற்கு பின் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று (1) பிற்பகல் 2.00 தென்மராட்சி கலைமன்ற மண்டபத்தில் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் திருமதி வியஜகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன் மற்றும் பிரதேச செயலர் தேவநந்தினி பாபு ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. தென்மராட்சிப் பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக திணைக்களங்கள் சார்ந்து கலந்துரையாடப்பட்டது.

இதன் போது, சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட கொடிகாமம் பொதுச்சந்தை மற்றும் வீதிகள் புனரமைப்பு போன்றன பிரதேச சபைக்குப் போதாமையால் மேற்கொள்ளபடுவதில்லையென சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் போது கருத்துத்தெரிவித்த பா.உ சுமந்திரன் பிரதேச சபையினை இரண்டாகப் பிரித்து அதன் மூலம் அபிவிருத்திக்கான நிதியினைப் பெற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாமெனத் தெரிவித்தார். பிரதேச சபையினை இரண்டாகப் பிரிக்கின்ற போது, பிரதேச செயலகம் இரண்டாகப் பிரிப்பதும் இலகுவாக அமையுமெனத் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் கடந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுத் தீர்மானத்தின்படி பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான விண்ணப்பம் செய்யப்பட்ட போதும், அதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. இதனை இங்கே இருக்கின்ற அமைச்சர், அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசாங்கத்தோடு மிக நெருக்கமான உறவைப்பேணுகின்ற பாரளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இது தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென அருந்தவபாலன்  தெரிவித்ததோடு, பொது மக்கள் சார்பான நியாயமான கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்தார்.

அருந்தவபாலனின் கருத்துக்கு அரச உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என மண்டபத்திலிருந்த அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

இதனால் கடும் சினமடைந்த பா.உ சுமந்திரன் அருந்தவபாலனை நோக்கி கை தட்டுவதற்கு ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தி விட்டு, அரசியல் ரீதியாக கதைக்க வேண்டாம். உங்களை இணைத்தலைவர் என்ற வகையில் இனி மேல் இவ்வாறு பேச வேண்டாம் என நான் உங்களை எச்சரிக்கின்றேன் எனத்தெரிவித்தார்.

அருந்தவபாலனை பேச விடாது சுமந்திரன் எச்சரிக்கை விடுத்த போது, சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதன் போது, கூட்டத்தை நடத்துகின்ற தலைவர் இவ்வாறு  சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதென அருந்தவபாலன் தெரிவித்த போது, நான் இவ்வாறு தான் பேசுவேன் நான் இணைத்தலைவர் என சுமந்திரன் பதிலளித்தார்.

இதன் பின் கூட்டம் வழமை போல் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, இணைத்தலைவரான பா.உ சுமந்திரன் இடைநடுவில் வெளியேறிச் சென்றார். இதையடுத்து, அவருக்குப்பின் இணைத்தலைவரான இராஜாங்க அமைச்சர் வியஜகலாவும் வெளியேறினார். எனினும், இன்னொரு இணைத்தலைவரான பா.உ அங்கஜன் தலைமையில் தொடர்ந்து 6 மணி வரை கூட்டம் இடம்பெற்றது.

இதில் மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், எம்.கே.சிவாஜிலிங்கம்  உட்பட திணைக்களங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.20526188_1032843916853142_8778312542583366214_n 20597058_1032843963519804_3564899530747026594_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here