கடந்த காலப்போராட்டங்கள் நல்லாட்சியில் வெற்றியளிக்கும்-பிரதியமைச்சர் அமீர் அலி

0
224

5எஸ்.எம்.எம்.முர்ஷித்
இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பொறுமை கொண்டால், எங்களுடைய எதிர்பார்ப்புக்களெல்லாம் வெற்றி பெறுமென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்திற்கான பொலிஸ் நிலைய நிரந்தரக்கட்டடத்திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மைச்சமூகம் நுகரக்கூடியளவுக்கு பொலிஸ் நிலையம் மற்றும் காணி விடுவிப்பைக் கொண்டு வந்திருக்கின்றது என்று சொன்னால், சிறுபான்மைச்சமூகம் அரசாங்கத்தின் மீது இன்னும் இன்னும் நம்பிக்கை வைக்க வேண்டுமென்பது தான் பொருளாகும்.

கடந்த காலத்தில் என்ன வேண்டுமென்று போராடினோமோ, அவையெல்லாம் எதிர்காலத்தில் நடக்குமென்ற நம்பிக்கையோடு செயற்படுவோமென்று சொன்னால், முடிந்த வரை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை இந்த ஆட்சிக்காலத்தில் பெறக்கூடிய நிலவரத்திற்குள் வர முடியுமென்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியுள்ளது.

பொலிஸ் நிலையம் இருந்த காணி மீளவும் மக்களுக்கு கையளிக்கப்பட்டு, தங்களுடைய சொந்த நிலங்களில் காலடி வைக்கும் மக்களுக்கு இந்நாள் பெருநாள் என்றால், அது எங்களுக்கும் பெருநாள் தான்.

எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல சமூகங்களும் ஒற்றுமைப்பட்டு, கடந்த காலத்தில் நாங்கள் தூரத்தில் நின்று கொண்டு தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என்றும் வகுத்துக்கொண்டு அகலப்படுத்தியதே தவிர, எங்களை நெருக்கத்திற்கு கொண்டு வரவில்லை.

முப்பது வருடங்கள் அகலப்படுத்திப்பார்த்தோம். இதிலே எந்த சமூகமும் வெற்றி பெறவில்லை. உயர்வும் கிடைக்கவில்லை. அந்த அடிப்படையிலே முப்பது வருட காலம் போதுமானது.

இந்த மாவட்டத்திலே இருக்கிற அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி. எங்களுக்குள் ஒரு பேதமையை வளர்த்துக் கொண்டிருப்போம் என்று சொன்னால், எங்களுடைய மாவட்டம், சமூக உறவு என்றுமே வளராதென்பதை முப்பது வருடங்களுக்குப் பிறகு இந்த சூழ்நிலை உணர்த்தியிருக்கின்றதென்றால், இதற்குள் இன்னும் இழுபட்டுச் சென்று விடக்கூடாதென்று மாவட்ட மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடத்தில் இந்த விடயத்தைச் சொல்லியேயாக வேண்டும் என்றார்.
பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராஜா, ஞா.கிருஸ்ணப்பிள்ளை, பொலிஸ் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா செலவில் இரண்டு ஹெக்டேயர் நிலப்பரப்பில் பிரதான கட்டடத்தொகுதி, நிலையப்பொறுப்பதிகாரி அலுவலகம், ஆயுதக்களஞ்சியம், கடமை உத்தியோகத்தர் அலுவலகம், தொலைபேசி இயக்குனர் அலுவலகம், இரு சிறைக்கூடங்கள், தனி பொலிஸ் அலுவலர்களுக்கான விடுதி என்பன அமைக்கப்பட்டுள்ளது. 1 4 5 8 9 11

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here