புலிகளை விட அஸ்மின் மீதே அதிக வெறுப்பேற்படுகிறது- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்

0
178

ddddgபாறுக் ஷிஹான்
காத்தான்குடி படுகொலை நடந்த நாளை நினைவு கூர்ந்து, புலிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதை விட, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வட மாகாண உறுப்பினர் அஸ்மினின் மீதான வெறுப்பே மிகைத்து நிற்கிறது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது செய்திக்குறிப்பில்,

பதவிகள் எப்படி நேர்மையான போராட்டங்களிலிருந்து தடம் மாறி, சொந்த மக்களையே விலை கேட்குமென்பதை அண்மைக்காலமாக பலஸ்தீனில் அவதானித்து வந்தேன். அதிலொரு அங்கத்தையே அஸ்மினிலும் இன்று அவதானிக்கிறேன்.

புலிகள் தான் முஸ்லிம்களை காத்தான்குடிப் பள்ளிவாயலில் சஸுஜூதிலிருக்கும் போது, சுட்டுக்கொன்றார்கள் என்ற விடயத்தில் எந்த முஸ்லிம் அரசியல் தலமைகளும் இரண்டாவது கருத்தை முன்வைத்ததில்லை. ஏன் தமிழ் அரசியல், ஆயுதத்தலைமைகள் கூட மறுத்ததில்லை. அதனை மறப்போம். மன்னிப்போம் என்றே கூறுகின்றனர்.

ஆனால், முதன்முதலில் அஸ்மின் மாத்திரமே மிக நூதனமாக மறுத்திருக்கிறார் அல்லது இருட்டடிப்புச் செய்ய முயற்சித்துள்ளார். தனது சொந்த மக்களின் இரத்தம் உறைந்த வரலாற்றை இவ்வளவு இலகுவாக அவரால் மறைக்க முடிந்தது எப்படியென்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை.

இந்த நாளை “தேசிய ஸுஹதாக்கள் தினமாக” பிரகடனம் செய்வதில் முன்னின்று உழைத்தவர்கள் நாங்கள். தேசிய ஸுஹதாக்கள் தினமாக பிரகடனப்படுத்திய நாளில் (2004 ஆகஸ்ட்) முஸ்லிம்கள் கொல்லப்படட அதே மொஹிதீன் மஸ்ஜிதிற்கருகில் நடந்த பிரகடன மேடையில் உரையாற்றி விட்டு, காத்தான்குடிக்கு சென்ற வாகனத்தை மாற்றியே ஊருக்கு வர முடிந்தது. அப்படி புலிகளின் அச்சுறுத்தல் இருந்தது. புலிகள் சுதந்திரமாக நடமாடிய புரிந்துணர்வுக் காலமது.

அஸ்மின் அவை யாவற்றையும் மிக இலகுவாக மறந்து விட்டது கவலையளிக்கிறது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் இலகுவில் விலை போவார்கள் என்பதை அஸ்மின் மீண்டும் நிரூபித்து விட்டதில் மனம் வேதனைப்படுகிறது. எல்லா முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் போல நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் மாமூலான ஒன்று தான் என்பதற்கு உதாரணம் கொடுத்திருக்கிறார்.

ஏலவே அவர் முஸ்லிம்களுக்கு தனியான அதிகார அலகு கொடுக்கத்தேவையில்லையென்று பேசிய போதே இடைநிறுத்தியிருக்க வேண்டும். இப்போது தலைக்கு மேலால் சென்று விட்டதென்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

நானறிய அவர் அண்மைக்காலமாக ஏற்படுத்திக்கொண்டிருக்கும் உறவு, அவரை இன்னும் என்னவென்னவெல்லாம் செய்யத்தூண்டும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முதலாவது தெரிவே இவ்வாறு பிழைத்துப்போனதில் கட்சி பேதம் தாண்டி எனக்கு கவலை தருகிறது.

எனது பார்வையில் அஸ்மின் மன்னிக்க முடியாத ஒரு சமூக வடு என அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here