தேசியப்பட்டியலுக்காய் முஸ்லிம்களை விற்ற அய்யூப் அஸ்மின்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

0
187

rgreமீள்பிரசுரம்

தேசியப்பட்டியலுக்காக முஸ்லீம்களை விற்பனை செய்த வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் பதவி நீக்கம் என்ற NFGGன் ஊடக அறிக்கை அறிவுபூர்வமாக இருந்தாலும், நமது சமூகத்தைப் பதவிக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் அடகு வைத்தமைக்கான காரணம் தெளிவுபடுத்தப்படவில்லை.

முஸ்லீம்களின் பாதுகாப்பு, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரப்பங்கீடு தொடர்பில் முஸ்லீம்களுக்கு விடுதலைப் புலிகளுடன் கூட்டு சேர்ந்து துரோகம் செய்தவர்கள். வெட்கமில்லாமல் இதுவரை எதுவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முஸ்லீம்கள் நம்பிக்கையை உருவாக்காமல் மௌனமாக இருப்பவர்கள்.

இவர்களுடன் நீங்கள் பேசிய விடயம் என்ன? இதுவரை வடமாகாண முஸ்லீம்கள் தொடர்பில் நீங்கள் சாதித்தது என்ன? NFGG யின் சிலர் வெளிநாட்டு தமிழ் அமைப்புகளின் கைபொம்மைகளாகவுள்ளனர். இருந்தும் சிறாஜ் போன்ற சிறந்த ஆளுமைமிக்கவர்கள் இவர்களின் செயற்பாடுகளை எந்தளவிற்கு ஏற்றுள்ளர்கள் என்ப துதான் கேள்விக்குறி.

1-கடந்த மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னரான உங்கள் பொது வாழ்வில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக அடித்துத் துரத்தப்பட்ட வடமாகாண முஸ்லீம்களின் இனச்சுத்திகரிப்பு தொடர்பில் எச்சந்தரப்பத்திலாவது மூச்சு விட்டீர்களா?

2-மாகாண சபையில் போனஸ் ஆசனம் பெற்று தலையாட்டும் பொம்மையாக இருக்கின்றீர்கள். நீங்கள் வடமாகாண முஸ்லீம்கள் தொடர்பில் 68 தடவைக்கு மேலாக கூடி ஆயிரம் பிரேரணை நிறைவேற்றிய சபையில் செய்தது என்ன?

3-வீரவணக்கம் முதல் ஜெயலலிதா வரை மௌன அஞ்சலி உங்களால் வடக்கு முஸ்லீம்கள் விவகாரம், கிழக்கு படுகொலை தொடர்பில் என்ன செய்தீர்கள்.

4-பல வருடங்களாக தொடர்ச்சியாக முஸ்லீம்கள் விடயத்தில் அராஜகம் புரியும் ஞான சார தேரர் தொடர்பில் வாய் திறக்காத நீங்கள் நேற்று நடந்த மட்டக்களப்பு சம்பவம் தொடர்பில் மௌனம் கலைகின்றீர்கள்!

5-வடகிழக்கு இணைவதால் முஸ்லீம்களுக்கான பாதுகாப்பு மற்றும் அரசியல் அந்தஸ்து அஸ்தமமாகும். பிரிக்கப்பட்ட வடகிழக்கில் இடம்பெறும் அநீதிகளுக்காக ஊமையாக இருக்கும் உங்களால், இணைக்கப்பட்ட வடகிழக்கில் கோமா நிலையாகி விடும்.

6-உங்களுக்கு வழங்கப்பட்ட பதவிக்கு மற்றும் உடையவராக இருங்கள். அதை மீறி சமூகம் என்ற அமானத்தை உங்கள் தலையில் சுமந்து துரோகிப்பட்டம் பெற வேண்டாம்.

7-வடக்கு முஸ்லீம்களின் அரசியல் பலரின் உயிர்த்தியாகங்கள், இழப்புகள் மீது மீளக்கட்டி அமைக்கப்படுகிறது. இதன் மீது சுயநல அரசியலுக்காக தலையை நீட்டி பாவத்தைச் சுமக்க வேண்டாம்.

8-வடகிழக்கு இணைப்புக்காக வீதிகளில் போராட்டம் நடத்துவதை நிறுத்தி, வடக்கிலிருந்து வெளியேறி இன்னும் முகாம்களில் வாழும் மக்களிடம் ஒரு நிமிடமாவது பேசிப்பாருங்கள். நீங்கள் தவறான இடத்திலிருப்பது தெளிவாகும்.

9-வரலாற்றில் ஒவ்வொரு கால கட்டத்திலும் முஸ்லீம்களின் அரசியலை காலில் போட்டு பந்தாடும் போது அதற்கு முஸ்லீம் பெயர் தாங்கிகள் துணை போனது ஞாபகமிருக்கிறதா?

10-நான் அமைச்சர் றிசாதையோ அவரது அரசியலையோ ஒரு போதும் ஆதரிப்பதில்லை. இருந்தும் சுமார் 14 வருடங்களாக அந்த மக்களுக்காக விரும்பியோ விரும்பாமலோ பெறும் போராட்டத்தை நடத்துகின்றார். இவருடன் சேராவிட்டாலும், புதிய பாணியில் அந்த மக்களுக்காக உங்களால் போராடலாமே. இதைவிடுத்து, அவரை அழிக்க முயலும் எதிரிகளோடு சேர்ந்து நாகரீகம் பேசுகிறீர்கள்.

11-வடக்கில் ஒரு பள்ளிவாசலைத் திறந்தீர்கள். ஆனால், 30க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருந்த இடமில்லாமல் போயுள்ள வரலாறு தெரியுமா?

12-ஒரு முஸ்லிமாக இருக்காவிட்டாலும், சரியான அரசியல்வாதியாக இருங்கள். உங்கள் மனச்சாட்சிக்கெதிராகப் பதவி இருக்குமானல் தூக்கியெறியுங்கள். ஆனால், உங்களுக்கு வாழ்க்கையில் இது போன்ற பதவி கிடைக்க முடியாதென்பது தவிர்க்க முடியாததே.

13-உங்கள் பதவிக்காலத்தில் எமது சமூகத்தைச் சார்ந்த எவருக்காவது குறைந்த பட்சம் வீதிச்சுத்திகரிப்பு தொழிலாவது வழங்கினீர்களா? அதிகமானவர்களது இடமாற்றம் தொடர்பில் ஊமையாகவே இருந்தீர்கள்.

14-இந்தியாவில் வழங்கப்பட்ட வீடுகள், புனர்வாழ்வு அமைச்சினால் கட்டப்படும் வீடுகள் தொடர்பில் ஆயிரம் முறை சபையில் சண்டை பிடிக்கின்றீர்கள். ஒரு நிமிடமாவது புத்தளம் மற்றும் இதர மாவட்டங்களில் கொட்டிலில் வாழும் நமது உறவுகளுக்காகப் பேசக்கூடாதா?

உங்களை அடமானம் வைத்த மாபியாக்கும்பம் நல்லாட்சி என்ற பெயரில் கிழக்கில் பெரும்பான்மை முஸ்லீம் மக்களால் தூக்கி வீசப்பட்டதை அறிந்திருப்பீர்கள். உங்கள் தலைவரை குறைந்தது ஒரு மாகாண சபை உறுப்பினராகவாவது தனித்துப் போட்டியிட்டு, சொந்த மண்ணில் வெற்றி பெறச்செய்யுங்கள்.

அதன் பின்னர் மற்றைய மாவட்டங்களின் பிரதிநிதி பற்றிப்பேசலாம். கடந்த பொதுத்தேர்தலில் மைத்திரி, ரணிலால் ஒதுக்கப்பட்ட நீங்கள் கடைசியில் உங்கள் எதிரி SLMCல் சரணடைந்தீர்கள். உங்களுக்கு மக்களும் ஹக்கீமும் நல்ல பாடம் கற்பித்தார். உங்களுக்கு தேசியப்பட்டியல் வேண்டுமென்றால், ஏதாவது சிறிய கட்சிகளுக்கு பணம் கொடுத்து வாங்கலாமே.

ஆகவே, பதவிக்கு மட்டும் நன்றிக்கடனாக இருங்கள். அதை விடுத்து, வடகிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லீம்களின் உரிமைகள் பற்றிப்பேசி சமூகத்தின் இளைஞர்களைப் பிழையாக வழி நடாத்த வேண்டாம். இல்லையேல், பதவியைத் தூக்கி வீசி விட்டு மக்களுக்காக உண்மையாகப் பேசுங்கள்.

உங்களுக்காக வரலாறும் காலமும் இன்னும் காத்திருக்கிறது. கடந்த மாகாண சபை மற்றும் உள்ளூராட்சித்தேர்தலில் திருகோணமலையில் போட்டியிட்டீர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து நடாத்திய நாடகத்தால் பல முஸ்லீம் பிரதிநிதிகளை இழந்தோம். அம்பாறை மாவட்டத்தில் குறைந்தது ஒரு உள்ளூராட்சிப் பிரதிநிதியைக்கூட பெற முடியாத நீங்கள்? தேர்தலுக்கு மட்டும் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை செற்ப வாக்குகளால் குறைக்க சதிகாரர்கள் செயற்பாட்டுக்கு துணை போகின்றீர்கள்.

நீங்களும் உங்கள் கொள்கையும் உண்மையாக இருந்தால், இவரின் இடத்திற்கு எவரையும் நியமிக்காமல் விடுங்கள். தற்போதைய மைத்திரியை முதலில் ஆதரித்தவர்களும் அவருக்காக கூட்டம் நடாத்தியதும் நீங்கள் தான். ஆனாலும், உங்களின் பதவி மோகம் கண்ட செயற்பாடுகளால் எந்தக்கட்சியிலும் இடம் கிடைக்கவில்லை.

கொள்கைக்காகப் பேசுபவர்களாக இருந்தால், SLMC, TNA வுடன் எந்தக்கொள்கைக்காக சேர்ந்தீர்கள். சமூகம் தற்போது மிகவும் விழிப்படைந்துள்ளது. ஆதலால், அரசியல் பதவிக்காக நேரத்தை வீணடிக்காமல் இஸ்லாமிய மற்றும் சமூகம் சார்ந்த பொதுப்பணிகளைச் செய்யுங்கள்.

ஆகவே, நீங்களும் உங்கள் கட்சியும் பேசுகின்ற கொள்கைக்கு உண்மையாக இருங்கள். பதவியைத் தூக்கி வீசி விட்டு சமூகத்திற்காகப் போராடுங்கள். பல நூறு ஆசனங்களைப் பெறலாம்.

குறிப்பு
வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் கருத்துக்களும் போக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு மாற்றமானதாக அமைந்துள்ளதுடன், இவ்வாறான இவரது செயற்பாடு தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கண்டு கொள்ளாமை மக்கள் வைத்திருக்கும் நல்லபிப்பிராயத்தையும் ஆதரவையும் இல்லாமல் செய்து விடும்.

இவர் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று வர வேண்டியதொரு கட்டாயத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுக்கோப்பு மற்றும் தலைமைத்துவத்தை மேடைகளில் குரலுயர்த்திப் பேசி மற்றவர்களை விமர்சிக்கும் அப்துல் றகுமான் போன்றவர்கள் அஸ்மியின் பகல் கனவுப்பேச்சுகளுக்கு பதில் கூற வேண்டும். கிழக்கில் முஸ்லீம்களின் அதிகாரத்தையும் சுயாதீனப்போக்கொயையும் இல்லாதொழிக்க இனவாதச் சக்திகள் கூட்டமைத்து இயங்குகின்றனர். இந்தச்சந்தர்ப்பத்தில் முஸ்லீம்களைக் காட்டிக் கொடுக்கும் அல்லது துரோகங்ளுக்கு துணை போகின்றவர்கள் மக்களால் தூக்கி வீசப்படுவதோடு தண்டிக்கவும் படலாம்.

By Fahmy Mohamed
Solicitor and Human Rights Researcher United Kingdom

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here