கல்முனை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் அவல நிலை: பெயரளவில் இயங்குகிறதா? பொது மக்கள் கேள்வி

0
171

PIC 1(எம்.எம்.ஏ.ஸமட்)
இம்மாட்ட வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் மேற்படி கேள்வியை எழுப்பும் பொது மக்கள், இங்கு காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில், இவ்வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் அவற்றினால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் நோயாளர்களும், பொது மக்களும் தெரிவிப்பதாவது,

கல்முனைப்பிரதேசத்தில் 1956ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட இப்பழம்பெரும் வைத்தியசாலையான இவ்வாயுள்வேத வைத்தியசாலை கல்முனையின் பல்வேறு இடங்களில் இயங்கிய நிலையில், 2004ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்து கல்முனை சாகிபு வீதியில் இயங்கி வந்தது.

இவ்வீதியில் இயங்கி வந்த இவ்வைத்தியசாலை 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட கடற்கோள் அனர்த்தத்தினால் முற்றாக அழிவடைந்தது. இவ்வாறு அழிவடைந்த இவ்வைத்தியசாலை புனர்நிர்மானம் செய்யப்படாது, பல வருடங்களாக பராமுகமாகக்காணப்பட்டு வந்தது.

இவ்வைத்தியசாலையைப் புனரமைக்குமாறு இப்பிரதேசத்தின் பல்வேறு தரப்புக்களினாலும் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அதிகாரத்தரப்புக்கள் இவ்வைத்தியசாலையை ஆமை வேகத்தில் புனரமைப்புச்செய்து 12 வருடங்களின் பின்னர்  இவ்வருடத்தின் முற்பகுதியில் மாவட்ட வைத்தியசாலையாகத் திறந்து வைத்தனர்.

இவ்வாறு திறக்கப்பட்ட இவ்வைத்தியசாலையில் நோயாளிகள் அமர்வதற்குக் கதிரைகள் கூட போதுமானதாக இல்லை. ஒட்டு மொத்தமாக 15 பிளாஸ்டிக் கதிரைகளே காணப்படுகின்றன. 30 நோயாளிகள் சிகிச்சைக்காக வருகை தந்தால் 15 நோயாளிகள் கதிரைகளில் அமர, 15 நோயாளிகள் நின்ற நிலையில் நிற்க வேண்டியுள்ளது.

அயல் கிராமங்களிலுள்ள மாவட்ட ஆயுள்வே வைத்தியசாலைகள் பல்வேறு வசதிகளுடன் இயங்கி வருகின்ற நிலையில், கல்முனை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் காணப்படும் அவல நிலைகளை நோக்குகின்ற போது, இது தானா ஒரு மாவட்ட வைத்தியசாலையின் இலட்சணம் என கேள்வியெழுப்பத் தோன்றுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அரசியல் அதிகாரங்களால் அலங்கரிக்கப்படும் கல்முனைப் பிரதேசத்தின் ஒரு மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் நோயாளிகள் அமர்வதற்குக் கதிரைகள் கூட போதுமானதாக இல்லையயென்றால், இவ்வைத்தியசாலை பெயருக்காகவா மாவட்ட ஆயள்வேத வைத்தியசாலையாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது எனக் கேள்வியெழுப்பும் நோயாளிகள், இங்கு கடமை புரியும் உத்தியோகத்தர்களில் ஓரிருவர் விடுமுறை எடுத்தால் ஒரு உத்தியோகத்தரே நோயாளியைப்பதிவு செய்யும் பணியிலும், நோயாளர்களுக்கு மருந்து கொடுக்கும் பணியிலும், ஏனைய பணிகளிலும் ஈடுபடுகின்றார்.

இந்நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலுள்ள மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலைளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் இவ்வைத்தியசாலைக்கு வழங்க சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும், குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சராகவுள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் இவ்வைத்தியசாலைக்கான போதிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் பிரதேச பொது மக்களும் நோயாளர்களும் கோரிக்கை விடுகின்றனர்.

இதே வேளை, கல்முனையை துபாய் நாட்டிலுள்ள நகரங்களுக்கு ஒத்ததாக அபிவிருத்தி செய்வதற்கான திட்ட வரைபுகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், ஒரு மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலைக்குரிய வைத்தியர் தங்குமிட அறைகள், மருந்துக்களஞ்சி அறை உள்ளிட்ட  பல்வேறு அடிப்படை வசதிகளையும், ஒரு வைத்திய அத்தியட்சகர், ஒரு வைத்திய அதிகாரி, ஒரு மருந்துக்கலவையாளர் மற்றும் ஒரு முகாமைத்துவப் பணியாளரைக் கொண்டு இயங்கும் இவ்வைத்தியசாலைக்குத் தேவையான அத்தனை ஆளணி வெற்றிடங்களையும் நிரப்பி, ஒரு மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலைக்குரிய வசதிகளுடன் இவ்வைத்தியசாலையை இயங்கச் செய்வதே அரசியல் அதிகாரங்களினதும், அரச இயந்திரங்களினதும் முதற்பணி எனச்சுட்டிக்காட்டுவது அவசிமாகும்.  PIC 1 PIC 2 PIC 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here