காணியை மீளக்கோரி தொடரும் நாவலடி மக்களின் உண்ணாவிரதம்

0
154

ppp (4)கல்குடா செய்தியாளர்
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதி நாவலடியில் படையினர் நிலை கொண்டுள்ள தமது குடியிருப்புக்காணிகளை படையினர் விடுவிக்கும் வரை நேற்று ஐந்தாவது நாளாகவும் செவ்வாய்கிழமை காணியை இழந்த மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆரம்பமான உண்ணாவிரதப் போராட்டம் எதுவித உறுதிமொழிகள் மற்றும் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் வருகை தராமையால் ஐந்தாவது நாளாகவும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாவலடிச்சந்தியில் அமைந்துள்ள இராணுவ முகாம் பகுதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் 8 ஏக்கர் தனியார் காணியை விடுவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது, நல்லாட்சி அரசே அகதிகளாக்கப்பட்ட எமக்கு நாம் இழந்த காணியை வழங்கு, 8 ஏக்கர் காணியில் 4 ஏக்கர் காணி இராணுவ முகாமிக்கு எடுத்து, மிகுதி 4 ஏக்கர் காணியை எமக்கு வழங்கு, 5 நாட்களாகியும் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாரும் வந்து பார்க்கவில்லை போன்ற வாசகங்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இங்கிருந்து 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக விரட்டியடிக்கப்பட்ட தாங்கள், 1968ஆம் ஆண்டு முதல் மேற்படி பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளதாகவும், அங்கு வாழ்ந்தமைக்கான அனைத்து ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

1990ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாவலடிப் பகுதியில் வசித்த மக்கள், இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் தாங்கள் அகதிகளாக வசித்து வந்துள்ளனர்.

தற்போதைய நல்லாட்சியின் சுமூக சூழ்நிலையில் தமது பழைய குடியிருப்பு இடங்களை படையினர் திருப்பி ஒப்படைக்க வேண்டும். தமது வீடுகள், கடைகள் உள்ளடங்கலாக அசையும் அசையாச்சொத்துகள் அனைத்தையும் படையினர் அழித்து விட்டே அப்பகுதியில் இராணுவ முகாமை அமைத்துக் கொண்டதாகத் தெரிவிக்கின்றனர்.

1968ஆம் ஆண்டு முதல் மேற்படி பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து வந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, 1990ஆம் ஆண்டு இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.

1990ஆம் ஆண்டு முதல் இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டுமென்பதுடன், நட்டயீட்டையும் பெற்றுத்தந்து மீளக் குடியேற்ற வேண்டுமென்று அரசாங்க அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் தெரியப்படுத்திய போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே உண்ணாவிரதமிருக்கும் நிலைக்கு மீண்டும் வந்துள்ளதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

நாவலடிப்பகுதியில் தற்போதுள்ள  இராணுவ முகாம் 18 பேரின் காணிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாம் அமைக்கப்பட்டதன் காரணமாக, 18 பேர் தமது வீடு வாசல்களை இழந்திருக்கின்ற போதிலும், 02 பேருக்கு மாத்திரம் பிரதேச செயலகத்தால் மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள 16 பேரினதும் காணிகளைப் பெற்றுத்தர வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.ppp (1) ppp (2) ppp (3) ppp (4) ppp (5) ppp (6)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here