கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென்பதை நியாயப்படுத்த, ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் இதுவரை சாதித்தது என்ன?

0
284

fgfசட்சிவநாதன் ஆறுமுகம்

தற்போது கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. சிலர் வௌிப்படையாக இதனை முன்வைத்து வருவதுடன், இன்னும் சிலர் சமூக ஊடகங்கள் வாயிலாகக்கூட இது தொடர்பில் பகிரங்மாகப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்க பதவிகள் அவசியமா? இல்லை மக்கள் பயனடையப் பதவிகள் அவசியமா? என்ற கேள்வி இதன் போது முன்வைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விவாசயத்துறை அமைச்சு மற்றும் கல்வியமைச்சு ஆகிய இரு பிரதான அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கல்வி மற்றும் விவசாயம் ஆகியன  மிகப்பிரதானமான துறைகள் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

கடந்த  2015 ஆம் ஆண்டு  கல்வியமைச்சையும் விவசாய அமைச்சையும் பொறுப்பேற்ற இரு அமைச்சர்களாலும் கல்வி மற்றும் விவசாயத்துறை ஆகியன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளனவா? கல்வியமைச்சரால் கல்வி சார் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்விக்கான விடையை நாம் ஆராய்வோமேயானால், நாம் பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

கிழக்கின் முதலமைச்சராக ஹாபிஸ் நசீர் அஹமட் பதவியேற்றதிலிருந்து கல்வியியல் கல்லூரிப்பிரச்சினை மற்றும் பட்டதாரிகளின் பிரச்சினை ஆகிய இரண்டு பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.

இந்த இரண்டு பிரச்சினைகளும் கல்விசார் பிரச்சினைகள் என்பதை யாரும் அறியாமலில்லை. அவ்வாறானால், அப்பிரச்சினைகளைத் தீர்க்கப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எடுத்தாரா? என்ற வினாவுக்கு இல்லையென்றே பதிலளிக்க வேண்டும்.

அவ்வாறானால், கல்வியியல் கல்லூரிப்பிரச்சினையின் போது கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் வௌி மாகாணங்களுக்கு நியமனம் பெற்று நிர்க்கதியாய் நின்ற போது, கிழக்கின் கல்வியமைச்சர் எடுத்த நடவடிக்கை தான் என்ன?
ஆனால், கிழக்கின் முதலமைச்சரே கல்வியமைச்சரின் பணியையும் முன்னெடுத்து இன, மத பேதமின்றி மாணவர்களின் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுத்தார்.

சரி இப்போது பட்டதாரிகளின் விடயத்திற்கு வருவோம்.

கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் வீதியோரம் நின்று போராடிய போது, அவர்களுடன் நின்று புகைப்படங்களுக்கு காட்சி தர மாத்திரம் எல்லா அரசியல்வாதிகளும் முண்டியடித்து நின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணக் கல்வியமைச்சர் உட்பட அனைவரும் புகைப்படங்களை அலங்கரிக்க முண்டியடித்து நிற்கையில், பட்டதாரிகளின் தீர்வுக்காய் முன்னின்றவரும் கிழக்கு முதலமைச்சரே என்பதில் ஐயமில்லை.

பல்லாயிரம் வாக்குறுதிகளை பலர் முன்வைத்த போதும், கிழக்கு முதலமைச்சரின் போராட்டத்தினால் கொண்டு வரப்பட்ட 1700 பேருக்கான நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சைகளுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே, நாம் ஆதிக்க மனோபாவத்தில் எமது ஆட்சி தொடர்பில் தீர்மானங்களை முன்னெடுப்பதால், பாதிக்கப்படப்போவது மக்களே என்பதில் ஐயமில்லை.

மக்கள் நல்ல தலைமைகளுக்கே தவம் கிடக்கின்றார்கள் .ஒரு செயற்றிறன்மிக்க தலைமையைப் பயன்படுத்த வேண்டியது அந்த மக்களின் கடமை. ஆனால், அவ்வாறான தலைமையையும் இனம் மற்றும் மதம் என்ற மேலாதிக்கப்போக்கினால்  இழக்கக்கூடிய சூழ்நிலையை நமது சுயலாப அரசியலுக்காக நாம் ஏற்படுத்தப் போகின்றோமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தமிழ் மக்களான நாம் யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால் பின்னடைவைக் கண்டுள்ளோம். ஆகவே, எட்டாக்கனியான அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை எமக்குள்ளது. இதனைக் கொண்டு சேர்ப்பதி்ல் எம் தலைமைகளுக்குள்ள இயலாமையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, திறந்த மனதுடன் இது தொடர்பில் நாம் சிந்திக்க முன்வர வேண்டும். தற்போதைய கிழக்கு முதலமைச்சரூடாக நமது பல பகுதிகளில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பூர் சீதனவௌி பகுதியில் ஆடைத்தொழிற்சாலையொன்று நிர்மாணிக்கப்படுகின்றது. கிழக்கு முதலமைச்சரின் காலத்தில் ஆரையம்பதி உட்பட பல பகுதிகளில் புதிய பிரதேச சபைக்கட்டடங்கள் திறக்கப்பட்டன.

அத்துடன், ஜனாதிபதியின் விஜயங்களின் போது சம்பூர் மற்றும் ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வுகளில் எமது நூற்றுக்கணக்கான சகோதரர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. தற்போது ஆரையம்பதியில் 100 மில்லியன் ரூபா செலவில்  நிர்மாணிக்கப்படவிருக்கும் சுற்றுலாத்தகவல் மையம் ஆகியனவற்றை எமக்கு குறிப்பிடலாம்.

எனவே, கிழக்கை இனத்துவரீதியான வகையறாவுக்குள் நாம் தள்ளி விடாமல், யாருக்கு அதனை அபிவிருத்தி செய்யக்கூடிய ஆளுமையுள்ளதோ, அவரிடமே கையளிப்பது சிறந்ததென்பதே உண்மையான தமிழர்களின் கருத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here