கல்விக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் ரீ.முஸம்மில் அப்பாஸ்-அனுதாபச்செய்தியில் அஸ்வர்

0
90

index(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சட்ட வல்லுனரான ரீ. முஸம்மில் அப்பாஸ், முஸ்லிம் கல்வி மாநாட்டின் ஆரம்ப வெளியீடுகளில் ஆக்கங்களை சிங்கள மொழியில் கொண்டு வருவதற்கு பெரும் உதவி புரிந்தவர். அவருடைய மறைவுச்செய்தி கேட்டு நான் ஆழ்ந்த துயருற்றேன் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

ரீ. அப்பாஸுடைய மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது,

சட்டத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப்பிடித்து, அதற்கான காரியாலத்தையும் அவர் உருவாக்கியிருந்தார். அங்கிருந்து  கல்விப் பணிகளில் ஈடுபட்டார். மலே இனத்தைச்சேர்ந்த இவர், மலாயர்களுடைய கலை, கலாசார, சம்பிரதாயங்கள் பற்றியும் வரலாறு பற்றியும் அன்று பல கட்டுரைகளை சிங்கள மொழியில் எழுதினார்.

சிங்கள மொழியிலும் இவர் பாண்டித்தியம் பெற்றவர்.1970ஆம் ஆண்டில் முதன் முதலில் இவரை இலங்கை வானொலியில் சந்தித்தேன். அப்போது திக்வல்லை எம். ஏ. முஹம்மது மாஸ்டர், முஸ்லிம் சேவையில் ‘உஸ்வதுல் இஸ்லாம்’ என்ற நிகழ்ச்சியை சிங்களத்தில் தயாரித்தளித்தார். அதில் ஒரு கலைஞராக நானும் பங்கு கொண்டேன். பிறகு மர்ஹும் அப்பாஸ் சிங்கள மொழியில் பல ஆக்கங்களைப் படைத்தார். அடிக்கடி பயன்மிக்க உரைகளையும் அதில் அவர் நிகழ்த்தினார்.

இவருடைய கல்விச்சேவையின் சிறப்புக்கு மகுடமாக அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறைந்த கல்விமான் எஸ். எல். எம். ஷாபி மரைக்கார், அவருடைய செயலாளர்  ரீ. ஏ. ஜயா போன்றோர்களோடு ஒன்றிணைந்து இவர் கல்விப்பணியில் ஈடுபட்டார். சிங்களம், தமிழ் இரு மொழிகளில் எது முஸ்லிம்களுடைய போதனா மொழி என்று பிரச்சினை வந்த பெரும் சர்சைக்குரிய கால கட்டத்தில் முழு இலங்கையடங்கிலும், கல்வி மாநாட்டின் ஒரு பிரதிநிதியாக வலம் வந்தார்.

எனவே, கல்விக்காகவும், சமூகத்துக்காகவும் நாட்டு நலனுக்காகவும், சட்டவாக்க மேம்பாட்டுக்காகவும் உழைத்த நெருங்கிய நண்பர் ரீ.எம். அப்பாஸுடைய சேவைகளை வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு, ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here