மரிச்சிக்கட்டி கை நழுவிப்போகும் அபாயம்: எச்சரிக்கிறார் அமைச்சர் ஹக்கீம்

0
86

far1(நாச்சியாதீவு பர்வீன்)
மரிச்சிக்கட்டி பிரதேசம் கைநழுவிப்போகும் அபாயம் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட அப்பிரதேசத்து மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மன்னார் முசலி பிரதேசத்திலுள்ள ஹுனைஸ் நகரில் அமைந்துள்ள ஹுனைஸ் பாரூக் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட கேட்போர் கூடத்துடன் வகுப்பறைக்கட்டடத்தொகுதிகள் இன்று (14) நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது உரை நிகழ்த்துகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்,

கடந்த யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த இந்தப்பிரதேசத்து மக்களின் காணிகளை அரச வர்த்தமானி அறிவித்தலின்படி வில்பத்து வனத்திற்குச் சொந்தமான பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. இந்த விடயத்தில் அப்பிரதேசத்து பூர்வீகக்குடிகளுக்கு அநீதியிழைக்கப்பட்டிருப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கிணங்க, ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அவரது செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட உயரதிகாரிகளுடனான சந்திப்பும் முசலி பிரதேச சபைக்கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அதன் பிற்பாடு ஜனாதிபதியின் சுயாதீன ஆணைக்குழு இந்தப்பிரதேசத்திற்கு  விஜயம் மேற்கொண்டு இப்பிரதேசத்து மக்களின் உண்மையான நிலவரத்தைக் கேட்டறியும் நடவடிக்கைகளும், எல்லைகளை மீண்டும் இனங்கண்டு உறுதிப்படுத்தும்  நடவடிக்கைளையும் அண்மையில் மேற்கொண்டதாக அறியக்கிடைத்தது. இதன் போது, இந்தப்பிரதேசத்து மக்கள் இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்குச் சரியான தகவல்களை வழங்கத்தவறி விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதுள்ளன.

எனவே, மரிச்சிக்கட்டி, பாலைக்குழி, கொண்டச்சி, கரடிக்குழி ஆகிய பிரதேசங்களில் தமது பூர்வீக நிலத்தை இழந்து வாழ்கின்றவர்கள் தமது முறைப்பாடுகளை விரைவில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்குச் சமர்ப்பியுங்கள். இந்த விடயத்தில் இந்தப்பிரதேசத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் கரிசனையுடன் செயற்படுமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியினைப் பெற்றுக்கொடுப்பத்தில் முன்னிற்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இன்னுமொரு விடயம், இந்தப்பிரதேசத்தில் அநீதி இடம்பெற்றுள்ளது. அதாவது எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் முசலிப்பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது. எமது விகிசாரத்திற்கேற்ப பிரதேச சபை உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்வதற்கு புதிய எல்லைப்பிரிப்பானது தடையாக அமைந்துள்ளது. இது தொடர்பில் எமது ஆட்சேபனைகளை நாம் மிகத்தெளிவாக முன்வைத்தும், மீண்டும் அதே தவறு எல்லைப்பிரிப்பில் இடம்பெற்றுள்ளதென்பது அங்கீகரிக்க முடியாதவொரு விடயமாகும்.

இது தொடர்பில் பலவாதப்பிரதிவாதங்களில் நாம் பங்குபற்றியுள்ளோம். மிகக்குறைந்த அதிகாரத்தையுடைய சபையாக இருந்தாலும், அதிலும் நாம் பாதிப்படைகின்றவர்களாக, நம்மை ஆக்குகின்ற நிலவரம் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியவையே. எனவே, இந்த பிழையான எல்லைப்பிரிப்பு தொடர்பில் மீண்டும் கவனஞ்செலுத்தி எமக்குரிய சரியான அளவீடுகளைப் பெற்றுக்கொள்வதில் நாங்கள் அவதானஞ்செலுத்த வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

இன்று இந்தப்பாடசாலையின் புதிய கட்டடங்களை மிகவும் நேர்த்தியாகவும், இந்தப்பிரதேசத்தின் சீதோஷண நிலைக்கேற்ற வகையில் மூலப்பொருட்களைப் பாவித்துக்கட்டப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, யுஎன் ஹெபிட் நிறுவனத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நானும் பாடசாலைச்சூழலில் வளர்ந்தவன் என்ற ரீதியில் மாணவர்களுக்கேற்ற கற்கின்ற சூழலினை பாடசாலையின் அமைவு பெற்றுக்கொடுக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் முசலி கோட்டத்தில் சுமார் 25 முஸ்லிம் பாடசாலைகள் இருப்பதாக அறியக்கிடைத்தது  இருந்தும், முசலிக்கோட்டத்தில் கடந்த வருடம் இருவர் தான் சித்தியடைந்துள்ளார்கள் என்று கோட்டைக்கல்விப்பணிப்பாளர் கூறுகின்றார்.

மீள்குடியேற்றக் கிராமங்களில் நிலவுகின்ற பெரும் பிரச்சினை இதுவாகும். யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தாம் வாழுகின்ற பிரதேசத்தில் வசதி வாய்ப்போடு வாழுகின்ற போது, அவர்களது பிள்ளைகளை தரமான பாடசாலைகளில் கற்பிக்கின்றனர். அத்தோடு, திறமையான மாணவர்களும் அங்கயே தங்கி விடுகின்றனர். எனவே, இங்கு நல்ல பெறுபேறுகளைப் பெறுவதிலும் திறமையான மாணவர்களை உருவாக்குவத்திலும் நடைமுறைச்சிக்கல் இருக்கிறது.

எதிர்காலத்தில் இவ்வாறான தடைகளைத் தாண்டிய கல்விச்சமூகமொன்று இந்தப்பிரதேசத்தில் உருவாக்குவதை நாம் இணைந்து உறுதி செய்ய வேண்டும். கல்வியுள்ள ஒரு சமூகமே எதிர்காலத்தில் நல்ல முறையிலிருக்கும். எனவே, இந்தப்பிரதேசத்தில் அவ்வாறானதொரு சமூகத்தை நாமனைவரும் சேர்ந்து உருவாக்கும் வழிமுறைகளை ஆராய்வோம் என்றார்.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் ஐக்கிய நாடுகள் மானிட வதிவிட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இப்பாடசாலைக் கட்டடத்தொகுதிகளின் திறப்பு விழா நிகழ்வில், முன்னாள் வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், முத்தலிப் பாவா பாறுக், மன்னார் மாவட்ட வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி செபஸ்ர்டியன், UN ஹெயிட் நிறுவனத்தின் உயரதிகாரிகள் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.far1 far2 far3 far4

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here