அரசியல் மனநோயாளிகளுக்கு என்னிடத்தில் மருந்து கிடையாது-வாழைச்சேனையில் பிரதியமைச்சர் அமீர் அலி

0
297

14வாழைச்சேனை எஸ்.எம்.எம்.முர்ஷித்
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் அடுத்த தடவை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வரமாட்டார் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பலநோக்கு கூட்டுறவுச்சங்க அலுவலகக்கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வியாழக்கிழமை மாலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு முதலமைச்சர் தாம் செய்த அபிவிருத்தியை மேடையில் கோவையாகக் கொண்டு காட்டி அரசியல் செய்வது முதிர்ச்சியான அரசியல்வாதிக்கான அடையாளமாகாது.  அவைகளைப் பேசுவதென்றால் விவாத மேடையில் தான் பேச வேண்டும்.

இவ்வாறு நாங்கள் செய்த அபிவிருத்திகளைப் பட்டியலிட்டுச் சொல்லப்போனால், கிழக்கு முதலமைச்சரால் எங்களை முந்த முடியாது. அவருடைய ஏறாவூர் பகுதிலே கடந்த காலத்தில் அரசியலுக்கு வருகின்ற பொழுது, அவருடைய கட்சிக்கெதிராக தில்லு முல்லு பேசி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கெதிராக வழக்குப்பேசியவர்.

கல்குடாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருக்கின்ற தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பசீர் சேகுதாவூத் இருவரும் தப்பாகப் பிறந்தவர்கள் என்று பேசினார். இதனைக்கல்குடா சமூகம் மறந்திருக்க முடியாது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக நீதிமன்றம் சென்று, இக்கட்சி எனக்கு வேணுமென்று சொன்னவர் இன்று பாதுகாவலன் என்ற அடிப்படையில் பேசுவதற்கு வெட்கம், ரோசம், மானம், மரியாதை இருக்கின்ற முதலமைச்சராக இருந்தால், இந்தப் பிரதேசத்திலே அந்தக்கோவையை உயர்த்திக்காட்டிப் பேசுகின்ற யோக்கியதையற்றவராக இருக்க வேண்டியவர் என்பது என்னுடைய கருத்தாகும்.

அரசியலிலே கருத்து வேறுபாடுகள் அரசியல் காலத்தில் மாத்திரம் தான் இருக்க வேண்டும். தேர்தல் வருகின்ற பொழுது கருத்து முரண்பாடுகளைப் பேசிக்கொள்கின்றோம். தேர்தல் இல்லாத காலத்தில் சமூகத்திற்கு நல்ல தலைமைத்துவத்தைச் செய்கின்ற பண்பைக் கொண்டிருக்க வேண்டியவர்கள் மனநோயாளர்களாகப் பேசுகின்றார்கள் என்றால், என்னிடத்தில் தருவதற்கு மருந்து கிடையாது.

கிழக்கு மாகாண சபை கலைத்து விட்டால், எனக்கு தொங்க கயிறில்லையே என்கின்ற பயம், அச்சம் அவரை அழுத்திக் கொண்டிருக்கின்றது. நாங்கள் ஆரம்பித்து வைத்த வேலைகளை திறந்து வைத்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

ஏறாவூரிலே பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹீர் மௌலான ஆரம்பித்து வைத்த நகர சபைக்கட்டுமானத்தை பிரதமரைக்கொண்டு வந்து திறக்கின்ற நிலைமை. இதைத்தெரிந்திருந்தால் பிரதமரும் வெட்கப்பட்டுப் போயிருப்பார்.

இப்படிக்கட்டப்பட்ட விடயத்தை ஆரம்பித்தவர் உயிரோடு இருக்கும் பொழுது செய்கின்ற நிலவரத்துக்குச் சொந்தக்காரரான முதலமைச்சர் எங்களுக்கு கோவைகளைக் காட்டிப்பேசுவதற்கு எந்த யோக்கிதையும் கிடையாது.

தேசிய ஊடகத்தில் கிழக்கு முதலமைச்சரைப் பகிரங்கமாக விவாதத்திற்கு அழைக்கின்றேன். நீங்கள் கடந்த காலங்களில் செய்த சில்மிசங்களை, அருவருப்புக்களை தேசியத்திலே உங்களுக்கு சொல்லித் தர வேண்டியிருக்கின்றது.

கிழக்கு முதலமைச்சர் மாகாண சபைத்தேர்தலில் வெல்ல வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன். ஏனெனில், அவர் எனது நல்ல நண்பர். ஆனால், எதிர்காலத்தில் முதலமைச்சர் பதவி அவருக்கு கிடையவே கிடையாது என்றார்.

கோறளைப்பற்று மத்தி பலநோக்கு கூட்டுறவுச்சங்க தலைவர் எம்.எப்.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.கனகசுந்தரம், மட்டக்களப்பு கூட்டுறவு தலைமையக உத்தியோகத்தர்களான கே.மகேஸ்வரன், எஸ்.எல்.ஏ.காதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட இருபது இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் கூட்டுறவுச்சங்க அலுவலகக்கட்டடம் அமைக்கப்படவுள்ளது.01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here