எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய மஹிந்தவின் விசுவாசிகள், கஜேந்திரகுமாரின் ஆதரவாளர்களுக்கெதிராக விரைவில் சட்ட நடவடிக்கை-எஸ்.யோகேஸ்வரன் எம்பி

0
327

DSC_0075வாழைச்சேனை எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு வாழைச்சேனை மீராவோடை சக்தி வித்தியால மைதானக் காணி முஸ்லிம்களுக்குரியது என நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியது கிடையாது.

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசிகளும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்காரரும் இணைந்து நான் தெரிவிக்காதவொன்றை இவர்கள் திட்டமிட்டு புனைந்து எனக்கெதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

இவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையெடுப்பதற்கான ஒழுங்குகளைச் செய்து வருகிறேன். இவ்வாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மீராவோடை சக்தி வித்தியால மைதானக்காணி முஸ்லிம்களுக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறியதாகக் குற்றஞ்சுமத்தி அவருக்கெதிராக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக மக்களைத் தெளிவுப்படுத்தும் வகையில் நேற்று (18) வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு நகரில் கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை மங்களராமய விகாராதிபதியுடன் இணைந்து செயற்படும் சிலர் எனக்கெதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு கொடும்பாவி எரித்து யோகேஸ்வரன் ஒழிக, கள்ளன், தமிழ் ஹாஜியார் யோகேஸ்வரன் எனக்கோசமிட்டதைப் செய்திகள் வாயிலாக அறிந்து கொண்டேன.

வாழைச்சேனை மீராவோடை சக்தி வித்தியாலய மைதானத்துக்கு 125 வருடங்களாக முஸ்லிம்கள் உரிமையாளராக இருப்பதாக நான் கூறியதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் சுட்டிக்காட்டினார்.

குறித்த நபர் மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசி. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலில்களில் அவரது வெற்றிக்காக பிரசாரங்களில் ஈடுபட்டவர். தற்பொழுது அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து செயற்படுகிறார். மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியுடன் நேரடித் தொடர்பு வைத்துள்ளார்.

மீராவோடை சக்தி வித்தியால மைதானக்காணி முஸ்லிம்களுக்குரியது என நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறியது கிடையாது. அவர்கள் அந்த பகுதியில் 125 வருடமாகவோ அல்லது பூர்வீகமாகவோ வசிக்கின்றார்கள் என்றும் கூறியது கிடையாது. நான் தெரிவிக்காதவொன்றை இவர்கள் திட்டமிட்டு புனைந்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

இது மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமாகும். மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ண தேரர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சிலர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளார்கள்.

அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததைப் பற்றியோ அல்லது பொம்மை எரித்ததைப் பற்றியோ நான் கவலைப்படவில்லை. இது பொய்யானதொரு நடவடிக்கை. நான் எப்பவும் எமது மக்களின் சார்பாக இருப்பவன். நீதி, நியாயம், தர்மத்தைக் கடைப்பிடிதேயாகுவேன்.

நான் கூறாதவொன்றைக் கூறியதாக குற்றஞ்சுமத்தி எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பாக நீதிமன்றம் செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றேன். எனது சட்டத்தணியூடாக மடல்களை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்துள்ளேன். நான் கூறிய கருத்தை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.

குறித்த தேரர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு பல துரோகங்களை இழைத்து வந்துள்ளதை அறிந்திருந்தும், ஒரு சிலர் அவருடன் இணைந்து செயற்படுவது மிகவும் வேதனையளிக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல இனங்களினாலும் கடும் சிங்கள பௌத்த போக்குடைய நபரென தேரேர் அடையளப்படுத்தப்பட்டவர். சட்டம் ஒழுங்கை மதிக்கத் தெரியாதவர்.

மட்டக்களப்பு மாவட்ட எல்லை கெவிளியாமடு பகுதியில் சட்ட விரோத சிங்களக்குடியேற்றத்ததுக்கு இவர் முற்பட்ட போது, அதற்கு அனுமதி மறுத்த பிரதேச செயலாளரை அலுவலகம் சென்று இன துவேசத்துடன் தாக்க முற்பட்டவர். குறித்த பகுதியில் சிங்களவர்களையும் திரட்டிக்கொண்டு அந்தப்பகுதியில் காணி பிடிக்க முற்பட்டார். அதைத்தடுத்த கிராம சேவை அதிகாரி தகாத வார்த்தைகள் மற்றும் துவேச சொற்களினாலும் எச்சரிக்கப்பட்டார்.

மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பௌத்த அடையாளங்கள் இருப்பதாகக் கூறிக்கொண்டு அப்பகுதிகளில் பௌத்த விகாரைகளை அமைத்து, சிங்க மக்களைக் குடியேற்ற வேண்டுமென நடந்து கொண்டவர். இதற்காகத்தான் பொதுபலசேன பௌத்த பிக்குகளை மட்டக்களப்புக்கு வரவழைத்து, அந்த இடங்களுக்கு அழைத்துச்சென்று அடையாளங்காட்டியுள்ளார். தொல்பொருள் திணைக்களத்தை அதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

மேய்ச்சல் தரைக்கு பயன்படுத்தப்படும் மாதவனை மற்றும் மயிலத்தமடு பகுதிகளில் குறித்த தேரரின் பின்னணியில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றன. வீடுகள் கூட அமைக்கப்பட்டிருந்தன. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சாதுரியமாக முறையில் நடவடிக்கையெடுத்து அப்பகுதயில் அத்தமீறி குடியேற்றியவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பொதுபலசேன தலைவர்களை மட்டக்களப்புக்கு அழைத்த வேளை, அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு முன்பு பல தமிழ் இளைஞர்கள் ஒன்று கூடினார்கள். ஒரு பதற்றமாக நிலை காணப்பட்டது.

பௌத்த தர்மத்தைப் போதிக்க வேண்டிய தேரர் பௌத்த தர்மத்துக்கு மாறாச் செயற்பட்டு வருகிறார். இவரது நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு நாங்கள் முயற்சி எடுத்துள்ள வேளையில், எங்கள் மீது கொண்டுள்ள காழ்புணர்ச்சி காரணமாக மஹிந்த ராஜபக்ஷவைப் பலப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் மட்டக்களப்பு மாவட்டதில் தமிழ் – முஸ்லிம் இனங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழ் மக்கள் மீது அபிமானம் காட்டுபவரராக மீராவேடை சக்தி வித்தியாலய காணி விடயத்தில் தலையீடு செய்துள்ளார்.

இவருக்குப்பின்னால் திரியும் குழுவும் ஒரு போதும் ஒருவருக்குப் பின்னாலிருந்தது கிடையாது. கிடைக்கும் சந்தர்ப்பதங்களுக்கேற்ப சேர்ந்து கொள்பவர்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here