ஓட்டமாவடி-மீராவோடை காணி சம்பந்தமாக இடம்பெற்ற கூட்டத்தில் நடந்தது என்ன..?-(வீடியோ)

0
225

20170819_111442 - Copyஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
ஓட்டமாவடி –மீராவோடையிலுள்ள சக்தி வித்தியாலய மைதானக்காணி குறித்த பாடசாலைக்குச் சொந்தமானதெனக் கூறப்படுகின்ற பிரச்சனை தொடர்பாக அரசியல் மற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட  உயர்மட்டக்கலந்துரையாடல் நேற்று 19.08.2017ம் திகதி சனிக்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலகக்கேட்போர் கூடத்தில் கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர்களின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த பாடசாலை காணிப்பிரச்சினை தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருப்பதனால் தற்போதைக்கு இரு தரப்பினரும் தீர்ப்புக்கிடைக்கும் வரை காணிக்குள் செல்லக்கூடாதென்ற தீர்மானத்திற்கு வந்ததுடன், தீர்வு பாடசாலைக்குச் சாதகமாக கிடைக்கும் பட்சத்தில் காணி உரிமை கோருபவர்கள் உடனடியாக குறித்த இடத்தினை விட்டு வெளியேற வேண்டுமென்ற முடிவும் எடுக்கப்பட்டது.

அத்தோடு, காணி உரிமையாளருக்குச் சாதகமாக தீர்ப்புக்கிடைக்கும் பட்சத்தில் பாடசாலையின் நலனைக்கருத்திற் கொண்டு அக்காணியை விட்டுக்கொடுப்பதென்றும், அக்காணிக்கு மாற்றுக்காணி வழங்கப்படுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமென்றும் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதோடு, அத்தீர்மானம் எல்லோராலும் வரவேற்கப்பட்டதாகவும் அமைந்திருந்தது.

குறித்த முக்கியத்துவம் வாய்ந்தாக கருத்தப்பட்ட கலந்துறையாடலில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் தி.ரவி, ஐக்கிய தேசியக்கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன், வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டி.எஸ்.பெரமுன, மீராவோடை சக்தி வித்தியாலய அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் தமிழ், முஸ்லிம் தரப்புக்களைப் பிரதி நிதித்துவப்படுத்தி பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள குறித்த காணிப்பிரச்சனையினைப் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, மூன்றாம் தரப்பினர் ஒருவரையோ அல்லது மாவட்டத்தில் கடந்த காலங்களில் மிகவும் மோசமாக நடந்து கொள்ளக்கூடிய மதகுருவினை க் கொண்டு வந்து நியாயம் கேட்பதால் எதிர்காலத்தில் இரண்டு சமூகங்களின் இன ஒற்றுமைக்கு பாதகமாகவும், குந்தகமாகவும் அமையுமென பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

கலந்துரையாடலில் இடம்பெற்ற நிகழ்வுகள் அடங்கிய காணொளி எமது இணைய தள வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ கலந்துரையாடலில் நடந்தது என்ன.?:- –
www.youtube.com/watch?v=XKIEowA7KYE&feature=youtu.be
20170819_111442 - Copy 20170819_111442

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here