பரீட்சைப் பெறுபேறுகள்-எம்.எம்.ஏ.ஸமட்

0
490

cஆகஸ்ட் மாதம் பரீட்சைகளின் மாதம் என்று சொல்லலாம். இம்மாதத்தில் க.பொ.த உயர் தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் தரப்புலமைப் பரிசில் பரீட்சை என்பன நடைபெறுவது வழமை. இதன் பிரகாரம், இம்மாதம் 8ஆம் திகதி ஆரம்பமான உயர் தரப்பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில், ஐந்தாம் தரப்புலமைப்பரசில் பரீட்சை கடந்த 20ஆம் திகதி நடைபெற்று முடிந்துள்ளது.

இலங்கையின் கல்வி வரலாற்றில் இலவசக்கல்வியின் தந்தை எனப்போற்றப்படும் கலாநிதி சி. டபிள்யூ. டபிள்யூ.கன்னங்கராவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலவசக் கல்வித்தொடரில் வருமானம் குறைந்த, திறமைமிக்க மாணவர்களின் எதிர்காலக்கல்வி வாழ்க்கையை ஊக்கப்படுத்தவே 1952ஆம் ஆண்டு  ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது.

பரீட்சையென்பது ஒரு மாணவனின் அறிவு மட்டத்தை, ஞாபத்திறனைப் பரீட்சிப்பதாகும். மாணவரிடையே  தனியாள் வேறுபாட்டுப் பண்புகள் ஒரே விதமாக அமைவதில்லை. இதனால் அவர்களின் பரீட்சை பெறுபேறுகளும் வேறுபட்டதாகக் காணப்படும்.

பரீட்சையில் சாதித்தவர்கள் வாழ்த்தப்படுவதும் சாதிக்காதோர் சாதிப்பதற்காக ஊக்கப்படுத்தப்டுவதும் தான் பரீட்சைகளின் எதிர்பார்ப்பாகும். மாறாக, சித்தியடைந்தோரின் சார்பில் புகழின் உச்சிக்குச் செல்வதோ அல்லது சித்தியடையாதோரின் சார்பாக உடைந்து போவதோ ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அவை உளக்காயங்களையே தோற்றுவிக்கும்.

நாடு பூராகவுமுள்ள சிங்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து நடந்து முடிந்த ஐந்தாம் தரப்புலப்பரிசில்  பரீட்சைக்காக சிங்கள மொழிப்பாடாலைகளிலிருந்து 266,277 மாணவர்களும், தமிழ் மொழிப்பாடசாலைகளிலிருந்து 90,501 மாணவர்களும் தோற்றியிருக்கிறார்கள்.

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இம்மாதம் 31ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்திற்கு முன்னர் இப்பரீட்சை முடிவுகள் வெளியிடப்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், கடந்த வருடம் இப்பரீட்சை முடிவுகள் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது.

நடந்து முடிந்த இப்பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் எதிர்பார்ப்புக்களை விட, அவர்களின் பெற்றோர்களினதும் அவர்களுக்கு டியுஷன் வகுப்புக்களில் ஆண்டு மூன்றிலிருந்தே கற்பிக்க ஆரம்பித்த ஆசிரியர்களினதும் எதிர்பார்ப்பே அதிகமாகவிருக்கும். இந்த எதிர்பார்ப்புக்கள் எப்படி அமைந்தாலும், குறித்த மாணவர்கள் மாத்திரமின்றி, அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் உளக்காயங்களுக்குள்ளாக்கப்படாமல் தவிர்க்கப்பட வேண்டுமென்பதை இக்கட்டுரை முன்கூட்டியே வலியுறுத்துகிறது.

ஏனெனில், பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் இப்பரீட்சைத் தகைமைக்கான அல்லது சித்திக்கான மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகளைப் பெற்று, தகைமையடைந்த மாணவர்கள் பராட்டப்படுவதும், அவர்களது நிழற்படங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுவதும் பாடசாலைகளில் பெனர்களாகத் தொங்கவிடப்படுவதும் அத்தோடு தகைமை பெறாத மாணவர்களும் அவர்களைச் சித்தியடையச் செய்வதற்காக இரவு பகலாக உழைத்த பெற்றோரும் கவலையில் தோய்ந்து போய் அவமானத்தைச் சுமந்ததொரு மன நெருடல்களுக்குள்ளானதானதொரு மனநிலையில் காணப்படுதும் என்ற நிலைமைகளை கடந்த காலங்களில் அவதானிக்க முடிந்திருக்கிறது.

இப்பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்ற ஆசை அல்லது முயற்சி இப்பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களை விடவும் இப்பரீட்சையில் தங்களது பிள்ளையை சித்தியடையச் செய்ய வேண்டுமென்று அவாக்கொண்டு அதற்காக கடும் பிரயத்தனம் செய்யும் பெற்றோர்களின் பரீட்சையாக இப்பரீட்சயையானது மாற்றப்பட்டிருக்கின்றமையை கடந்த காலங்களில் பரீட்சைப்பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் தகைமை பெறாத பிள்ளைகளுக்கு பெற்றோர்களினால் இழைக்கப்பட உடலியல், உளவியல் துஷ்பிரயோகங்களைக் கொண்டு  நோக்க முடிகிறது.

புலமைப்பரிசில் பரீட்சையும் பின்னணிகளும்
வசதி குறைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கும், திறமையான மாணவர்களை பிரபல்ய பாடசாலைகளில் அனுமதிப்பதற்குமாக அறிமுகப்படுத்தப்பட்ட இப்பரீட்சையில், தகைமை பெறும் மாணவர்கள் வசதி குறைந்திருப்பின், உதவித்தொகையாக ஆண்டொன்றுக்கு 5000 ரூபா வரை 15000 மாணவர்களுக்கு இப்புலமைப் பரிசில் சகாயக்கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

அத்துடன், கல்வியமைச்சினால் நிர்ணைக்கப்படும் பாடசாலைகளுக்குரிய வெட்டுப்புள்ளிகளுக்கேற்ப 15 ஆயிரம் மாணவர்கள் பிரபல்ய பாடசாலைகளில் 6ஆம் தரத்தில் அனுமதியளிக்கப்படுகின்றனர்.

கற்றலின்பால் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இப்புலமைப்பரிசில் பரீட்சை, மாணவர்களுக்கு தோல்வி மனப்பாங்கையும், சாதிக்க முடியவில்லையென்ற குற்றவுணர்வையும் மன அழுத்தங்களையும்  உருவாக்குவதுடன், கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மனச்சோர்வையும், கௌரவப் பிரச்சினைகளையும், தாழ்வு மனப்பாங்கையும் ஏற்படுத்திமையை கடந்த காலங்களில் இப்பரீட்சைப்பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களை அவதானிக்கின்ற போது அறியக் கூடியதாகவுள்ளது.

ஒவ்வொரு வருடமும் சாராசரி 3 இலட்சம் மாணவர்கள் இந்த ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் முறையே 313,450 பேரும் 321, 427 பேரும் பரீட்சைக்குத் தோற்றியதுடன், 2012ஆம் ஆண்டு 318,416 மாணவர்களும்  2013ல் 322,455 மாணவர்களும் தோற்றியிருந்தனர்.

2014ல் 334,600 பேரும், 2015ல் 340,926 மாணவர்களும் 2016ம் ஆண்டில் 350,701 மாணவர்களும் இவ்வருடம் 356,778 மாணவர்களும் தோற்றியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இப்பரீட்சையில் 32 ஆயிரத்துக்கு மேற்பட்டோர்  புலமைப்பரிசில் நிதிக்காகவும் பிரபல்ய பாடசாலைகளின் அனுமதிக்காவும் தகைமை பெறுகின்றனர். இப்பரீட்சையில் பல மாணவர்கள் தகைமை பெறுகின்ற போதிலும் , பெரும்பாலானோருக்கு புலமைப்பரிசில் உதவித்தொகை கிடைப்பவதில்லை. ஏனெனில், அவர்களில் அதிகமானோர் வருமானம் கூடியவர்களினதும், அரச உத்தியோகத்தர்களினதும் பிள்ளைகளாகும்.

பரீட்சையும் விமர்சனங்களும்
இப்பரீட்சைக்கான பாடத்திட்டம் இம்மாணவர்களின் உளக்கொள்ளளவுக்கு உகந்ததல்லவென்றும், இவ்வயதுக் குழுவினருக்கு இத்தரத்தில் இப்பரீட்சை பொறுத்தமற்றதென்றும், புலமைப்பரீசில் பரீட்சைக்கான வினாக்கள் அப்பரீட்சைக்கான பாடவிதானப்பரப்புக்குள் இல்லையெனவும், பாடவிதானத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாது வினாக்கள் எடுக்கப்படுவதாகவும், தரம் 7இல் அல்லது தரம் 8இல் தான் இப்பரீட்சை நடாத்தப்படல் வேண்டுமென்றும் பல்வேறு வாதப்பிரதிவாதங்களுடனும், விமர்சனங்களுடனும் பல கோரிக்கைகள் புலமைப்பரிசில் பரீட்சையின் அறிமுகக் காலந்தொட்டு, ஆசிரிய தொழிற்சங்கங்கள் உட்பட பல தரப்பினராலும்  முன்வைக்கப்பட்டு வருகின்றமையை சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.

இந்நிலையில், இப்பரீட்சை  சமூகத்தின் மத்தியில் பலத்த செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரப்பரீட்சை ஆகிய தேசிய பரீட்சைக்கப்பால்  இப்பரீட்சை முக்கியத்துவம் பெற்றுள்ளது. கல்வி வர்த்தகத்துக்கான சிறந்த தளமாக இப்பரீட்சையும்  இப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் வகுப்புக்களும் மாறியுள்ளன.

வருடா வருடம் நடைபெறும் இப்பரீட்சைக்காக மாணவர்கள் தரம் மூன்றிலிருந்தே பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்களினால் இப்பயிற்சியளிக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் பணத்தை அதற்காகச் செலவளித்துக் கொண்டுமிருக்கிறார்கள். சில பெற்றோர்கள் அவ்வகுப்புக்களில் கூடவே இருந்து படிக்கிறார்கள்.

ஒரு சில பிரதேசங்களில் வெளி மாவட்டங்களிலிருந்து பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் கொள்வனவு செய்யப்பட்டு, அவை திகதி மாற்றப்பட்டு, பிரதி எடுக்கப்பட்டு, புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாட விடயங்களைக் கற்பிக்கும் ஒரு சில ஆசிரியர்களின் எவ்வித ஆக்க முயற்சிகளும், தேடல்களுமின்றி, வருமானத்தை மாத்திரம்  ஒரே நோக்காகக்கருதி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு பரீட்சை நடாத்தப்படுகின்றமையும், பரீட்சை நடாத்தப்பட்ட வினாத்தாள்கள் அவ்வகுப்பு மாணவர்களிடையே பரிமாறப்பட்டு, மதிப்பீடும் செய்யப்படுகின்றமையும் என்ற அவல நிலைகள் அரங்கேறிய வரலாறுகளும் நம்முன் காணப்படுகின்றன.

அது மாத்திரமின்றி, கௌரவத்தின் அடிநாதமாக, கௌரவப்பிரச்சினையின் புதிய பரிணாமமாக இப்பரீட்சை பெற்றோர்களிடையே வளர்ச்சி பெற்றுள்ளது. எத்தகைய செலவு ஏற்பட்டாலும் தனது பிள்ளை பரீட்சையில் தோல்வியடையக் கூடாது. தகைமை பெறத்தவறக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, பிள்ளைகளின் உடற்பயிற்சிக்கு நேரம் வழங்காது, பொழுது போக்குக்கு அனுமதிக்காது, இரவு பகல் பாராது பிள்ளைகளை மன அழுத்தத்துக்குள்ளாக்கி தாங்களும் மன அழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் உள்ளாகும் நிலையை இப்பரீட்சை முடிவுகள் கடந்த காலங்களில் ஏற்படுத்தின.

பிள்ளைகளும்  உடல், உள வேறுபாடுகளும்
எந்தவொரு வகுப்பினதும் எந்த இரு மாணவரும் நிழற்பிரதிகள் போல அறிவுத்திறனுடையவர்களாக இருப்பதில்லை. ஒவ்வொரு மாணவனும் தனித்தன்மையுடனும் தனிப்பட்ட அவனுக்கே உரித்தான ஆளுமையுடனும் செயற்படுகிறான் என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் விளங்கிச் செயற்பட வேண்டும்.

மாணவர்களின்  உடல் வளர்ச்சி வீதம், உடல் முதிர்ச்சியின் அளவு போன்றவற்றில் காணப்படும் வேற்றுமைகளுடன் மாணவர்களது நுண்ணறிவு, நாட்டங்கள், கவர்ச்சிகள், செய்திறன்கள், மனவெழுச்சி வேறுபாடு, ஆர்வங்கள், ஆசைகள், மனப்பாங்குகள் போன்ற ஒவ்வொரு பண்பிலும் மாணவர்களிடையே வேறுபாடுகள் உள்ளதை கல்வி உளவியல் தெளிவுபடுத்துகிறது.

அறிதல், மனவெழுச்சி, முயற்சி ஆகிய செயல்கள் இணைந்த ஒவ்வொரு பண்பிலும் மாணவரிடையே வேற்றுமைகள் உள்ளன. இடைநிலை வகுப்பு மாணவர்களை விட ஆரம்பப்பிரிவு மாணவர்களிடையே  தனியாள் வேற்றுமைகள் அதிகளவிலாகக் காணப்படும். 5ஆம் தரப்புலமைப் பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்கள். ஆரம்பப்பிரிவு மாணவர்களே. எனவே, இவர்களில் ஒருவருக்கொருவர் நுண்ணறிவு, செயல்திறன், மனவெழுச்சி போன்ற பண்புகளில் வேறுபாடு காணப்படுவது இன்றியமையாதது.

மாணவர்களது ஆளுமை வளர்ச்சிக்கு ஏதுவான காரணிகளில் காணப்படும் வேறுபாடு இவர்களிடையே தனியாள் வேற்றுமைகள் எழக் காரணமாக அமைக்கின்றன. ஆளுமை என்பது ஒருவனது உடல், அறிவு, மனவெழச்சி போன்ற எல்லாக்கூறுகளையும் சேர்த்த பண்புகளது கலவையாகும்.

இவற்றுடன், மரபு நிலைக்காரணிகள், சூழ்நிலைக் காரணிகள், கற்றல், பயிற்சி, உடலில் காணப்படும் சுரப்பிகள், ஹோமன்கள் என்பன ஒரு மாணவனது தனியாள் வேறுபாடுக்கு ஏதுவாக அமைகின்றன என்பதை ஆசிரியர்களும் குறிப்பாக பெற்றோரும் அறிந்திருப்பது அவசியம்.

பரீட்சை முடிவுகள் ஏற்படுத்தும் உளக்காயங்கள்
இத்தகையை நிலைமைகளை அறியாது, அல்லது அறிந்தும் கூட பரீட்சைக்குத் தோற்றி தகைமை பெறாத அல்லது சித்தியடையாத இந்த தனியாள் வேறுபாடுகள் அதிகளவிலான வயதைக் கொண்ட  பிள்ளைகளை அவர்களின் ஆழ் மனதில் அழுத்தத்தை, தாக்கதை ஏற்படுத்தும் வகையில் பெற்றோர்கள் கடந்த காலங்களில்  நடந்து கொண்டதாக வெளியான செய்திகள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலைமைகளை நடந்து முடிந்த ஐந்தாம் தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் ஏற்படக்கூடாதென்பதே எதிர்பார்ப்பாகும்.

இவை தவிர, கடந்த ஆட்சிக்காலத்தில் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் அனுஷ்டிக்கும் சர்வதேச சிறுவர் தினத்தில் இப்பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன. இவ்வாறு வெளியிடப்பட்ட இப்பரீட்சைப் பெறுபேறு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி ஆர்வலர்கள் மற்றும் கல்வித்துறையினர்கள் மத்தியில் பெருந்தாக்கத்தையும் பரபரப்பையும் எற்படுத்தியிருந்தமையையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

அத்தோடு, உரிய வெட்டுப்புள்ளியைப் பெறாத பிள்ளைகளைத் திட்டித்தீர்த்தமை, விரட்டியடித்தமை, குறைந்த புள்ளிகளைப் பெற்றமைக்காக பெற்றோர் சூடு வைத்தமை, செல்லப்பிராணிகளை அடைக்கும் கூடுகளில் குறைந்த புள்ளி பெற்றமைக்காக பிள்ளையை அடைத்து வைத்தமை போன்ற பல சம்பங்கள் பிள்ளைகளின் இப்பரீட்சைப்பெறுபேறுகள் பெற்றோர்களுக்கு ஏற்படுத்திய அழுத்தங்களினால் கடந்த காலங்களில் நடந்தேறின.

இவ்வாறன நிலையில், ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் அதிகமானோர் அதிகரித்த மன அழுத்த உபாதைகளுக்குள்ளாகி வருவதாக கடந்த காலங்களில் நரம்பியல் வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டன. இப்பரீட்சையின் பெறுபேறு, பெற்றோர்களின் கௌரவப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளமையே இந்நிலைமைக்குப் பிரதான காரணமெனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

பெற்றோர்களும், பாடசாலை ஆசிரியர்களும், ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மீது, அதன் பெறுபோறு தொடர்பில் செலுத்துமளவு கடந்த ஆதிக்கமே, மாணவர்களின் இத்தகைய மன அழுத்தம் மற்றும் அதிகரித்த தலைவலி போன்ற உபாதைகளுக்கு காரணமெனவும், இது தொடர்பில் அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியது பெற்றோர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் மீதான கட்டாயக் கடமையெனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமையையும் இத்தகைய உபாதைகளுக்காக சிகிச்சை பெறும் அதிகரித்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து, இப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இயல்பாகச் சிந்தித்துச் செயல்படும் நிலைக்கு வரவேண்டுமாயின், பாடசாலைகளிடையே போட்டி நிலைமையை உருவாக்கி, பணம் வசூலிக்கும் தொழிலாக உருவெடுத்துள்ள இப்பரீட்சையின் கட்டமைப்பு மற்றும் நோக்கம் முதலானவை மாற்றம் பெற வேண்டியது அவசியமெனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமையை இங்கு சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

உள வளத்துணையின் அவசியம்
ஆரம்பப்பிரிவுத் தரத்திலுள்ள பிள்ளைகளிடையே காணப்படும் தனியாள் வேறுபாடு அவர்களின் நுண்ணறிவு, செயல்திறன் என்பவற்றில் வேறுபாட்டை ஏற்படுத்தும். அதனால் அவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளிலும் ஏற்றத்தாழ்வு  காணப்படும்.

மாணவர்களிடையே காணப்படும் இத்தகைய தனியாள் வேற்றுமைகளின் தன்மையை உணர்ந்து, இவை இருத்தலைக் கவனத்திற் கொள்ளும் ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலுமே அப்பிள்ளையின் பரீட்சைப் பெறுபேறுகளின் வெற்றி தோல்விகளை அல்லது பரீட்சையில் தகைமை பெற்றதை அல்லது பெறாததை ஏற்றுக்கொள்ளவும் தகைமை பெற்ற பிள்ளைகளை வாழ்த்தவும் தோல்வியுற்ற பிள்ளைகளை உள அமைதி பெறச் செய்யவும் மேலும் தோல்வியிலிருந்து வெற்றி நோக்கி நகரச்செய்யவும், ஊக்கப்படுத்தவும் முடியும்.

கடந்த காலங்களில் சுய கௌரவம் சுருக்கிடப்பபட்டதொரு நிலைக்குள்ளாகி, குறைந்த பெறுபேறுகளைப் பெற்ற அல்லது தகைமை பெறாத சொந்தப்பிள்ளையை பெற்றோர்களே கொடுமைப்படுத்திய சம்பவங்கள் போன்று இவ்வாண்டிலும் ஏற்படக்கூடாது. அதே போன்று, நடந்து கொண்டிருக்கின்ற க.பொ.த உயர் தரப்பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லையென்பதற்காக தங்களது எதிர்காலத்தை அழிக்கும் நடவடிக்கைகளிலும் குறித்த மாணவர்கள் ஈடுபடாதிருப்பதும் தவிர்க்கப்படுவது அவசியமாகும்.

இத்தகைய நிலைமைகள் உருவாகுவதைத் தடுப்பதற்காக இப்பரீட்சைகளின் கடந்த கால மற்றும் யதார்த்த நிலைகள் குறித்து உயர் தரப்பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்களும், பரீட்சைகளுக்குத் தோற்றியுள்ள மாணவர்களின் பெற்றோர்களும் தெளிவுபடுத்தப்படுவது அவசியமாகும்.

பரீட்சைப்பெறுபேற்றின் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்குகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இப்போதிருந்தே ஏற்படுத்தப்பட வேண்டும். பெற்றோர்கள் இவை குறித்த உளவள ஆலோசனைக்குட்படுத்தப்படுவது அவசியமாகும்.

இவ்வாலோசனைகள் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளினூடகாவும், பாடசாலைகளூடாகவும் தொழில்வாண்மை உளவள ஆலோசகர்களினூடாக வழங்கப்பட வேண்டும். வெற்றி தோல்வின் யதார்த்த நிலைகள் பெற்றோர்களினூடாக பிள்ளைகளுக்கு அறிவூட்டப்பட வேண்டும்.

இதன் மூலம் இப்பரீட்சைப்பெறுபேறுகள் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் மீது ஏற்படுத்தும் உளக்காயத்தைக் குறைத்து வெற்றியையும் தோல்வியையும் ஏற்று வாழும் மனப்பாங்கை உருவாக்கும். வெற்றிகரமான உளவளத்துணை செயற்பாடுகள் யதார்த்தமற்ற போலிக் கௌரவத்தினால் ஏற்படும் அழுத்தங்களைத் தவிர்ப்பதற்கு உதவுவதோடு, விபரீதங்களையும் தவிர்க்கும் என்பதுமே நிதர்சனமாகும்..

வீரகேசரி – 2017.08.22

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here