முஸ்லிம்களின் வாழ்வில் மஸ்ஜித்களின் பெறுமானமும் அவற்றை நிர்வகித்தலும்

0
989

dsஎம்.ஐ அன்வர் (ஸலபி)
இலங்கையைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடு. இலங்கையில் பெளத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எனப்பல சமயத்தவர்கள், இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்நாட்டில், முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களோடு மத, இன நல்லுறவைப்பேணி வாழ்ந்து வருகின்றனர் என்பது கண்கூடு.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை தமது குடியிருப்பு, தொழில் மற்றும் கல்வித்துறை ஸ்தாபனங்கள் போன்ற அனைத்தையுமே மஸ்ஜிதை மையப்படுத்தியே அமைத்துக்கொண்டிருப்பதை அல்லது தமது சூழலில் மஸ்ஜித்களை நிறுவியுள்ளதை பொதுவாகக் காண முடிகிறது.

மஸ்ஜித்கள் பூமியில் அமைந்துள்ள அல்லாஹூதாலாவின் இல்லங்களாகும். அவனது அருளும் அமைதியும் இறங்கும் இடங்கள் அவை. மலக்குகள் பிரசன்னமாகும் தலங்களாகவும் திகழ்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘’பூமியில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான இடங்கள் மஸ்ஜித்களாகும். அவனுக்கு மிக வெறுப்புக்குரிய இடங்கள் கடைத்தெருக்களாகும். (முஸ்லிம்)

இறையச்சமிக்க அடியார்களின் புகலிடமாகவும் மஸ்ஜித்களே விளங்குகின்றன. அல்லாஹ்வின் அருளையும் ஆன்மாவுக்கு அமைதியையும் உள்ளத்திற்கு நிம்மதியையும் தேடுபவர்கள் ஒதுங்குமிடம் மஸ்ஜிதாகவே இருக்க முடியும். ஒருவர் மஸ்ஜிதுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருப்பது அவர் ஒர் உண்மை இறை விசுவாசி என்பதற்குப் போதுமான சான்றாகும். இது பற்றி நபி (ஸல்) அவர்கள் இப்படிச்சொன்னார்கள்.

‘’ஒருவர் மஸ்ஜிதுடன் தொடர்புடையவராக இருப்பின், அவருடைய ஈமானுக்கு நீங்கள் சாட்சி கூறுங்கள். (திர்மிதி)

மஸ்ஜித்கள் புனிதத்துவம் வாய்ந்த இடங்களாக விளங்குவது போலவே, அவை முஸ்லிம் சமுதாயத்தின் இதயமாகவும் அச்சாணியாகவும் காணப்படுகின்றன.

இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் தான் விரும்பும் கொள்கை வழிச்சமூகத்தை உருவாக்கும் நோக்குடன், மதீனா நோக்கிப் பயணமான போது தான் செல்லும் வழியில் இடையில் தங்கிய இடமான குபாவில் கூட ஒரு மஸ்ஜிதை நிர்மாணித்தார்கள். மதீனா சென்றடைந்ததும் அண்ணாரின் முதற்கட்டப் பணியாக அமைந்ததும் மஸ்ஜித் நிர்மாணமே.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மஸ்ஜிதுந் நபவி தொழுகை நிறைவேற்றல், இஃதிகாப் இருத்தல், திக்ர் செய்தல் போன்ற வணக்கத்துக்குறிய இடமாக மாத்திரமில்லாமல், சமூக மட்டத்தில் பல்வேறு பணிகளையும் அது ஆற்றியது. வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமாகவும், யுத்தங்களுக்கு வீரர்களை தயார்படுத்தும் முகாந்திரமாகவும், ஸகாத், ஸகாதுல் பித்ர் முதலான வரிகளும், தர்ம நிதிகளும் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்ற இடமாகவும், யுத்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்திய நிலையமாகவும் மற்றும் அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் என்பவற்றைக் கற்பிக்கும் கலாபீடமாகவும் அது திகழ்ந்தது.

மஸ்ஜித் இபாதத்துக்குறிய இடமாக மாத்திரமில்லாமல், அது முஸ்லிம்களின் கல்விக்கூடமாக அமைந்தது. முஸ்லிம்களுக்கு மார்க்கக் கல்வியையும் உலகக்கல்வியையும் போதிக்கும் இடமாகவும் விளங்கியது. மஸ்ஜித்களில் நடைபெற்ற வகுப்புக்களில் மார்க்கப்பாடங்கள் மாத்திரமன்றி மொழி, இலக்கியம், இலக்கணம், புவியியல், வானவியல், மருத்துவம் போன்ற பல்வேறு கலைகளும் போதிக்கப்பட்டன.

பொதுவாக, இன்றைய மஸ்ஜித்கள் உயிரோட்டமின்றிய பாரிய கட்டடங்களாக மாத்திரம் காட்சி தருகின்றன. இந்நிலையை கவனத்திற்கொண்டு மஸ்ஜிதுந் நபவி உட்பட இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் மஸ்ஜித்கள் எவ்வாறான சமூகப்பணிகளை ஆற்றின என்பதை அவதானித்து, அதனை மீண்டும் உயிர்ப்பிப்பதும் அதன் பணியை வினைத்திறனுள்ளதாக மாற்றுவதும் சமகாலத்தில் இன்றியமையாததாகும்.

எகிப்தின் கெய்ரோ நகரில் நிர்மாணிகப்பட்ட ஜாமிஉ அம்ரிப்னுல் ஆஸ் பள்ளிவாசலில் ஹிஜ்ரி 36 ஆம் ஆண்டு அளவில் பாடப்போதனைகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு 40 க்கும் அதிகமான கல்வி வகுப்புக்கள் நடைபெற்று வந்தன.

இன்றைய உலகில் புகழ்பெற்ற இஸ்லாமிய பல்கலைக்கழகமான அல்-அஸ்ஹர் ஆரம்பத்தில் ஒரு மஸ்ஜிதாகவே இருந்து வந்தது. அல் ஜாமிஉல் அஸ்ஹர் எனும் இப்பள்ளிவாசல் ஹிஜ்ரி 361 அளவில் நிர்மாணிக்ப்பட்டதாகும். டியுனிசியாவில் அமைந்துள்ள அஸ்ஸெய்தூனா பல்கலைக்கழகமும் ஜாமிஉ ஸெய்தூனா என்ற பள்ளிவாசலிலிருந்தே உதயமானதாகும்.

மஸ்ஜித் என்பது ஒரு தனி மனிதனுக்கு, ஒரு குடும்பத்திற்கு, ஒரு கிராமத்திற்கு தலைமைத்துவம் வழங்குகிற தலைமையகம் என்ற வகையில் அது முழு சமூகத்தை தலைமை தாங்கி வழி நடத்தும் முக்கிய நிலையம் என்ற அந்தஸ்திலிருந்த போதிலும், சமூகத்தின் பல்துறை தழுவிய மேம்பாட்டைக் கவனத்திற்கொண்ட செயற்றிட்டமொன்று இலங்கை பள்ளிவாசல்களில் காணப்படாதது தொடர்ந்தும் ஒரு குறைபாடாகவே இருந்து வருகிறது.

இந்த வகையில், எமது சூழலில் மஸ்ஜித் ஆற்ற வேண்டிய பணிகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய தேவை இன்று வெகுவாக உணரப்பட்டுள்ளது. எமது நாட்டுப்பள்ளிவாசல்களும் மஸ்ஜிதுந் நபவியை போன்று எப்போதுமே உயிரோட்டமானதாக இருப்பதற்கான திட்டமிடல்கள் வகுக்கப்படல் வேணடும்.

இத்தகைய பின்புலத்தில் பள்ளிவாசலை மையப்படுத்தி மேற்கொள்ளத்தக்க சமூக மேம்பாட்டுப் பணிகளாக பின்வருபவற்றை அடையாளப்படுத்தலாம்.

1. பள்ளிவாசலை மையப்படுத்தி நடைபெறும் அல்குர்ஆன் மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதல் பயிற்சியோடு நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான கல்விப்போதனைகளை வழங்க நடவடிக்கையெடுத்தல்.

2. குறித்த மஹல்லாவில் வாழும் மக்களின் பொருளாதார நலனைக்கருத்திற் கொண்டு வறியவர்களுக்கும் தேவையுடையவர்களுக்கும் வட்டியில்லா கடன் உதவிகளை வழங்க திட்டங்களை வகுத்தல்.

3. பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு தொழுகையறைகளை அமைத்தல். குறிப்பாக, பெண்களுக்கான பிரத்தியேக அறை அமைத்தல். இதில் நகரப்புரங்களில் மற்றும் பிரதான வீதிகளில் அமைந்துள்ள மஸ்ஜித்கள் கூடிய கவனஞ்செலுத்தல்.

4. மஹல்லா வாசிகளுக்கு மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க மஸ்ஜித் வளாகத்தில் நூல் நிலையம் அமைத்தல். இத்துறையில் மார்க்க விவகாரங்கள் தொடர்பிலான நூல்கள் மற்றும் சஞ்சிகைகளை கொள்வனவு செய்தல்.

5. அனர்த்தங்களின் போது நிவாரண உதவிகளை வழங்க ஒரு பொறிமுறையை ஏற்படுத்தல்.

6. ஸகாத், ஸகாதுல் பித்ர் போன்றவற்றைக் கூட்டாக நிறைவேற்ற ஏற்பாடுகளைச் செய்தல். அவற்றை உரியவர்களுக்கு கொண்டு போய்ச் சேர்ப்பதில் கூடிய கவனஞ்செலுத்தல்.

7. சமூகத்தில் உருவாகும் பிரச்சினைகளையும் பிணக்குளையும் தீர்த்துக்கொள்ள பள்ளிவாசல்களை மையப்படுத்திய இணக்க சபைகளைத் தோற்றுவித்தல்.

8. மாதாந்த, வாராந்த இஸ்லாமிய சன்மார்க்க விளக்கத்தொடர் வகுப்புக்களை மேற்கொள்ளல்.

9. இளைஞர்களை மஸ்ஜித்களோடு இணைக்கும் வகையில் காத்திரமான நிகழ்ச்சி நிரல்களை தகுதியான வளவாளர்களைக் கொண்டு ஏற்பாடு செய்தல்.

10. மாற்று மதத்தவர்கள் பள்ளிவாசல்களுக்கு விஜயஞ்செய்யவும் எமது சன்மார்க்க விவகாரங்கள் தொடர்பிலான தமது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுகளைப் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகளைச் செய்தல்.

மேற்கூறுப்பட்ட செயற்பாடுகளை நாடு தழுவிய ரீதியில் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த குறித்த மஹல்லாவிலுள்ள மஸ்ஜித் நிர்வாகம் பிரயத்தனம் செய்ய வேண்டும்.

இலங்கையைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடு. இப்போது சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப்பற்றியும் தவறான கருத்துக்கள் திட்டமிடப்பட்ட வகையில் தீவிரமாகப் பிரசாரம் செய்ப்பட்டு வரும் நிலையில், இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப்பற்றியும் மாற்று மதத்தவர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ள மஸ்ஜித்களை மையப்படுத்திய கலந்துரையாடல்களைச் செயற்படுத்துவது அவசியமானதாகும்.

தவிர, முஸ்லிம்களின் வாழ்வில் ஒரு மகத்தான அந்தஸ்தைப் பெற்றுள்ள மஸ்ஜித்களை நிர்வகித்தல் என்பது ஒரு சாதாரண விடயமல்ல. சராசரி மனிதர்களால் அது நிர்வகிக்கப்படவும் முடியாது. அல்குர்ஆன் வேறு எந்த நிர்வாகிகள் பற்றியும் பேசாது மஸ்ஜித் நிர்வாகிகள் குறித்து மட்டும் பேசியிருப்பது இதன் முக்கியத்துவத்தை உணர்த்தப் போதுமானதாகும்.

தலைமைத்துவப் பொறுப்பு என்பது ஓர் அமானிதமாகும். ஒருவருக்கு எத்தகைய பொறுப்புக்கிடைத்தாலும் அது அமானிதமாகவே கருதப்படும். அது பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்படும். இது பற்றி நபி (ஸல்) கூறும் போது “நீங்கள் அனைவரும் பொறுப்புதாரிகள். கியாமத் நாளில் உங்கள் பொறுப்புக்கு கீழுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (புஹாரி)

இந்த அடிப்படையில் மஸ்ஜிதை நிர்வகிக்கும் பொறுப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. அல்லாஹுத்தாலா அல்குர்ஆனில் மஸ்ஜித்ளை நிர்வகிப்பவர்கள் கொண்டிருக்க வேண்டிய ஆளுமைப்பண்புகள் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

‘’எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து ஸகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள் தான் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள்.’” (அத்தௌபா-18)

எனவே, மஸ்ஜித் நிர்வாகத்தெரிவின் போது அல்-குர்ஆனில் அல்லாஹூத்தாலா குறிப்பிட்ட முஃமினான தொழுகையை நிலைநாட்டும் (வசதியிருந்தால்) ஸகாத் கொடுக்கும் அல்லாஹ்வை மாத்திரம் பயப்படும் பண்புள்ளவர்களை முதன்மைப்படுத்த வேண்டுமென்பதே அடிப்படையாகும்.

அத்துடன், ஆணாக இருந்தால் பருவ வயதை அடைந்தவராக இருத்தல் போன்ற பொதுவான தன்மைகளுடன் நேர்மையானவராக இருத்தல் தான் வகிக்கும் பொறுப்புக்குறித்த மார்க்க அறிவுள்ளவராகவும் தனது கடமைகளை உலக இலாபங்களின்றி அல்லாஹ்வுக்காக மாத்திரம் நிறைவேற்றும் தக்வா எனும் இறையச்சமுள்ளவராகவும் இருப்பதும் இன்றியமையாததாகும்.

இத்தகைய பண்புள்ளவர்களே மஸ்ஜித் நிர்வாகத்தெரிவின் போது இணைத்துக்கொள்ளப்படல் வேண்டும். அத்தோடு, மஸ்ஜிதை நிர்வாகம் செய்யத் தேர்ந்தெடுக்கப்படுவோர் ஹலாலான வகையில் வருமானம் பெறுபவர்களா? என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய பண்புகள் இவ்விடயத்தில் மாத்திரமன்றி ஏனைய பொறுப்புக்களை சுமப்பவர்களிடமும் இருத்தல் இன்றியமையாததாகும்.

இன்றைய சமூக சூழ்நிலையில் மஸ்ஜித்களுக்கு நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் போது, இஸ்லாம் கூறும் மேற்போந்த தகைமைப்பண்புகள் கவனத்திற்கொள்ளப்படுவதில்லையென்பது கண்கூடு. பள்ளிவாசல்களுக்கு நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் போது, அரசியல் தலையீடுகள், தனி நபர் விருப்பு வெறுப்புக்கள், பொருளாதார, சமூகப்பின்புலங்களே தீர்மானிக்கும் சக்திகளாகவுள்ளன என்பது கவலைக்குரியதாகும்.

தவிர, மார்க்க மற்றும் சமூக ரீதியிலான எந்த அறிவுப்பின்புலமும் இல்லாதவர்கள் பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்புகளுக்கு தெரிவு செய்யப்படுவதும், சமூகத்தில் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் ஆளுமைகள், புத்திஜீவிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படும் நிலைகளும் ஆங்காங்கே நிகழ்வது துரதிஷ்டமானதே.

எனவே தான் மஸ்ஜித் பரிபாலன சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது, இஸ்லாம் கூறும் தகைமைப்பண்புகளைக் கொண்டவர்களைத் தெரிவு செய்வதும் மார்க்க மற்றும் சமூக அறிவுப்பின்புலம் கொண்டவர்களை அதற்காக ஆவண செய்வதும் எதிர்காலத்தில் மஸ்ஜித் மைய வினைத்திறன்மிக்க சமூகச் செயற்பாடுகளுக்கு வழியமைக்கும் என்பதை கவனத்திற்கொள்வோமாக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here