இது றியாழுக்குத் தேவை தானா?

0
233

வ்வ்வ்இப்னு ஆபியா
‘இது றியாழுக்குத் தேவை தானா?’ என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் றியாழ். நல்ல மனிதனை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஏமாற்றி விட்டார். இது றியாழுக்குச் சரி வராது. அரசியல் றியாழுக்குச் செய்யத்தெரியாது. இது றியாழுக்குத் தேவை தானா? போன்ற கேள்விகள் கல்குடாத்தொகுதியெங்கும் ஒரு சமயம் நிலவியது. றியாழுக்கு வாக்குப்போட்டவர்களை விட வாக்களிக்காதவர்கள் றியாழைத் தொடர்புபடுத்தி இது போன்ற கேள்விகளை சமூக வலைத்தளங்களில் எழுதியும், சந்திச்சண்டைகளில் பேசியும் திரிந்தார்கள்.

இப்போது றியாழ் மு.கா. தலைவரின் அமைச்சு மூலம் கல்குடாவில் ஆரம்பித்து வைத்துள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பின்னர் இக்கேள்விகள் காலாவதியாகிப் போய் விட்டன. றியாழின் ஆளுமை பற்றி எதிர்த்தரப்புவாதிகள் மௌனமான குரல்களில் ஒழித்து ஒழித்துப்பேசுவது எமது காதுகளுக்கு எட்டுகிறது.

கல்குடாத்தொகுதியின் அரசியலில் சென்ற பாராளுமன்றத்தேர்தலில் றியாழ் தோற்றுப்போன ஒருவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் பாராளுமன்றத்தேர்தலில் களமிறங்கி அமீரலியை எதிர்த்துப் போட்டியிட்டார். அமீர் அலி பழைய அரசியல்வாதியென்றாலும், றியாழ் அவருக்கு பெருத்த சவாலாகவே அமைந்தார். கல்குடாத்தொகுதியில் றியாழ் வெற்றியடைந்ததாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். ஏனென்றால், றியாழ் மு.காவின் வாக்கு வங்கியை அதிகரிக்கச் செய்தார்.

அராஜக ஆட்சியை மாற்றுவோம் என்றே றியாழ் கல்குடாத்தொகுதிக்கு வருகை தந்தார். அதில் வரையறுக்கப்பட்ட வெற்றியையும் அடைந்திருக்கிறார். றியாழ் இப்போது கல்குடாத்தொகுதி அரசியலில் தனக்கென தனித்துவ இடத்தினை அவரது இரண்டு வருட அரசியல் வாழ்க்கையில் பிடித்திருக்கிறார். இது மு.காவின் வெற்றி என்பதைக்காட்டிலும் றியாழின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். மு.கா.வில் தேர்தல் கேட்பதும், தோற்பதும், காணாமல் போவதும் என்ற தொடர் கதை றியாழோடு முற்றுப்பெற்றுள்ளது.

பாராளுமன்றத்தேர்தல் முடிந்த கையோடு கல்குடாத்தொகுதியெங்கும் வெற்றி பெற்ற வேட்பாளரின் ஆதரவாளர்கள் வெடில் வெடித்து, தொடர் வாகனப் பவணி வந்து வெற்றியைக் கொண்டாடினர். ஆனால், இரண்டு வருடங்கள் கழிந்த பிற்பாடு அதே வெடில் வெடித்து, தொடர் வாகனப் பவணியில் றியாழ் கல்குடாத்தொகுதிக்கு அழைத்து வரப்பட்டார்.

இது ஒரு ஆச்சரியமான சம்பவம் தான். கூடவே மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமும் அவரது ஆதரவாளர்களும் உயர் ரக வாகனங்களில் கல்குடாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் பல கோடி அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள். நீண்ட கால இடைவெளியின் பின்னர் மு.காவின் கட்சிக்கொடியும் கல்குடாத்தொகுதியில் தலை நிமிர்ந்து பறந்தது. அரசியல் காலங்களில் அராஜக ஆட்சி கவிழ்க்கப்படுமமென்று சொன்ன அந்த றியாழ், மெல்ல மெல்ல அந்த எட்டைப்பிடிக்கப்போகிறார் என்பது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துள்ளது.

‘றியாழ் எங்கட புள்ளகிளி, அவன நாங்க இனி கை விடமாட்டோம்’ என மீராவோடையைச் சேர்ந்த ஒரு வயதான பாட்டி சொன்ன கதை எனது காதுகளில் இப்போது எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் கல்குடாத்தொகுதி முஸ்லிம் அரசியலில் ஓட்டமாவடி, வாழைச்சேனை அடைந்த பிரபல்யம் மீராவோடைக்கு கிடைக்கவே இல்லை தான். கொழும்பு அரசியலில் மீராவோடைக்கான தனி அத்தியாயத்தை றியாழ் துவக்கி வைத்துள்ளார். இந்த துவக்கம் மீராவோடை மக்களுக்கு கிடைத்த பெரியதொரு சமவாய்ப்பு. இந்த சமவாய்ப்பு கல்குடா முஸ்லிம் அரசியலில் புதிய வரலாற்றை ஆரம்பித்து வைத்திருக்கிறது.

இம்மாதம் ஓட்டமாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது றியாழ் இந்த கல்குடாத்தொகுதி முஸ்லிம்கள் பற்றிப்பேசுகிற போது, ‘நான் ஏழை விவசாயிகளின் வாழ்க்கைக்கு புத்துயிரளிக்கும் நீர்ப்பாசன முறையினை அபிவிருத்தி செய்வேன். காணிப்பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளேன். குடிநீர்ப்பிரச்சினை இப்போது தீர்ந்துள்ளது.

இன்ஸா அல்லாஹ் 2020 இல் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும். பட்டதாரிகளை கலாநிதிகளாக மாற்ற வேண்டும். படித்த சமூகம் அரசியலை தலையில் சுமக்க வேண்டும். நான் கட்டுக்கோப்பான மத்திய சபையை அமைப்பேன். தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கல்குடா முஸ்லிம்கள் சார்பாக பல்லாயிரம் நன்றிகள்’ என முடித்தார்.

சபையோடு சபையாக இருந்த என்னைப் பார்த்த ஒருவர் றியாழுக்கு பேசத்தெரியாது என்றார்களே! இவர் நன்றாகவே பேசுகிறார். அரசியலுக்குப் பொருத்தமானவர் என வாய் மகிழ்ந்து சொன்னார். அப்போது விளங்கியது றியாழ் தேர்தலில் தோற்றாலும், மக்களின் மனங்களை வெற்றி கொண்டுள்ளார். இது இரண்டு வருட அரசியல் வாழ்வில் மிகப்பெரிய சாதனை தான்.

றியாழுக்கு இனி எவரும் சவால் இல்லை. அத்தோடு, தேர்தல் முறைமையில் கொணரும் மாற்றம், சில அரசியல்வாதிகளின் திட்டத்திற்கு பெரும் ஏமாற்றம் தான்.

இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களுள் றியாழ் புகுந்து விட்டார். இனி ஆரம்பத்திலிருந்து பழங்கதை சொல்லி அரசியலைத் துவக்க வேண்டி நிலையேற்பட்டுள்ளது. இது மு.காவின் பிற பிரதேச அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

றியாழ் தொடர்ந்து இயங்குவதற்கான சூழலை மு.கா.வின் தலைவர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது தடைப்படுமானால், றியாழ் அரசியலை தொடர்வது கஸ்டம் தான். இந்த சமன்பாட்டை உடைக்க மு.கா.வின் அரசியல்வாதிகள் முனைவது வெளிப்படையாகத் தெரிகிறது. இப்போது றியாழுக்கு அமீர் அலி சவாலில்லை. அவரது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட அரசியல்வாதிகளே அவருக்குச்சவால்.

இது நிரந்தரமல்ல என்றாலும், அவரது வளர்ச்சியை முளையில் கிள்ளியெறியலாம் என்ற அச்சம் உள்ளூர றியாழின் ஆதரவாளர்களுக்கு இருக்கவே செய்கிறது. பொறுத்துத்தான் களத்தைப் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here