முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களின் மறைவு பேரிழப்பாகும்-பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்

0
210

index(அகமட் எஸ். முகைடீன்)
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரின் மறுமை வாழ்வு பிரகாசிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக புனித மக்கமா நகரில் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்  தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களின் மறைவு குறித்து பிரதியமைச்சர் ஹரீஸ் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

நேர்மையான மூத்த அரசியல்வாதியாகிய அன்னார் பல்வேறு நற்குணங்களை தன்னகத்தே கொண்டிருந்தார். இலங்கைப் பாராளுமன்ற நிலையியற் கட்டளைச்சட்டம் மற்றும் ஒழுங்குப்பத்திரம் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியில் முக்கிய பங்காற்றியவராவார். அரசியல் தொடர்பான சிறந்த புலமையினைப் பெற்றிருந்த இவர் செயல்திறன்மிக்க பாராளுமன்ற உறுப்பினராகக் காணப்பட்டார். தன்னுடன் நீண்ட கால உறவைப்பேணி வந்த இவர், சிறந்த மொழி ஆற்றல் கொண்டவராகக் காணப்பட்டதோடு, எதற்கும் அஞ்சாமல் கருத்துக்களை பாராளுமன்றத்தில் முன்வைத்து வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு வந்தார்.

சிறந்த அரசியல்வாதியாகிய அன்னாரின் மறைவினால் துயருறும் குடும்பத்தினருக்கு மன ஆறுதலைக் கொடுப்பதற்கும் அன்னாரின் நற்காரியங்களை ஏற்று பாவங்களை மன்னித்து அன்னாரின் கப்ரை விசாலமாக்கி சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக்கிக் கொடுப்பதற்கும் ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் என்னும் உயர்வான சுவர்க்கத்தை அருள்வதற்கும் இறைவனிடம் இருகரமேந்திப் பிரார்த்திப்பதாக பிரதியமைச்சர் ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here