சண்டித்தன அரசியல்வாதிகளுக்கு பாடம் படிப்பிக்கின்ற நாட்கள் விரைவில்-பிரதியமைச்சர் அமீர் அலி

0
255

01 (1)எஸ்.எம்.எம்.முர்ஷித்

உள்ளூராட்சி திருத்தச்சட்டமூலம் சிறுபான்மைச்சமூகத்திற்கு பாதிப்பிருப்பதால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் பதவியைத் துறக்க இருந்த வேளையில் பிரதமர் மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தப்பா ஆகியோர் வழங்கிய வாக்குறுதியினால் முடிவை மாற்றினோமென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடைக்கிராமத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தில் நடைபெற்ற போதே அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இருபதாவது திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். வட கிழக்கிலே இருக்கின்ற முஸ்லிம்களுக்குச் சாதகமாக இருந்தாலும், விசேடமாக கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சாதகமாக இருந்தாலும், வடபுலத்திலுள்ள, வட கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம்களுக்கும், மலையகத்தமிழர்களுக்கும், வெளிப்பிரதேசத்தில் வாழும் தமிழர்களுக்கும் அது சாதமாக இல்லையென்பதால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதென்று தீர்க்கமான முடிவை எடுத்தது.
இதற்கான சரியான உடன்பாடு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இதற்குப் பொறுப்பான அமைச்சர் உறுதியுரை வழங்கவில்லையென்று சொன்னால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இருபதாவது திருத்தச்சட்ட மூலத்திற்கெதிராக வாக்களிக்குமென்பதை அரசியல் தலைவர்களுக்குத் தெரிவித்தோம்.

அதே கால கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அவரது பாராளுமன்ற உறுப்பினர்களையும் என்னவென்று சொல்ல முடியாமல் காண முடியாமலிருந்தது. இவர்கள் வாய்மூடி இருந்த சூழலிலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித்தலைவர் பாராளுமன்றத்தில் தெளிவாகப் பேசினார்.

உள்ளூராட்சித் திருத்தச்சட்டமூலம் சிறுபான்மைச் சமூகத்திற்கு அநேகமாக பாதிப்பிருக்கின்ற காரணத்தினால், எங்களுடைய அமைச்சுப் பதவிகளையும் தூக்கியெறிந்து விட்டுச் செல்வதற்குத் தயாராக இருந்த நேரத்திலே, பிரதமர் மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் வழங்கிய வாக்குறுதியினால் மீள்பரிசீலனை செய்து, அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கின்ற திட்டத்திலுள்ளோம் என்பதை அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தலைவர் ரவூப் ஹக்கீம் இக்கட்சி முஸ்லிம்களின் கட்சியென்றும், முஸ்லிம்களுக்கு சொந்தக்காரர் என்றும், முஸ்லிம்களின் உரிமைக்காகப் போராடுவோம். உரிமையைப் பாதுகாத்தே தீருவோம் என்று சொன்னவர் பாராளுமன்றத்தில் வாய்மூடி மௌனியாக இருந்தார்.

நாங்கள் சமூகத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கின்றோம். நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றீர்கள். அந்த வகையில், மாகாண, தேசிய, கிராம மட்டமாக இருந்தாலும் சரி தான் உங்களுடைய பிரச்சனைகளை இனங்கண்டு, அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ, அதிலே நாங்கள் விழிப்பாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

இந்நாட்டின் முஸ்லிம்களின் பள்ளிவாயல், உரிமை, பொது பலசேனா, காணிப் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் குரல் கொடுக்கின்றவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

கடந்த காலத்திலே கிழக்கு மாகாணக் கல்வியமைச்சு, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோர் எந்தப்பாடசாலைக்குத் தேவையோ அதற்கு தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கத் தவறி விட்டார்கள். கல்குடாவில் எந்தப்பாடசாலைக்கு கட்டுமானம் தேவையென்று அவருக்குத் தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தால், அவசரமாக தேவையான பாடசாலைக்கு கட்டுமானப்பணியைச் செய்திருக்க வேண்டும்.
மத்திய அமைச்சினால் கொடுக்கப்படுகின்ற நிதியைக் கொண்டு வந்து நாங்கள் கொடுக்கின்றோம். கட்டுகின்றோம் என்று பெயர் வாங்குவதற்காக சண்டித்தனத்திலே போகலாமென்று நினைக்கின்றார்கள்.

எதிர்வருகின்ற நாட்களிலே இவர்களுக்கெல்லாம் பாடம் படித்துக் கொடுக்கின்ற நாட்களாக, இவர்களுடைய வண்டாவாளங்களை தண்டாவாளங்களில் ஏற்றி வைக்கின்ற நாட்களாக வரப்போகின்ற நிலைமை மிகத்தூரத்தில் இல்லையென்பதை விளங்கிக் கொள்ளுங்கள் என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக்கிளை அமைப்பாளர் எஸ்.சம்மூன் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது, தையல் பயிற்சியினை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டதுடன், செம்மண்ணோடை தக்வா பள்ளிவாயல் வீதி மற்றும் வாஹித் வீதிகளுக்கு கொங்கிறீட் வீதிக்காக அடிக்கல் நாட்டப்பட்டதும், நாகையடி வீதி திறந்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டப்பணிப்பாளர் எச்.எம்.றுவைத், தக்வா பள்ளிவாயல் தலைவர் முஸ்தபா ஹாஜி, முன்னாள் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச்சங்க முகாமையாளர் எஸ்.கபூர், கிராம சேவையாளர் எம்.எம்.அன்வர் சதாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.01 (1) 01 (13) 01 (3) 01 (4) 01 (7) 01 (8) 01 (10) 01 (12)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here