அரசியல் நாகரீகம் தெரியாதவர் கிழக்கு முதலமைச்சர் -பிரதியமைச்சர் அமீர் அலி

0
210

IMG_2442எஸ்.எம்.எம்.முர்ஷித்

அரசியல் தலைவர்களுக்கிடையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று தெரியாமலிருக்கின்ற கிழக்கு முதலமைச்சருக்கு சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் நல்ல செயற்பாடுகளைக் கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புனாணை மேற்கு கிடச்சிமடு விசரோடை பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு செவ்வாய்கிழமை விவசாய அமைப்பின் தலைவர் எம்.வி.அஹமட் லெப்பை தலைமையில் நடைபெற்ற போது, கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்திலேயுள்ள அரசியல் மிகவும் கேவலம் கெட்டுப்போயுள்ள அரசியல். அரசியல் தலைவர்களுக்கிடையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று தெரியாமலிருக்கின்ற கிழக்கு முதலமைச்சரைப் போன்றவர்களுக்கு ஹிஸ்புல்லாஹ் போன்ற சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளைப் பார்த்து அவர் அரசியல் நாகரீகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்வாதிகள் கருத்து மோதலால் பிரிந்திருப்பார்கள். தேர்தல் முடிந்ததும் சமூகப்பார்வையோடு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுபவர்கள் தான் சிறந்த அரசியல்வாதிகளாகத் திகழ முடியும்.

கல்குடாப்பிரதேசம் விவசாய சமூகம் மற்றும் மீன்பிடி சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகமாகும். இவ்விரு சமூகமும் சிறப்பாக இருந்தால் மாத்திரம் தான் பிள்ளைகளின் கல்வி, பிரதேச அபிவிருத்தி என்ற கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

பொத்தானை பிரதேசத்தில் 127 குடும்பங்கள் காலா காலமாக வாழ்ந்து வந்த குடும்பம் இவர்களுக்கு வாக்காளர் பட்டியல், பிறப்புச்சான்றிதழ், அடையாள அட்டைகள் அங்கு இருந்தமைக்காக ஆதாரமாக இருந்த போதும், அரச அதிகாரிகள் மீள்குடியேற அனுமதிக்கின்றார்களில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எவ்வளவு நெருக்குதலோடு உங்களுக்கு சேவை செய்து வருகின்றோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

புனாணையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தை பொதுபலசேனா அணியினர் வந்து இது கிழக்காசியாவிலே கட்டப்படும் பெரிய பள்ளிவாயல் என்று சொல்லுமளவிற்கு இன்று மக்களுடைய மனநிலை மாறியிருக்கின்றது.

இலங்கையிலே இல்லாத ஒரு பல்கலைக்கழகத்தை தனி மனிதாக இருந்து செயற்படுவது சாமர்த்தியமான விடயமாகப் பார்க்க முடியாது. இது அவருடைய நேர்மைக்கு கிடைத்த வெற்றியாகும். ஒருவன் விழுகின்ற போது அவனைத்தூக்கி விடும் அரசியல்வாதியாக நாங்கள் செயற்படுகின்றோம். இன்னொருவன் செய்த வேலைத்திட்டத்தில் தங்களுடைய பெயரைப்போட்டுக் கொள்ள வேண்டுமென்று நாங்கள் ஆசைப்பட்டது கிடையாது.

அரசியல் கலாசாரத்தின் படி பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கும் விடயத்தை ஆரம்பித்த வரை கொண்டு வந்தே திறந்து வைக்கப்பட வேண்டும். இந்த பாலத்தை ஆரம்பித்து வைக்கும் நாங்களே உயிரோடிருந்தால் வந்து திறந்து வைப்போம். கிழக்கு முதலமைச்சரைப் போன்று செயற்படமாட்டோம் என்பதை அவருக்கு முதல் பாடமாகத் தெரிவிக்கின்றோம். இனி வருங்காலங்களில் பல பாடங்களைப் படிப்பித்துக் காட்டவிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

கிராமிய பாலங்கள் புனரமைப்புச்செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மாகாண அமைச்சினால் மூன்றரை கோடி ரூபாய் நிதியில் அமையப்பெறும் இப்பாலம் 22 மீற்றர் நீளமும், 4 மீற்றர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளதாக இத்திட்டத்திற்குப் பொறுப்பான பொறியலாளர் எம்.கபீர் தெரிவித்தார்._MG_2362 _MG_2405 _MG_2407 _MG_2513 IMG_2442

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here