"யார் இந்த ஈரோஸ் பஷீர்" -வரலாற்றுக்குறிப்பு

0
279

indexமுஹம்மது நளீம்

கடந்த ஜனாதிபதித்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவுகள் எடுப்பதிலிருந்து மு.கா உட்கட்சிக்குள் ஆரம்பிக்கப்பட்ட புகை  பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியல், தேசியப்பட்டியல், அதியுயர்பீட உறுப்பினர் நியமனம், கட்சியின் உயர்நிலைப்பதவிகள் என்று ஆரம்பித்தது. அது மக்கள் மத்தியில் வெளிப்படையாக எரியத் தொடங்கியது.

(13.7.2016) – திருப்பு முனை (Turning Point) அன்று தலைவர் ஹக்கீமுக்கு பகிரங்கமாக பல கேள்விகள் கேட்டு பஷீர் சேகுதாவூத் அவரால் எழுதிய கடிதத்தின் பின்பு தான் அவர் யார்? அந்த கடிதத்திற்கான காரணமென்ன ? அவரின் அரசியல் நிலைப்பாடு என்ன? போன்ற விடயங்களும் அதன் பின்னர் கட்சிக்கும் தலைமைக்கும் எதிரான அறிக்கைகள், தொலைக்காட்சி நிகழ்சிகள் என அவருடைய அரசியல் காய் நகர்த்தல்கள் என்பன மக்கள் மத்தியில் பேசப்படத்தொடங்கியது.

அதன் வெளிப்பாடாக இன்று வரையும் பல சர்ச்சைகளும், ஒழிவு மறைவுகளும் முடிவுகள் எதுவுமில்லாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்த முடிச்சுக்குள் சிக்கி இருப்பது பஸீரா? அல்லது ஹக்கீமா? அல்லது கட்சியா? என்று பார்ப்பதற்கு முன், யார் இந்த பஷீர் சேகுதாவூத்?

தமிழர்களின் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த காலப்பகுதியில் ஈரோஸ் இயக்கத்துடன் இணைந்து கொண்டு அவர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டதுடன், சில பொறுப்புக்களிலும் முக்கியமானவராக இருந்து செயற்பட்டார்.

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை கொள்கையளவில்  ஏற்றுக்கொண்டு ஜனநாயக வழிக்குத் திரும்பிய  ஈரோஸ் 1989ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயட்சைக்குழுவாகக் களமிறங்கிய போது, அந்த வேட்பாளர் பட்டியலில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களில் ஒருவராக பஷீரும் இருந்தார்.

அத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈரோஸ் ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. அதன் பின், ஈரோஸ் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டுக்கமைய பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பகிஷ்கரிப்பதாகக்கூறி தங்களுடைய உறுப்பினரகளின் விருப்பு வாக்கு அடிப்படையில் தொடராக நியமிக்கப்படுபவர்கள் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்தனர்.

அந்தப்பட்டியலில் 7வது இடத்தில் விருப்பு வாக்கைப்பெற்ற பஸீர் அவர்கள் பெயர் வந்த போது, பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிக்காமல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பொறுப்பெத்துக் கொண்டார். (ஈரோஸின் கொள்கைப்படி பகிஷ்கரிக்காமல் பதவிக்காக முதலாவது துரோகத்தனத்தைத் தொடங்கியதே ஆரம்பப்புள்ளியாக இருந்தது)

சுமார் இரண்டு வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் மறைந்த தலைவருடன் நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டார். அன்றைய பாதுகாப்பு ஏனைய பல விடயங்களில் அவருடன் மறைமுகமாகச் செயற்பட்டார்.

1994 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், மு.கா இல் இணைந்து விட்டதாக வெளிப்படையாகக் கூறினார். அதன் பின் தலைவருடன் மிக நெருங்கியவராகவும் விசுவாசியாகவும் இருந்தார். 1994 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா கட்சியூடாக பொதுத்தேர்தலில் இறங்கி தோல்வியும் கண்டார். அதன் பின் தலைவரின் அமைச்சின் இணைப்பளராகச் செயற்பட்டார்.

தலைவரின் மறைவுக்குப்பின் தான் அவருடைய பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தேசியப்பட்டியலூடாக தொடர்ந்தும் இருந்து கொண்டிருந்தது.

அன்றைய கட்சியின் பல பிளவுகளுக்கும் பிரச்சனைகளுக்கும் மத்தியில் ஹக்கீமுடன் பக்க பலமமாக இருந்து கட்சியின் வளர்ச்சியிலும் தலைமைத்துவத்திற்கெதிரான சவால்களிலும் உறுதுணையாக நின்று செயற்பட்டார்.

பெருந்தலைவரின் மறைவுக்குப்பின் கட்சியின் தலைமைத்துவப் போட்டியின் போது, கட்சி பல பின்னடைவுகளையும் சட்ட ரீதியான சவால்களையும் சந்திக்கத் தொடங்கிய போதல்லாம் ஹக்கீமுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தே தொடர்ந்தும் தேசியப்பட்டியல் பிரதிதிதுத்துவத்தை தற்காத்துக் கொண்டார்.

அந்த பிரதிநிதுத்துவத்தினூடாக சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைத்ததோ, இல்லையோ அவருக்கான நன்மைகளை அடைந்து கொண்டு தன்னுடைய அரசியலில் கருத்தியல் சிந்தனைவியல் கொள்கை கோட்பாடு என்றும் தூரநோக்கு என்றும் அதாவது “நான் கரண்டிக்காலுக்குள் பார்த்து அரசியல் செய்பவனல்ல. பல மைல்களுக்கப்பால் சமூகத்தின் நலனையும் அடுத்த பரம்பரையின் எதிர்காலத்தையும் சிந்தித்து அரசியல் செய்பவன்” என்று அடிக்கடி கூறிக்கொண்டே அரசியல் நிலைப்பாட்டில் இருந்தாரே தவிர, தேசியப்பட்டியலூடாக கிடைத்த பதவி, அரசியல் அதிகாரம், அமைச்சுப்பதவிகளை வைத்துக்கொண்டு சொல்லக்கூடியளவு சமூகம் சார்ந்த எந்த விடயங்களையும் செய்ததாகக் காணவில்லை.

சமூகத்தின் நலனும் அடுத்த பரம்பரையின் எதிர்காலத்தையும் சிந்திப்பதாகக் கூறிக்கொள்ளும் பஷீர், இதுவரை அவ்வாறான எந்த ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களையோ அல்லது ஆய்வறிக்கைகளையோ இந்த சமூக நலன் சார்ந்த விடயங்களில் எதுவும் அவரால் முன்வைக்கப்பட்டதாகக் காணவில்லை.

தமிழ் சமூகத்துடன் ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனக்கூறும் அவர், வடகிழக்கு இணைப்பு அல்லது பிரிப்பு  தொடர்பான பிரச்சனைகள், கருத்தாடல்கள் எழும்போதெல்லாம் அமைதியாக இருப்பதும் அது தொடர்பான எந்த நிலைப்பாடுகளையும் தெளிவாகக்கூறாமல் அமைதி காப்பதுவே இவரின் அரசியல் தூரநோக்கு சிந்தனையாக இருந்து வருகின்றது.

மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படும் போது அதற்கெதிராக எதுவும் பேசாமல், கட்சி ஆதரவு தெரிவித்ததும் இவரின் சமூக நலனும் எதிர்காலச் சந்ததியினரின் தூரநோக்கத்துக்காகத்தான் இன்றுமுள்ளது. தற்போது அடிக்கடி கூறிக்கொள்ளும் வார்த்தை தான் கட்சிக்குள்ளிருந்து கொண்டு பல போராட்டங்களை நடத்தியுள்ளளேன் என்கிறார். ஆனால், அவர் நடத்திய போராட்டமெல்லாம் அநீதிகளுக்கெதிரானதல்ல. தனது பதவியின் பாதுகாப்புக்கான போராட்டமாகவே இருந்துள்ளது.

அல்லாஹ்வுக்கும் அல்குர்ஆன் மற்றும் மறுமைக்கு பயந்து, நீதி கேட்பதாகவும் ஏற்பட்ட அநீதிக்கெதிராக கேள்வியெழுப்புவதகாவும் தற்போது கூறிக்கொள்ளும் பஷீர், அவருடைய அரசியல் வாழ்வில் சமூக நீதிக்காக என்றாவது கேள்வியெழுப்பியுள்ளாரா? என்று பார்த்தால், அவருக்கு ஜனநாயக அரசியலில் சமூக அந்தஸ்த்தைப் பெற்றுக் கொடுத்த பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் மர்மத்திற்கெதிராகப் போராடி நீதியை இந்த சமூகத்திற்குப் பெற்றுக்கொடுத்தாரா?

கட்சி பல துண்டுகளாகப் பிரியும் போது, அந்த பிரிவுக்கான நியாயமான காரணமென்ன? யாருடைய பக்கம் நீதி, நியாயம் என்று பார்த்து அந்த இடத்தில் நீதியாக நடந்திருக்கின்றாரா?

நஸீர் ஹாபீசிடமிருந்து பெற்ற கட்சியின் சொத்து விடயங்களை கட்சியின் தவிசாளர் என்ற வகையில் மக்கள் மயப்படுத்தி இருக்க வேண்டிய தார்மீகக்கடமையையும் நீதியும் நியாயத்தையும் எப்போதாவது வெளிப்படுத்தினாரா? ஏனைய அவரின் அரசியல் சுயநலத்திற்காகவும் அவரின் பதவிக்காகவும் எந்த இடத்திலும் சமூக நீதிக்காகவோ அல்லாஹ்வுக்கும் மறுமைக்கும் பயந்து நீதியை நிலை நாட்டியாதாக பஷீரின் அரசியல் பதவிக்காலத்தில் காணவில்லை.

பஷீரின் அரசியலில் கருத்தியல், சிந்தனையியல், கொள்கை, கோட்பாடு, தூரநோக்கு சமூகத்தின் நலனையும் அடுத்த பரம்பரையின் எதிர்காலத்தையும் சிந்தித்து அரசியல் செய்பவன் என்று கூறிக்கொள்ளும் அவர், தன்னுடைய பொருளாதரத்தையும் தன்னுடைய எதிர்காலத்திற்கான சொத்தையும் வளர்த்துக்கொள்வதையே அரசியல் கொள்கையாக அவருடைய பதவிக்காலத்திலிருந்துள்ளதே தவிர, அவர் கூறும் கருத்தியல் சிந்தனைவியல் கொள்கை கோட்பாடு தூரநோக்கு சமூகத்தின் நலன் அடுத்த பரம்பரையின் எதிர்காலம் எதையும் அவரின் அரசியல் பதவிக்காலத்தில் சொல்லக்கூடியளவுக்கு காணக்கிடைக்கவில்லை.

சுமார் 15 வருட காலப்போராட்ட அனுபவப்பயிற்சியையும், அறிவு. பொறுமை, ஞானம். புலனாய்வுத்திறணையும் வைத்துத்தான் கட்சியின் பல பிரிவுகளின் போது, என்னை ஈரோஸ் பஷீராக நின்று செயற்பட வைத்ததாகக்கூறுகிறார்.

ஆம், உண்மை தான். அவரின் கூற்றை அப்படியே ஏற்றுக்கொள்வோம். ஆனால், இன்றும் தமிழ் சகோதரர்களினால் ஈரோஸ் இயக்கத்திற்கும் அதன் ஆரம்பிப்பாளர்களான இரட்ணசபாபதி, பாலகுமாருக்கும் இன்று வரையிலும் மதிப்பும் மரியாதையும் அந்த சமூகத்திலிருந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஏனென்றால், அவர்கள் ஒரு போதும் பதவியாசை, நம்பிக்கைத்துரோகம், காட்டிக்கொடுப்பு, குழி பறிப்பு, சந்தர்ப்பவாத வஞ்சனை, ஆடம்பர வாழ்க்கை, இலஞ்சம், ஊழல், மோசடி என்றும் இவைகளுக்கப்பால் அநீதிகளுக்கெதிராக எந்தச்சந்தர்பங்களிலும் மெளனம் காத்தவர்களுமல்ல.

அவ்வியக்கத்தின் கொள்கையுமல்ல. இப்படியானவொரு இயக்கத்தின் ஆரம்ப காலப்போராளி என்று கூறி பெருமைப்படும் பஷீர், தனது சந்தர்ப்பவாத அரசியலுக்காக அந்த இயக்கத்தின் பெயரைக் கொச்சைப்படுத்தி, நாசமாக்கி இலாபம் தேட வேண்டாம்.

பஷீரின் இவ்வாறான இன்றைய செயற்பாட்டை ஒரு போதும் அந்த தமிழ்த்தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இவ்வாறான சந்தர்ப்பவாதிகளாகத்தான் நமது தலைவர்களும் இருந்திருப்பார்களோ என்ற எண்ணத்தை தமிழ் சமுகத்திற்கும் கேள்விக்குட்படுத்தி, அந்த இயக்கத்தின் மதிப்பையும் மரியாதையையும் தமிழ்ச்சமூகத்திலிருந்து இல்லாமல் செய்து விடாமலிருப்பது தான் ஈரோஸ் பஸீராக அந்த இயக்கத்திற்குச் செய்யும் மிகப்பெரிய கடமை.

ஈரோஸ் பஸீர் என்ற பெயரை மக்கள் தேர்தல்களில் நிராகரித்தாலும், தலைமைகளிடம் அந்தப்பெயரை வைத்து ஒரு வகையான மாயையை ஏற்படுத்தி, பதவியையும் அதிகாரத்தையும் அடைந்தாரே தவிர, அந்த இயக்கத்தின் கொள்கை, கோட்பாட்டை ஒரு போதும் நடைமுறைப்படுத்தியதாக எங்கும் காணவில்லை.

2000 ஆண்டு செப்டெம்பரில் நடந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் திடீர் மரணம் முதல் இன்றுவரை அந்தக்கட்சிக்குள் பதவிக்கும் அதிகாரத்திற்குமான போட்டியும், சச்சரவுகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. பேரியல் அம்மையார் தன்னுடைய இத்தா காலத்தில் தொடங்கி வைத்த அதிகாரப்போட்டி, அதாவுல்லாஹ், றிசாத் பதுர்தீன், ஹிஸ்புல்லாஹ் என்ற பட்டியலுடன் பஷீர், ஹசனலி வரையும்   தொடர் கதையாகத்தான் இருந்து வந்துள்ளது.

ஆனால், கட்சிப்பிளவுகளின் போது அதை முன்னெடுப்பவர்களால் மக்களுக்குச் சொல்லப்படும் காரணங்களும் நியாயங்களும் தலைமையும் அதன் போக்குகளும் கொள்கைக்கு மாற்றமான செயற்பாடுகள் தான் என்பதைத்தவிர, தங்களுடைய பதவி, அதிகாரத்தின் மீதுள்ள மோகமும் நற்பாசையும் என்பதை ஒரு போதும் யாரும் வெளிக்காட்டியதில்லை.

அந்த வகையில் தான், 2004ல் கட்சிச்சீர்திருத்தம் என்ற பெயரில் தலைவர் ஹக்கீமுக்கெதிராக “குமாரி’” என்ற கதாபாத்திரத்துடன் அவரின் தனிப்பட்டவாழ்க்கையில் கை வைத்து ஆடிய நாடகத்தினூடாக மீண்டுமொரு கட்சிப்பிரிவை ஏற்படுத்தி, தங்களுடைய நியாயத்தைக்கூறி பதவி அதிகாரங்களைக் கைப்பற்றியதையும் நாம் அறிந்ததை விட சகோதரர் பஷீர் நன்கறிந்தது மட்டுமல்லாமல், தலைவருக்கு பக்க பலமாக ஈரோஸ் பஷீராகச் செயற்பட்டவர் என்பதை அவரே பல பொது மேடைகளில் புகழ்ந்திருக்கிறார்.

ஆக, இப்படி புகழ்ந்த தலைவரை அன்று காப்பற்றிய பஷீர், இன்று மீண்டும் தலைவரை தனிப்பட்ட விடயத்தில் பழி தீர்க்க எடுத்திருக்கும் விடயம் தான் குமாரி. ஆம் சமூகத்தின் நலனும் அடுத்த பரம்பரையின் எதிர்காலத்தையும் சிந்திப்பதாகக் கூறிக்கொண்டு சீடிக்களையும் வாக்கு மூலங்களையும் இன்னும் இதர ஆதாரங்களையும் வெளியிடுவேன் என்று தன்னுடைய நியாயத்தை மக்களுக்கு முன்வைக்க வருகிறார்.

அப்படியென்றால், பஷீர் அவர்கள் 2004ம் ஆண்டு தலைவருடன் பக்கபலமாக நின்று அவரைக் காப்பற்றிய பஷீருக்கு எப்படி நீதி, நியாயம் கண்களை மறைத்தது. அல்லது நீதி, நியாயங்கள் கண்களை மறைத்ததா? அல்லது பதவி அதிகாரமும் சுயநலமும் கண்களை மறைத்ததா? அப்போது எங்கு போனது பஷீரின் சமூக நலனும் அடுத்த பரம்பரையின் எதிர்காலச்சிந்தனையும்.

2016 இல் கட்சியின் செயலாளருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக நியாயம் கேட்டு கட்சியின் தலைவருக்கும் உச்சபீட உறுப்பினர்களுக்கும் பகிரங்க கடிதம் அனுப்பிய பஷீர், அதில் கட்சியின் நலனுக்காக நான் கட்சியின் இக்கட்டான காலங்களிலெல்லாம் நீதிக்காகவும், நியாயத்திற்காகவும்  தலைவரோடு தோளோடு தோள் நின்றதாகவும் தற்போது செயலாளருக்கு ஏற்பட்ட அநிதிக்கெதிராக கேள்வியெழுப்புவதகாவும் அல்குர்ஆன் மற்றும் மறுமைக்கு பயந்து நீதி கேட்பதாகாவும் கூறியிருந்தார்.

அப்படியொரு தனி நபருக்கான நீதிக்காகப் போராடி கண்ட வெற்றியில் தான் இன்று முஸ்லிம் கூட்டமைப்பு என்றும், தூய முஸ்லிம் காங்கிரஸ் என்றும் புதிய பிளவுகளை ஏற்படுத்தி, அல்குர்ஆன் மற்றும் மறுமைக்கு பயந்து நீதி நியாயத்தை நிலைநாட்ட வந்திருக்கின்றாரா? அல்லது பதவி அதிகாரங்களிலிருந்த காலங்களில் நடந்த அநீதிகளின் போதொல்லாம் தன்னுடைய பதவிக்கும் சுயநலத்திற்கும் நீதி நியாயத்தைக் கண்டு கொள்ளாமல் மறுமை அல்குர்ஆன் இவைகளை மறந்து வாழ்ந்தாரா? இந்த பஷீர்.

முஸ்லிம்களின் உரிமை அரசியல் ஒற்றுமையால் ஏற்பட்ட பலமும் அதனால் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களும் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்திய அச்சம் முஸ்லிம் அரசியல் பலத்தை பலவீனமடையச் செய்வதன் மூலமாகத்தான் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஆட வைக்க முடியுமென்ற ஆட்சியாளர்களின் கனவை நனவாக்க காலத்திற்குக்காலம் பலர் முஸ்லிம் அரசியல் ஒற்றுமையை சீர்குலைத்திருக்கிரார்கள். அதில் ஆட்சியாளர்களும் பேரினவாதிகளும் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தான் மற்றுமொரு காரணியாக இன்று பஷீரும் செயற்படுகின்றாரா? என்ற கேள்வியும் சந்தேகமும் எல்லோருக்குமுள்ளது.

கட்சியைத்தூய்மைப்படுத்த வேண்டும். அரசியலில் கருத்தியல், சிந்தனையியல், கொள்கை, கோட்பாடு என்றும் தூரநோக்கு என்றும் அதாவது “நான் கரண்டிக்காலுக்குள் பார்த்து அரசியல் செய்பவனல்ல. பல மைல்களுக்கப்பால் சமூகத்தின் நலனையும் அடுத்த பரம்பரையின் எதிர்காலத்தையும் சிந்தித்து அரசியல் செய்பவன்” என்பதும்  உண்மையென்றால், நீதி நியாயத்திற்காகவும்  கொள்கைக்காகவும் இலட்சக்கணக்கான மக்களின் தியாகத்தாலும் பல தாய்மார்களின் பிரார்த்தனைகள் நோன்புகளாலும் முஸ்லிம்களின் மீட்சிக்காக உருவாக்கப்பட்ட கட்சி தடுமாறவும், அதன் இலக்கை மாற்றவும் அனுமதியளிக்க முடியாது சகோதரர் பஷீர் அவர்களே.

ஆகவே, சகோதரர் பஷீர் கூறும் கருத்தியல் சிந்தனையும் தூரநோக்கும் அடுத்த பரம்பரையின் எதிர்கால நலனுக்குச் செய்ய வேண்டிய கடமை இருந்தால் உண்மைக்கு உண்மையாக நீதி நியாயத்துடனும் சமூகத்தின் மீதும் அக்கறை இருந்தால் பதவி அதிகார சுயநலத்திற்கான பழி வாங்கல், வஞ்சகம் குறுகிய சிந்தனை இவ்வாறான தீய குணங்களையும் எண்ணங்களையும் மறந்து விட்டு நன்மையை ஏவி தீமையைத் தடுத்து, சமூக நீதியை நிலை நாட்டதுவதனூடாகத்தான் சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கையும் செயற்றிறனும் சகோதரர் பஷீர்ருக்கு இருக்க வேண்டும்.

அதற்கு மாற்றமாக, பதவி, அதிகாரம் என்ற மோகத்திற்கு அடிமைப்பட்டு அநீதிகளுக்கெதிராகப் போராடாமல் நீதி, நியாயம், நம்பிக்கை, சத்தியம் போன்ற முஸ்லிமின் அடிப்படைப் பண்புகளை மறந்து, சந்தர்ப்ப கால சூழ்நிலைக்கேற்ப அரசியல் நடிகர்களுடன் இணைந்து கொண்டு தூய அரசியல் பயணத்தைத் தொடரலாம் என்கின்ற பஷிரின் நல்லெண்ணம் ஒரு போதும் வெற்றியைத்தராது.

அடுத்த சந்ததியின் எதிர்காலத்திற்கு கொடுக்க வேண்டிய அரசியல் கலாசார முறையும் இதுவல்ல என்பதைப்புரிந்து, அவரின் தூய அரசியலுக்கப்பால் சகோதரர் பஷீர் உள்ளத்தாலும் செயற்பட்டாலும் தூய்மைப்படுவதனூடாகத்தான் எதிர்காலச்சந்ததியினருக்கு நேர்மையான பங்களிப்பைச் செய்தவன் என்ற மனநிறைவோடு நாளை அல்லாஹ்வின் சன்னிதானத்தில் நிமிர்ந்து நிற்கின்ற மனமகிழ்ச்சிக்குரியவேராகவே சகோதரர் பஷீர் மாற வேண்டுமென்பதுவே மக்களின் இன்றைய எதிர்பார்ப்பகும்.

“அல்லாஹ் நம்மனைவரையும் சத்தியத்தின் வழியில் நிலை நிறுத்துவனாக.!! ஆமீன்!!”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here