சமூகப்பிரச்சினையில் எழுத்தறிவின்மை- எம்.எம்.ஏ.ஸமட் (சர்வதேச எழுத்தறிவு தின சிறப்புக்கட்டுரை)

0
709

samad -2‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’ என்ற முதுமொழியை சிறுவர் முதல் வளர்ந்தவர்கள் வரை அறிந்து வைத்திருக்கிறோம். ஒரு மனிதன் வாழ்வதற்கு கண்னும், பார்வையும் எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு முக்கியமானதுதான் எண்ணும், எழுத்தும்.

எழுத்தறிவென்பது அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட கருத்துக்களைக் குறிப்பிட்ட கருத்துடன் பொருத்தி இனங்காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல், தகவல் பரிமாற்றம் செய்தல், கணித்தல் ஆகியவற்றின் தொகுப்பு என ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ வரைவிலக்கணப்படுத்துகிறது.

இருப்பினும், பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பிலுள்ள நாடுகள் எழுத்தறிவு தொடர்பான கருத்துக்களை விரிவாக்கம்  செய்துள்ளது. அதாவது, நவீன தொழில்நுட்பம், சிக்கலான சூழல்கள் போன்றவற்றிலிருந்து அறிவைப் பெறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதே எழுத்தறிவு என அந்நாடுகள் குறிப்பிடுகின்றன.

கி.மு.8000 ஆண்டளவில் எழுத்தறிவு சிந்தனை உருவானதாக எழுத்தறிவு தொடர்பான வரலாற்று ஆய்வுச்சுட்டிக்காட்டும் நிலையில், மனித நாகரீக வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில் எழுத்தறிவானது மேலாண்மை செயல்களில் ஈடுபடுவோர், அதிகாரத்திலுள்ளோர் மற்றும் சமூகத்தின் மேல் வர்க்கத்தினர்கள் என ஒரு வீதத்திற்கும் குறைவானர்கள் மாத்திரமே எழுத்தறிவுடையவர்களாக இருந்தார்கள் என எடுத்துக் காட்டுகிறது.

எழுத்தறிவானது பரிணாம வளர்ச்சி கண்டுள்ள போதிலும், எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக பல மில்லியன் கணக்கானோர் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மொழியில் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும், தெரியாமல் இருத்தல் எழுத்தறிவின்மை என்று வரையறை செய்யப்படுகிறது.

உலகில் பல்வேறு விடயங்கள் எழுத்துக்களாகப் பரவிக் கிடக்கும் நிலையில், எழுத்தறிவின்மையால் அவற்றை உணர்ந்து அறிந்து கொள்ள இயலாத நிலையேற்படுகிறது. ஆதலால், எழுத்தறிவின்மையானது, கல்வியால் தீர்க்கப்பட வேண்டிய மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது.

இவற்றைக் கருத்திற்கொண்டு உலகில் வாழும்  எழுத்தறிவற்றோரை எழுத்தறிவுடையோராக மாற்றுவதற்காக, எழுத்தறிவு பற்றிய விழிப்புணர்வை உலகளவில் முன்கொண்டு செல்வதற்காக சர்வதேச எழுத்தறிவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

சர்வதேச எழுத்தறிவு தினமும் தற்கால உலகும்

1965ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி ஈரானின் தலைநகர் தெஹ்ரானினல் நடைபெற்ற உலகளாவிய கல்வியமைச்சர்கள் மகாநாட்டில் சர்வதேச ரீதியாக எழுத்தறிவின்மையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்குத்தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்ககள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்களில் ஒன்றாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அனுசரிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

இத்தீர்மானத்தின் அடிப்படையில், 1966ஆம் ஆண்டு முதல் சர்வதேச எழுத்தறிவு தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி  சர்வதேச ரீதியாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டுடன் 61 வருடங்களாகக் கொண்டாடப்படும் இச்சர்வதேச தினமானது, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொனிப்பொருளுடன் அனுஷ்டிக்கப்படுவது வழமை. அதன் பிரகாரம், இவ்வாண்டின் சர்வதேச எழுத்தறிவு தினமானது ‘எண்ணியல் உலகில் எழுத்தறிவு’ (literacy in a digital world) என்ற கருப்பொருளுடன் அனுஷ்டிக்கப்பட வேண்டுமென ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.

‘டிஜிடல்’ உலகினூடாக வசதி வாய்ப்புக்களைப் பெற்று மேன்மையடைவதற்கும், தனிநபர்களுக்கிடையிலும், சமூகங்களுக்கிடையிலும் தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அவற்றின் அடிப்படையில் மக்களிடையிலான எழுத்தறிவு எந்தளவுக்கு முக்கியமென்பதை வலியுறுத்தும் நோக்கோடு, இக்கருப்பொருளுடன் இத்தினம் கொண்டாடப்படுவதாக யுனஸ்கோ அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மக்களின் வாழ்க்கை மாற்றத்திலும், தொழில், கற்றல் செயற்பாட்டிலும், சமூக மாற்றத்திலும் ‘டிஜிடல்  தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்கேற்ப முன்னோக்கிச் செல்வதற்கு தகவல் பரிமாற்றம், அறிவு முகாமைத்துவம், கைத்தொழில் உற்பத்தி, சமூக சேவை போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்காக எழுத்தறிவுத்திறன் விருத்தி செய்யப்படுவது அவசியமென வலியுறுத்தப்படுகிறது.

ஏனெனில், உலகளவில் எழுத்தறிவு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலை நோக்குகின்ற போது, அந்நாடுகள் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளாகக் காணப்படுகின்றன. 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உலகின் அதிகம் எழுத்தறிவு கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் முதன்மை இடத்தை வகிப்பது ரஷ்யாவாகும்.  கனடா, ஜப்பான், இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா, தென் கொரியா, ஐக்கிய இராஜ்ஜியம், நியுஸிலாந்து, பின்லாந்து, அவுஸ்திரேலியாக ஆகிய நாடுகள் அடுத்தடுத்த நிலையில் காணப்படுகின்றன.

இதே நிலையில், எழுத்தறிவு வீதம் மிகவும் குறைந்த 10 நாடுகளின் பட்டியில் ஆப்கானிஸ்தான் உட்பட ஆபிரிக்க நாடுகளே அதிகம் காணப்படுகின்றன. அதி குறைந்த எழுத்தறிவு வீதம் கொண்ட நாடாக தென் சூடான் காணப்படுகிறது.

இது தவிர, 2015ஆம் ஆண்டு யுனஸ்கோ அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் உலகின் ஏறக்குறைய 7 பில்லியன் சனத்தொகையில் 757 மில்லியன் வளர்ந்தவர்கள் எழுத வாசிக்கத்தெரியாதவர்களாகவுள்ளனர். இவர்களில் 15 வயதிற்கும் அதை விட அதிக வயதைக் கொண்டவர்களே அதிகமானவர்கள்.  இவர்களுள் 115 மில்லியன் இளைஞர், யுவதிகள் எழுத வாசிக்கத்தெரியாதவர்களாகவும்  இத்தொகையினரில் மூன்றிலிரண்டு வீதத்தினர் யுவதிகள் எனவும் சுட்டிக்காட்டப்படுவதுடன், 264 மில்லியன் பாடசாலையை விட்ட விலகிய சிறுவர்கள் அடிப்படை எழுத்தறிவு கூட இல்லாதவர்களாக உலகளவில் காணப்படுகின்றனர்.

இதே வேளை, தென்கிழக்காசி நாடுகளுக்கான சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளினதும் எழுத்தறிவு வீதத்தினை நோக்குகையில், மாலைதீவு 99 வீதத்துடன் முதல் நிலையிலும் ஆப்கானிஸ்தான் 28.1 வீதத்தைக் கொண்டு கடைசி நிலையிலும் காணப்படுகின்ற அதே வேனை, 92.6 வீதத்தைக் கொண்டு இலங்கை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. அத்துடன், எழுத்தறிவு வீதம் தொடர்பில், 2015ல் 160 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலில்  இலங்கை 83வது இடத்தை வகிக்கிறதென்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இலங்கையும் எழுத்தறிவுக்கான வாய்ப்புக்களும்.
2015ன் கணக்கெடுப்பின் பிரகாரம் 92.6 வீதமானோர் எழுத்தறிவுடையவர்கள் என்று நாம் பெருமைப்பட்டாலும், எழுத்தறிவைப் பெறாமல் இன்னும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கவலை கொள்ளத்தக்கது மாத்திரமின்றி, அது ஒரு சமூகப் பிரச்சினையாகவும் நோக்கப்படுகிறது.

ஏனெனில், ஒவ்வொருவரும் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைவதற்கு கல்வி இன்றியமையாதது. அதற்கான ஆரம்பப்படியே எழுத்தறிவை கற்றுக்கொள்வதாகும். இந்த எழுத்தறிவைக் கற்றுக்கொள்வதற்காகவே ஒவ்வொரு 5 வயதைப்பூர்த்த செய்த பிள்ளைகளும் பாடசாலைகளில் சேர்க்கப்படுகிறார்கள். குறுகிய காலத்தில் அதிகளவிலான வளத்தை மனிதனுக்குள் புகட்டக்கூடியது பாடசாலையும், பாடசாலைக் கல்வி வாய்ப்புமாகும்.

ஆனால், துரஷ்டவசம் என்னவெனில், சமூகத்தின் மத்தியிலுள்ள பல சிறுவர்கள் இன்னும் தங்களுடைய அடிப்படை உரிமையப் பெறாதவர்களாக அல்லது மறுக்கப்பட்டவர்களாக, பாடசாலை வாசற்படியையும் மிதிக்காதவர்காகவுள்ளனர் என்பது சமகால பேசு பொருளாகவுள்ளதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

குடிசனப்புள்ளி விபரத்திணைக்களம் கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கொண்ட சிறுவர்கள் தொடர்பான ஆய்வின் பிரகாரம் 5 முதல் 17 வயதிற்குட்பட்ட 4,571,442 சிறுவர்களில் 4,118,781 பேர் பாடசலைக்குச் செல்வதாகவும்  452,661 சிறுவர்கள் பாடசாலை செல்லவில்லையெனவும்  சுட்டிக்காடடப்பட்டுள்ளது.

இத்திணைக்களம் வெளியிட்ட விபரங்களின் பிரகாரம், பாடசாலை செல்லாத இத்தொகைச் சிறார்களில், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அதன் மீது விரும்பமில்லாது 77,730 சிறுவர்களும், 19,213 மாற்றுத்திறனாளிகளும், வறுமை அல்லது குடும்ப நிதி நிலைமை காரணமாக 14,922 சிறுவர்களும். குடும்பத்திற்கு உதவ வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் 7,567 பேரும், நீண்ட கால நோயின் காரணமாக 4,709 சிறுவர்களும் என 124,141 சிறுவர்கள் சமூகக்காரணிகளின் காரணமாக பாடசாலைக்குச் செல்லாதுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்குச் செல்லாதுள்ள எஞ்சிய தொகையினர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை முடிவுக்காக காத்திருப்பவர்களாகவும், பாடசாலைக்கு அனுமதிப்பதற்கான உரிய வயதை அடையாதவர்களாகவும், பாடசாலைக்குச் செல்லாது க.பொ.த சாதாரண தரத்தை வீட்டில் கற்பவர்களாகவும், தொழிற்பயிற்சி பெறுவர்களாகவும், பொருத்தமான பாடசாலைக்காக காத்திருப்பவர்களாகவும், சூழல் பாதுகாப்பற்ற பாடசாலை என்ற காரணங்களுகாகவும் பாடசாலைக்குச் செல்லாதுள்ளனர். இவ்வாறு பாடசாலைக்குச் செல்லாத ஏறக்குறைய 450,000 சிறார்களில் ஏறக்குறைய 124,000 சிறார்கள் சமூகக்காரணிகளின் காரணமாக எழுத்தறிவின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாத்து இவர்களுக்கான கல்வி வாய்ப்பை வழங்க அரசோடும் அரச அதிகாரிகளோடும் இணைந்து சமூக அங்கத்தவர்கள் தங்களது பங்களிப்பை வழங்குவது தார்மீகப் பொறுப்பாவுள்ளது. ஏனெனில், எழுத்தறிவின்றி அல்லது முறையாகக் கல்வி வாய்ப்பின்றி வாழ்வதானது பல சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

குறிப்பாக, போதைவஸ்த்துப்பாவனை, போதைவஸ்து வியாபாரம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல், வன் கொடுமைக்குள்ளாகுதல், வன்முறையில் ஈடுபடுதல் போன்ற சமூகப்பிரச்சினைக்கான பிரதான காரணமாக இருப்பது முறையாக கல்வி வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளமையாகும். முறையான கல்வி வாய்ப்பில் இந்த எழுத்தறிவு அதிக முக்கியமாகும்.

இந்நிலையில், பாடசாலை செல்லாத மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை பாடசாலையில் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய பொறுப்பை கல்வியமைச்சின் முறைசாரா மற்றும் விஷேட கல்விப்பிரிவு மாகாண, வலய, கோட்ட மட்ட கல்வியதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டு வருகிறது என்பதும் இங்கு பதியப்பட வேண்டியவொன்றாகும்.

கல்வியமைச்சின் நடவடிக்கையும்  சமூகப்பங்களிப்பும்
பாடசாலை செல்லாத சிறார்களை அடையாளம் கண்டு அவர்களை பாடசாலைகளில் இணைப்பதற்கான பல்வேறு திட்டங்கள் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கட்டாயக்கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ் இவ்வாறு பாடசாலை செல்லாதுள்ள சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களை பாடசாலைகளில் இணைப்பதற்காக பாடசாலைக்குழு மற்றும் கண்காணிப்புக்குழுக்கள் கோட்டம், வலயம் மற்றும் மாகாண மட்டங்களில் உருவாக்கப்பட்டு அக்குழுக்களின் மூலம் குறித்த சிறார்கள்  அடையாளம் காணப்பட்டு பாடசாலைகளில் சேர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளாகவுள்ள சிறுவர்கள் தேசிய, மாகாணப் பாடசாலைகளிலுள்ள விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான விஷேட கல்விப்பிரிவிலும், தேசிய ரீதியாகவுள்ள அரச உதவி பெறும் விஷேட கல்விப்பாடசாலைகளிலும் இணைக்கப்பட்டு அவர்களுக்கு எழுத்தறிவு வழங்கப்படுகிறது.

அத்தோடு, முறைசாராக் கல்வித்திட்டத்தினூடாக சமூக கற்றல் நிலையங்களினூடாகவும் சிறார்கள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு எழுத்தறிவு வழங்கப்படுகிறது. இவ்வாறு அடிப்படைக்கல்வியறிவு வழங்கப்படாத சிறார்கள்  தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு அவர்களையும் கற்றோர் சமூகத்தின் உறுப்பினர்களாக சமுதாயத்தோடு இணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அதற்கான பூரண ஒத்துழைப்பு சமூகத்தின் மத்தியிலிருந்தும் வழங்கப்படுவது அவசியமாகும்.

‘டிஜிடல்’ உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் விண்ணையும் தாண்டிச்சென்று கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், அதன் பயன்பாட்டினால் ஒரு பக்கம் பெறுமதியான பயனும் மறுப்பக்கம் அவற்றின் விளைவு உயிர்களைக்கூட காவு கொள்ளக்கூடியதாக அமைந்துள்ள காலத்தில் அவற்றை எவ்வாறு பாதுகாப்புடன் பயன்படுத்துவது என்ற அறிவும் அனுபவமும் தேவையாகவுள்ளது. இவ்வாறான கல்வியறிவின் அவசியம் காலத்தின் தேவையெனக்கருதி உணரப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் நமக்கு மத்தியில் எழுத்தறிவின்றி ஒரு சமூகம் முடங்கிக்கிடப்பது தொடர்பில் நமது மனங்பாங்குகள் மாற வேண்டிய தேவையுமுள்ளது.

நமது பிள்ளைகள் பிரபல்ய பாடசாலைகளில் படித்துப்பட்டம் பெற வேண்டுமென்று நினைக்கும் ஒவ்வொரு வரும் தங்களது வீடுகளிலும், வேலைத்தளங்களிலும் பாடசாலைக்குச் செல்லும் வயதிலுள்ள மாற்றான் பிள்ளைககளை குறைந்த சம்பளத்திற்கு தொழிலாளிகளாக அமர்த்தி அவர்களின் கல்வி உரிமை உட்பட அவர்களுக்குறித்தான உரிமைகளையும், ஆசைகளையும் மலுங்கடிக்கும் தங்களது செயற்பாடுகள் தொடர்பில் கொஞ்சம் சுயவிசாரணை செய்வதும் அவசியமாகும்.

அத்தோடு, குறிப்பாக மாற்றுத்தினாளியான பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தைச் சார்ந்த பெற்றோர்களும் அவர்களது உறவினர்களும் அவர்களுக்கான கல்வி உரிமையை வழங்க முயற்சிக்க வேண்டும். ‘அ’ யைக்கூட அறியாதவர்களா பல மாற்றுத்திறனாளிப் பிள்ளைகள் பெற்றோர்கள் விட்ட தவறினால் சமூகத்தின் மத்தியில் கொத்தடிமைகளாகவும், கூலி வேலையாட்களாகவும், நகைப்புக்குரியவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அக்காலத்தில் அவர்களுக்கு கல்வி வாய்ப்பைப் பெற்றுக்  கொடுக்கக் கூடிய நிலைமை இல்லாத நிலை இருந்த போதிலும், தற்காலத்தில் அவ்வாறான நிலை காணப்படவில்லை. பல்வேறு வாய்ப்பு வசதிகள் மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு எழுத்தறிவைக் கற்றுக் கொடுப்பதற்காக காணப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்துவதில் குறித்த பெற்றோர்களும் உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டியது மனித நேயப்பொறுப்பாகும்.

சுமூகக்காரணிகளின், காரணமாக  எழுத்தறிவின்றி நாட்டில் வாழும் ஏறக்குறைய 124,000 சிறார்களுக்கும் எழுத்தறிவைப் பெற்றுக் கொடுப்பது சமூகத்திலுள்ள ஒவ்வொரு சமூகப் பிரஜையினதும் மனித நேயப்பொறுப்பாகவுள்ளதோடு, எழுத்தறிவு கொண்ட சமூகத்தின் மத்தியில் எழுத்தறிவின்மை என்பது கல்வியினால் தீர்க்கப்பட வேண்டிய சமூகப்பிரச்சினை என்பதும் உணரப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here