ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான அனுதாபங்களும் எமது பொறுப்புக்களும்

0
85

201708210005309550_NC-supports-deportation-of-Rohingya-Muslims-Rana_SECVPF.gifஆரிப் எஸ்.நளீம்

நடப்பு நூற்றாண்டில் முஸ்லிம் சமூகத்தின் ஒரு சாரார் அளவுக்கதிகமான செல்வச்செழிப்புடனும் தனி மனித தெரிவுச்சுதந்திரத்துடனும் இராஜபோக வாழ்கை வாழ்ந்து வரும் அதே வேளை, மற்றொரு சாரார் பிறந்து வளர்ந்த இருப்பிடங்களை, நில புலங்களை விட்டும் விரட்டியடிக்கப்படுகிற பரிதாப நிலை.

காருண்யத்தையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் சமயத்தலைவர்களில் சிலர் பலகீனமான சமூகத்தினரிடம் காட்டுமிராண்டித்தனமான அகோர முகத்துடன், கொடுங்கோள் ஆட்சி  புரிவதும், அந்த இனத்தைத் துடைத்தெறிய முனைவதும் கவலை தருகின்றது.

இதே வேளை, சர்வதேசத்தின் கண்களுக்கு ரோஹிங்கிய முஸ்லிம்களின் இன அழிப்பு ஒரு சர்வ சாதாரணமாகவே தெரிகிறது. மியன்மார் தேசத்தின் ரோஹிங்கிய வாழ் இஸ்லாமிய சகோதரர்கள் படும் வேதனைகளைப் பார்க்கையில், கல் நெஞ்சும் கரைந்து விடும்.

துப்பாக்கிகளைச்சுமந்த இரக்கமற்ற இராணுவப் படையினரைப் பயன்படுத்தி ஊரை விட்டு விரட்டியடிக்கப்படுகின்ற போது, உயிரை பணயம் வைத்து காட்டு வழியாக விரண்டோடி வருகையில், கன்னி வெடியில் அகப்படுவோரும், படகு கடலில் மூழ்கி இறந்து போவோரும் எண்ணிக்கையில் அதிகம். முஸ்லிம்கள் நசுக்கப்படும் தேசங்களை பூகோள ரீதியில் பார்க்கையில் வெட்கித்தலை குனிய வேண்டியுள்ளது.

பல நாள் பசி கிடந்த காட்டுப்புலி அதன் உணவு மீது பாய்ந்து வருவது போல, எனது முஸ்லிம் உம்மத்தின் மீது அன்னியர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அப்படியாயின், இஸ்லாமியர்கள் மிகக்குறைந்தளவினராகவா இருப்பார்கள் என ஸஹாபாத்தோழர்கள் கேட்க, இல்லை அவர்கள் கடல் நுரை போல இருப்பார்கள். ஆனால், சக்தி பெறமாட்டார்கள்.அவர்களுக்கிடையே ஒற்றுமை காணப்படாது. என 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி அவர்களின் தீர்கதரிசனம் எவ்வளவு உண்மையானது.

எமது சொந்தங்கள் இன்னல்களுக்குள்ளாக்கப் படுகையில், நாம் கொதித்தெழுவது இயல்பு தான் ஜனநாயக நாடொன்றில் வாழும் ஒரு இனம் அது சார்ந்த இன்னொரு இனத்தின் உரிமைக்குரலாக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதிலோ, மனக்குமுறல்கள் பொரிக்கப்பட்ட பதாதைகளை கையிலெடுப்பதிலோ தவறில்லை. இருப்பினும், நாம் வாழும் சூழலை நினைவிற்கொண்டு எமது அசைவுகளை அமைத்துக்கொள்ளல் வேண்டும்.

மியன்மார் முஸ்லிம்களுக்கெதிரான அநியாயம் அட்டூழியங்களின் பின்னால் கடும் போக்கு பெளத்த தீவிர ஆட்சியாளர்கள் இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த பெளத்தர்களையும் நாம் இந்த வரையறைக்குள் அடக்கி அவர்கள் மேல் விமர்சனங்களை முன்வைக்க முடியாது.

அவர்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை வெறுக்கின்றவர்களும் ஆபத்து வேளையில் உதவும் மனம் கொண்ட மனிதாபிமானம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதனை மெய்ப்பிக்குமுகமாக எமது நாட்டிலிருந்து ஜோதி சேன தேரரின் தலைமையில் மூவர் அடங்கிய குழு வங்காள தேசம் சென்று உயிரச்சுருத்தலால் சொந்த மண்ணை, உயிர், உடமைகளை இழந்து மியன்மாரை விட்டு வெளியாகி வங்க தேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை  வழங்கி வருவதாக அறிய முடிகிறது.

இவைகளையெல்லாம் கருத்திற் கொண்டும், இனவாதத்தை முன்நிறுத்தி அரசியல் இலாபம் தேட முனைவோரின் வாய்களுக்குள் அவலை அள்ளிப்போடுவது போல் எமது சமூக வலைத்தளப் பதிவுகளும் படங்களும் ஆர்ப்பாட்டங்களும் அமைந்து விடக்கூடாதென்பதே சமதான விரும்பிகளான சகலரின் விருப்பமுமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here