அக்குறாணை மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்கு பிரதியமைச்சர் அமீர் அலியால் தீர்வு

0
304

01 (13)எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்குறாணை, மினுமினுத்தவெளி பிரதேசத்திற்குச் செல்வதற்கான ஆற்றைக்கடப்பதற்கு பாலமின்மையால் பல சிரமங்களை எதிர்கொண்ட மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் பாலம் அமைக்கப்படவுள்ளதை முன்னிட்டு  பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்திற்கேற்ற பாதைகளில்லாமல் அக்குறாணை மற்றும் மினுமினுத்தவெளிக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதனால் போக்குவரத்துப்பாதைகள் இல்லாததாலும் அக்கிராமங்களுக்குச் செல்லும் பிரதான பாதையூடாகச் செல்லும் அக்குறாணை ஆற்றைக்கடப்பதற்கு பாலம் அமைத்துத்தருமாறும் அரசியல்வாதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல கரிக்கைகளை விடுத்தனர்.

இக்கிராமத்திற்கு மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியூடாக புணாணையிலிருந்து எட்டு கிலோ மீற்றர் தூரம் சென்று ஆற்றைக்கடந்தால் அக்கிராமம் வந்து விடும். ஆனால், அக்கிராமத்திற்கு ஆற்றைக்கடக்காமல் செல்வதாக இருந்தால், வாழைச்சேனையிலிருந்து கிரான் சந்திக்குச் சென்று அங்கிருந்து புலி பாய்ந்தகல் சந்தியூடாக நாற்பது கிலோ மீற்றர் சுற்றியே செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இம்மக்களுக்குள்ளது.

இக்கிராமத்திற்குச் செல்லும் நாற்பது கிலோ மீற்றர் தூரத்திற்கான பாதைகள் சீரின்மையால் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். ஒரு நோயாளியை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வருவதென்றால், மிகவும் சிரமப்படுவதாகவும் சில வேளைகளில் நோயாளி மரணமடையும் துர்ப்பாக்கிய நிலையேற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அக்குறாணை மினுமினுத்தவெளி கிராம மக்களுக்கு அக்குறானை ஆற்றிக்கான பாலம் அமைத்துத்தருவதாக கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் வாக்குறுதியளித்த போதும், அது நிறைவேற்றப்படவில்லை. எங்கள் கிராமத்தின் நலன்கருதி அக்குறாணை ஆற்றைக் கடப்பதற்கு பாலமொன்றை அமைத்துத்தருமாறு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அவரது முயற்சியினால் எமக்கு பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதனை அமைத்துத் தருவதற்கு முயற்சித்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபாவிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய கிராமிய பாலங்கள் புனரமைப்புச்செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இப்பாலம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்குறானை மினுமினுத்தவெளி கிராமத்தில் இருநூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் ஜீவனோபாயத் தொழிலாக கூலி, விவசாயம், மீன்பிடித்தொழிலை நம்பி வாழ்கின்றனர். இக்கிராமத்தில் தற்போதுள்ள பிரச்சனையாக தண்ணீர்ப் பிரச்சனை மற்றும் யானைகளினால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்ந்தேச்சியாக காணப்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

குடி தண்ணீரை பெற வேண்டுமாயின், பல தூரம் நடந்து ஆற்றில் தண்ணீர் எடுத்து வந்து குடிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், இக்கிராமம் காட்டுப்பகுதியை அண்மித்துக் காணப்படுவதால் வீதிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இக்கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர்க்குழாய்களும் பொருத்தப்பட்டுக் காணப்படுகின்றது. ஆனால், குடிப்பதற்கு அதனூடாக தண்ணீர் வருவதில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, குடிநீர் பிரச்சனையைத் தீர்த்துத்தருவதுடன், அல்லது அக்குறானை மினுமினுத்தவெளி கிராமத்தில் கிணறுகளை அமைத்து தருமாறும், இல்லாதவிடத்து இங்குள்ள நீர்த்தாங்கிகளில் தண்ணீரை வழங்கியாவது உதவி நல்குமாறு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அத்தோடு, மாலை நேரங்களில் வெளி இடங்களுக்குச் செல்லவோ அல்லது அங்கிருந்து வரவோ முடியாது. மாலை நேரங்களில் யானைகள் வீதிகளுக்கு வருவதால் இந்நிலைமை ஏற்படுகின்றது. ஆனால், எமது கிராமத்தைச் சுற்றி மின்சார வேலி அமைந்துள்ளதால், கிராமத்திற்குள் யானை வருகை தராது. ஆனால், ஆற்றில் நீர் எடுக்கப்போக வேண்டுமாயின், மாலை நேரத்திற்கு முன்னர் போக வேண்டிய நிலைமை காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்திற்கு அரசியல்வாதிகளின் வருகை மிகவும் குறைவாகக் காணப்படுவதுடன், புதிய அரசியல்வாதிகளுக்கு இக்கிராமம் இங்குள்ளதா? என்று தெரியுமோ என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.01 (1) 01 (2) 01 (3) 01 (4) 01 (5) 01 (6) 01 (7) 01 (8) 01 (9) 01 (10) 01 (11) 01 (12) 01 (13)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here