(எஸ்.அஷ்ரப்கான்)
20ஆவது திருத்தச்சட்டமென்பது மாகாண சபைகளின் காலங்கள் நீடிக்கப்படுவது தொடர்பிலானவொன்று என்பதற்கப்பால் மாகாண சபை தேர்தல் முறைமையிலும் கலப்புத்தேர்தல் முறைமையை அறிமுகஞ்செய்கின்ற உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதனை முஸ்லிம் சமூகம் விளங்கிக் கொள்ள வேண்டுமென நாபீர் பௌண்டேசன் தலைவரும், அரசியல் செயற்பாட்டாளருமான பொறியியலாளர் யூ.கே.நாபீர் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே நாபீர் மேற்கண்டவாறு தெரிவித்திருகின்றார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
மாகாண சபைத்தேர்தல் முறைமையிலும் கலப்புத்தேர்தல் முறைமையை அறிமுகஞ்செய்கின்ற உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமற்ற ஒரு பகுதியாகும். உள்ளூராட்சி மன்றங்களுக்காக வகுக்கப்பட்டிருக்கின்ற வட்டார முறைமையில் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்பட்டிருக்கின்றது. நாடாளுமன்றத்தேர்தல் முறைமையிலும் தொகுதி நிர்ணயத்தில் முறைகேடுகள் ஏற்படலாம் என்கின்ற சந்தேகமும் இருந்து வரும் இச்சந்தர்ப்பத்தில், மாகாண சபைத்தேர்தல் முறைமைக்காக வகுக்கப்படும் தொகுதி எல்லை நிர்ணயத்திலும் முஸ்லிம்களுக்கு பாரிய நஷ்டம் வரும் வகையில் அமைய முடியுமென்ற நியாயபூர்வமான சந்தேகம் ஏற்படுவது இன்றைய அரசியல் களத்தில் வியப்புக்குரியதல்ல.
எந்த சபையானாலும், அதில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அம்மக்களின் எண்ணிக்கைக்கேற்ப அமைவது அவசியமானது. இதற்கு சில பகுதிகளில் முஸ்லிம்களில் குடியிருப்பு சாதகமாக இல்லாத நிலை இருப்பதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். ஆயின், முஸ்லிம்களைப் பொறுத்த வரை விகிதாசார முறைமையில் மாகாண சபைத்தேர்தல் நடைபெறுவது தான் அம்மக்களின் தொகைக்கேற்ற பிரதிநிதித்துவங்களை அடைந்து கொள்வதற்கு ஏதுவானதென்பதையும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் நமது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் மாகாண சபையிலிருந்து நாடாளுமன்றம் வரை குரல் கொடுக்க வேண்டிய காலத்தின் மீதிருக்கின்றனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.