தூய தலைவரின் கொள்கைகளை தீய முஸ்லிம் காங்கிரஸ் தூக்கி வீசியுள்ளது- ஹசனலி சாட்டையடி

0
56

hasan-ali-slmc-300x199அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஆதரித்து கிழக்கு மாகாண சபையில் வாக்களித்ததன் மூலம் பெருந்தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பின் கொள்கைக்கு விரோதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டு வருவது அப்பட்டமாக மீண்டும் வெளிப்பட்டு நிற்கின்றது என இக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமும், முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

இக்கட்சியின் ஸ்தாபகத்தலைவர் அஷ்ரப்பின் 17 ஆவது வருட நினைவு ஒன்றுகூடல் தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் ஏற்பாட்டில் இவரின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை மண்டப கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இதில் சிறப்புப்பேச்சாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் பங்கேற்றதுடன், பேராளர்களாக நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தாஹீர், அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சில், தொழிலதிபர் நஸார் ஹாஜியார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் நீங்காத இடத்தைப்பிடித்தவர் தலைவர் அஷ்ரப். எமதும், எமது வருங்கால சந்ததியினரதும் தனித்துவம், இருப்பு, அடையாளம், பாதுகாப்பு, உரிமை, சுயநிர்ணயம், அதிகாரம், அரசியல் தீர்வு ஆகியவற்றை உறுதிப்படுத்த வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவராவார்.

இவரின் 17 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு மாத்திரம் இங்கு இன்று இடம்பெறவில்லை. இவரின் கொள்கை, இவர் வகுத்த பாதை, இவர் அமைத்துக்கொடுத்த யாப்பு, எமது சமூகம் முன்னெடுக்க வேண்டுமென்று இவர் பிறப்பித்த கட்டளைகள் ஆகியன தூக்கி வீசப்பட்டு விட்டதையும் இந்த 17 ஆவது வருடத்தில் நினைவு கூருகின்றோம்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையில் வாக்களித்ததன் மூலம் பெருந்தலைவர் அஷ்ரப்பின் கொள்கைக்கு விரோதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டுள்ளது. ஏனென்றால், மாகாண சபை அதிகாரத்தைப் பெற்று கொடுக்க அஷ்ரப் தலைமையிலிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட நெடும் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இதே போல சிறுபான்மை மக்களின் அபிலாஷைக்கெதிரான திவிநெகும சட்டமூலம் வாக்கெடுப்புக்கு இதே மாகாண சபைக்கு முன்பு வந்த போதும் கட்சி உயர்பீடத்தின் விருப்பத்துக்கு மாறாக, இச்சட்டமூலத்தை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர் என்பதையும் இவ்விடத்தில் நினைத்துப் பார்க்கின்றேன்.

திவிநெகும சட்டமூலம் பிழையானதென்று அப்போதைய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தீர்ப்பு வழங்கினார். இதற்காக இவரை பதவியிலிருந்து தூக்கியெறிய பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு இவரைப்பதவி நீக்குகின்ற தீர்மானமெடுக்கப்பட்டது. இவ்விடயம் பாராளுமன்றத்தில் வாக்களிப்புக்கு வந்த போது, ஆதரவாக வாக்களிக்க வேண்டாமென்று நான் ரவூப் ஹக்கீமைக்கேட்டுக் கொண்ட போது, முதல் நாள் ஓம் ஓம் என்று கூறிய அவர், மறுநாள் வாக்களித்து விட்டார்.

நான் கேட்டதற்கு  தினேஸ் குணவர்த்தன அழைத்து வந்து விட்டார் என்று காரணம் சொன்னார். ஆனால், சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க வேண்டு,மென்பதற்காக தலைவர் அஷ்ரப்பால் உருவாக்கப்பட்ட கட்சியின் தலைவராக இருந்து கொண்டே ஹக்கீம் இம்மாபெரும் வரலாற்றுத்தவறைச் செய்து விட்டார்.

சிறுபான்மைச்சமூகங்கள் அவற்றின் உரிமைகளை இந்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றன. குறிப்பாக, எமது அம்பாறை மாவட்டத்தில் பெருந்தேசியவாதிகளின் ஊடுருவில் மிகக்கச்சிதமாக இடம்பெற்று வருகின்றது. ஆனால், நிலத்தொடர்பற்ற மாகாணம், கரையோர மாவட்டம், தென் கிழக்கு அலகு என்று தலைவர் அஷ்ரப்பால் முன்வைக்கப்பட்ட எந்தவொரு தீர்வுத்திட்ட யோசனையை நோக்கியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த 17 வருடங்களாக பயணிக்கவே இல்லை.

தலைவர் அஷ்ரப்பின் தீர்வுத்திட்ட யோசனைகளில் உயர்ந்ததாகவும், உன்னதமானதாகவும் கரையோர மாவட்டக்கோரிக்கையுள்ளது. ஆனால், இவற்றை நோக்கிப்பயணிப்பதை விடுத்து அபிவிருத்தி விழாக்கொண்டாடுகின்றனர். வட மாகாணத்தில் அபரிமிதமான அளவில் அபிவிருத்திகள் நடந்து தான் உள்ளன.

ஆனால், அவை அமைதியாக நடந்தேறின. அமைச்சர்கள், எம். பிகள் போன்றோர் அபிவிருத்தி வேலைகளைக் கண்காணிக்க வேண்டுமேயொழிய, அதில் அவர்கள் குளிர்காய்கின்ற கலாசாரத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும். நாம் ரோஹிங்யா முஸ்லிம்களைப்போல நாடற்றவர்களாக மாற்றப்படக்கூடிய அபாயம் கண் முன் தெரிகின்றது.

கிழக்கில் எமக்கு அரசியல் இஸ்திரத்தன்மை, அரசமைப்பு மூலமான பாதுகாப்பு போன்றன இல்லாத போது, அபிவிருத்திகளால் எந்தவொரு பயனுமே இல்லை. தலைவர் அஷ்ரப் கிழக்கு முஸ்லிம்களின் கலாசாரத்தை வளர்ப்பதற்காக கிழக்குப்பல்கலைக்கழகத்தைக் கட்டியமைத்துக் கொடுத்தார்.

ஆனால், இன்று இப்பல்கலைக்கழகத்தில் பயில்பவர்களில் 60 சத வீதமானோர் சிங்கள மாணவர்களாவர். எமது மாவட்டத்தில் சிங்கள இனத்தவர்களின் சனத்தொகை பல்கிப்பெருகி அதிகரித்துக் காணப்படுகிறது. ஆகவே தான் நாம் தனியான மாவட்டத்தைக் கேட்கின்றோம். கரையோர மாவட்ட கோரிக்கையில் நான் உறுதியாக நின்று பற்றுறுதியுடன் செயற்பட்டு வருவதாலேயே ஹக்கீம் என்னை வெளியில் போட்டார். நான் கட்சியை விட்டு வெளியே வந்தேன்.

பெருந்தேசியக் கட்சிகளைத் திருப்திப்படுத்துகின்ற, இவர்களின் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றுகின்ற கொத்தடிமை அரசியல் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இடம்பெற்று வருகின்றது. நான் அதிகாரம் பொருந்திய செயலாளர் நாயகம் பதவியை வகித்து தலைவரின் கொத்தடிமை அரசியல் சேவகத்துக்கு மூக்கணான் கயிறு போட்டு, அவரைத்தடுத்து நிறுத்தி வந்திருக்கின்றேன்.

இதனால் தான் அவர் எனக்கு மிக மோசமான நம்பிக்கை மோசடிகளைச் செய்ததும் மாத்திரமல்லாமல், என்னை மிகக்கேவலமாக மலினப்படுத்தவும் செய்தார். ஆனால், சில தினங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்றில் உரையாற்றிய அவர், ஹசன் அலி தேசியப்பட்டியலைக் கேட்டிருந்தால் கொடுத்திருந்திருப்பேன் என்று தெரிவித்து, அதிகாரமிக்க செயலாளர் நாயகம் பதவியைக்கேட்டுக் கொண்டிருந்ததாலேயே கொடுக்க முடியாமல் போய் விட்டதென்று வழக்கத்துக்கு மாறாக உண்மையைச் சொல்லியுள்ளார்.

தலைவர் அஷ்ரப்பை அமிர்தலிங்கம் அழைத்துப்பேசிய அந்த நாளை நினைத்துப்பார்க்கின்றேன். நானும் உடன் சென்றிருந்தேன். இரு சமூகங்களும் ஒன்றாகச்சேர்ந்து போராடினால் தான் வெற்றி கிடைக்கு,மென்று சொல்லி தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் ஒன்றாக முஸ்லிம்கள் பயணிக்க வேண்டுமென்று அமிர்தலிங்கம் வற்புறுத்தினார்.

ஆனால், தமிழரின் போராட்டத்தை முஸ்லிம்கள் மதிக்கின்றனர். இருப்பினும் முஸ்லிம்கள் தனிச்சமூகம், அவர்களுக்கென்றொரு தனித்துவ அடையாளமுள்ளது. அதை இழக்க முடியாதென்று கூறி தலைவர் அஷ்ரப் வாதாடினார். இவ்வாதப்பிரதிவாதம் வெகுவாகவே நீண்டது.

தமிழ்த்தேசியம், சிங்கள தேசியம் ஆகியவற்றைப்போலவே முஸ்லிம் தேசியமும் உருவாக வேண்டுமென்கிற தலைவரின் கனவு அன்றிரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கிற கட்சியாகப் பரிணமித்தது. அது வரைக்கும் ஒரு இயக்கமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டு வந்ததென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தலைவர் அஷ்ரப்புடன் சேர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி, வளர்த்தெடுத்ததாலேயே எனக்கு சமூக உணர்வு மிக அதிகமாகவுள்ளது. இதனால் தான் இப்போது மட்டுமல்ல. நான் மரணிக்கின்ற வரையிலும் கரையோர மாவட்டக்கோரிக்கையைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பேன்.

நாட்டின் 04 முஸ்லிம் தேர்தல் தொகுதிகளும் கிழக்கில் தான் உள்ளன. இந்நாட்டில் அம்பாறை மாவட்டத்தில் தான் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றனர். இதனால் தான் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கென அதிகார அலகொன்றைப்பெற தலைவர் அஷ்ரப் பகீரத முயற்சிகள் மேற்கொண்டார்.

ஆனால், இவையெல்லாம் ஐக்கிய தேசியக்கட்சியின் சிங்கள மற்றும் முஸ்லிம் வாக்குகளில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகின்ற ரவூப் ஹக்கீமுக்கு விளங்காது. அம்பாறை மாவட்டத்துக்கு கடந்த 17 வருடங்களாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதை இனியும் கொடுக்கின்ற நினைப்பு ரவூப் ஹக்கீமுக்கு கிடையவே கிடையாது.

அதிகாரமுள்ள செயலாளர் நாயகம் பதவி அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கப்படுவதன் மூலமாக அம்பாறை மாவட்டத்துக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி கிடைக்க வழியுண்டு என்று நான் கடந்த பேராளர் மாநாட்டுக்கு முந்திய கட்டாய உயர்பீடக்கூட்டத்தில் நிறைவாகச் சொன்ன போது, அவ்வாறு நடந்தால் கட்சிக்குள் இரு அதிகார மையங்கள் உருவாகி விடுமென்று சொல்லி கோபத்தில் துள்ளியெழுந்தார்.

எனவே அவர் தலைவராக இருக்கின்ற வரை அம்பாறை மாவட்டத்துக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி கிடைக்கப்போவதே இல்லை. மொத்தத்தில் இன்றிருப்பது தலைவர் அஷ்ரப் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸல்ல. எனவே, தலைவர் அஷ்ரப் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸை மீட்டு வாழ வைக்க வேண்டுமென்பதற்காக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணியமைத்து தேர்தல் கேட்கப்போகின்றோம். எனவே, எமது இந்தச்சமூக விடுதலைப்போராட்டத்துக்கு ஒட்டு மொத்த பேராதரவைத் தாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here