முஸ்லிம் காங்கிரஸுக்கு ஹக்கீமின் தலைமை வேண்டாமென்ற தீர்ப்பை வருகின்ற தேர்தல் மூலமாக வழங்குங்கள்!- கிழக்கு முஸ்லிம்களுக்கு ஹசன் அலி அறைகூவல்

0
197

indexரி.தர்மேந்திரன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ரவூப் ஹக்கீமின் தலைமை தேவையில்லையென்கிற தீர்ப்பை எதிர்வரும் தேர்தல் எதுவாக இருப்பினும் அதன் மூலமாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் நிச்சயம் வழங்க வேண்டுமென்று இக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமும் சுகாதாரத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

தூய தலைவர்களான எம். எச். எம். அஷ்ரப், பரீத் மீராலெப்பை ஆகியோரை நினைவு கூருகின்ற வைபவம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத்தின் ஆசியுடன் அஷ்ரப் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இதன் தலைவர் முஹைதீன் பாவா தலைமையில் ஏறாவூர் ஜுப்ரியா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் பேராளர்களாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாஹிர் சாலி, தொழிலதிபர் நஸார் ஹாஜியார், அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தாஹிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு ஹசன் அலி பேசியவை வருமாறு:-

இலங்கையின் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரத்தின் உச்சத்தைத் தொட்ட ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன என்றால் அது மிகையாகாது. ஆணைப்பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத்தவிர அவரால் எதையும் செய்ய முடியுமென்று கர்ச்சித்தவர். ஐக்கிய தேசியக்கட்சி எம். பிக்கள் அவருடைய கட்டளைக்குப்பணிந்து வெற்றுக்கடதாசியில் கையொப்பமிட்டுக் கொடுத்தனர். ஆனால், ஒரேயொருவர் மாத்திரம் வெற்றுக்கடதாசியில் கையொப்பமிட்டுக் கொடுக்க மறுத்து விட்டார். மாத்திரமல்லாமல், அவருக்கு வாக்களித்த மக்களிடம் கேட்டு விட்டு வந்து தான் வெற்றுக்கடதாசியில் கையொப்பம் வைப்பார் என்று துடுக்காகச் சொல்லியிருக்கின்றார். இவர் வேறு யாருமல்லர் ஏறாவூர் மண்ணின் மைந்தன் வைத்தியக்கலாநிதி பரீத் மீராலெப்பையாவார்.

தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் அன்றைய யுத்தச்சூழலில் முஸ்லிம் மாணவர்கள் வெளிமாகாணங்களுக்குச் சென்று படிக்க முடியாத குழப்ப சூழல் காணப்பட்டது. இந்நிலையில், முஸ்லிம் மாணவர்களுக்கு கிழக்கு மண்ணில் பல்கலைக்கழகமொன்றைக்கட்டித்தாருங்கள் என்று அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தலைவர் அஷ்ரப் கோரினார்.

ஜனாதிபதி வேறு சில அழுத்தங்களால் கையறு நிலையில் காணப்பட்ட போதிலும்கூட அஷ்ரப்புக்கு ஒரு பல்கலைக்கழகத்தைக்கொடுங்கள் என்று கண்டிப்பாக உத்தரவிட்டார். இவ்விதம் ஜனாதிபதியைச்சொல்ல வைத்தது தான் தலைவர் அஷ்ரப்பின் ஆளுமை. இவ்விதமாகவே கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகத்துக்கு தென் கிழக்குப்பல்கலைக்கழகம் தலைவர் அஷ்ரப்பால் உருவாக்கித்தரப்பட்டது.

பரீத் மீராலெப்பை, அஷ்ரப் சேர் ஆகியோரை இன்றைய முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் முன்மாதிரியாகக்கொள்தல் வேண்டும். அப்போது தான் சமூகத்தைச் சரியான பாதையில் வழி நடத்திச்செல்ல முடியும். ஆனால், இன்றைய முஸ்லிம் தலைவர்கள் கைகட்டி, வாய் பொத்தி அரச தலைவர்களுக்கு சேவகம் செய்து மலினப்பட்டுக் கிடக்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதற்கெல்லாம் பாராளுமன்றத்தில் கையுயர்த்த வேண்டுமென்கிற கட்டளை வெளியிடத்திலிருந்து வந்து கொண்டிருந்ததென்கிற உண்மையை நான் உங்களுக்கு உரத்துச் சொல்கின்றேன்.

முஸ்லிம்கள் அடங்கலாக சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பாக அமைந்திருந்த திவிநெகும சட்டமூலம் பிழையானதென்று தீர்ப்பு வழங்கிய அன்றைய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சிறுபான்மை மக்களின் தலைவராக இருந்தும் வாக்களித்து விட்டு, தினேஸ் குணவர்த்தன அழைத்து வந்து விட்டார் என்று சிறுபிள்ளைத்தனமாக எனக்குச்சொன்ன ரவூப் ஹக்கீமை நினைத்துப்பார்க்கின்றேன். அஷ்ரப் என்கிற மிகப்பெரிய ஆளுமை உட்கார்ந்திருந்த அரியாசனத்தில் ஒரு வெறுமை தான் கடந்த 17 வருடங்களாக உட்கார்ந்துள்ளது. தூய்மையான, துணிச்சலான, திறமையான தலைமைத்துவம் மூலமாகவே எதையும் சாதிக்க முடியும்.

சமஷ்டி, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு ஆகியவற்றுக்காகவே கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக கையுயர்த்தினர். ஆனால், நீ ஏன் உயர்த்தினாய்? என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் நான் வினவுகின்றேன். முஸ்லிம்களுக்கான தனியான மாகாணம், கரையோர மாவட்டம், தென் கிழக்கு அலகு இவற்றில் எதற்காக கையுயர்த்தினாய்? என்று கேட்கின்றேன்.

இது தானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாணக்கிய அரசியல்? மூடிய அறைக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைமையுடன் என்ன இரகசியம் பேசினாய்? ஒரு மயிரைப்பெற்றுத்தரக்கூட முடியாதளவுக்கு மழுங்கிப்போன அரசியலைச் செய்கின்றார்கள்.

நாம் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என்கிற கட்டமைப்பை உருவாக்கி, வருகின்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அத்தேர்தல் எதுவாக இருப்பினும் அதைப்பாழாய்ப்போன ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத்தேவையா? இல்லையா? என்கிற மக்கள் தீர்ப்பை வழங்குகின்ற சர்வசன வாக்கெடுப்பாகக்கொண்டு கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here