சாய்ந்தமருதுக்கு மாத்திரம் பிரதேச சபை அமைத்துக்கொடுக்கப்படுவது அநீதியாகும்-கல்முனை வர்த்தகர் சங்கத்தலைவர் ஹாதிம்

0
304

18882305_1300254343425501_9149967394091046351_nரி. தர்மேந்திரன்
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கிடையில் மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதேசவாதம், பிரிவினைவாதங்களை உருவாக்கி வைத்திருக்கின்றார் என்று கல்முனை வர்த்தகர் சங்கத்தலைவரும், கல்முனை பட்டின சபையின் முன்னாள் தலைவர் கே. கே. மரைக்காரின் புதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத்தின் சகோதரருமான தொழிலதிபர் ஷாபி ஹாதிம் தெரிவித்தார்.

கல்முனை பள்ளிவாசல் பொது அமைப்புகளின் சம்மேளனம் ஒரு மாத காலத்துக்கு முன்னர் கொழும்புக்குச்சென்று அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா ஆகியோரைச்சந்தித்துப்பேசியது. இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடொன்றை ஷாபி ஹாதிம் இன்று புதன்கிழமை நடத்தினார்.

இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:-

1897 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 1987 ஆம் ஆண்டு வரை கல்முனையில் 04 உள்ளூராட்சி சபைகள் இயங்கின. கல்முனை பட்டின சபை கல்முனையிலும், கரைவாகு தெற்கு கிராம சபை சாய்ந்தமருதிலும், கரைவாகு வடக்கு கிராம சபை மருதமுனை, பாண்டிருப்பு ஆகியவற்றைச் சேர்த்ததாகவும், கரைவாகு மேற்கு கிராம சபை சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ஆகியவற்றைச் சேர்த்ததாகவும் இயங்கின. கரைவாகு வடக்கு கிராம சபை, கரைவாகு மேற்கு கிராம சபை ஆகியவற்றின் தலைவர்களாக தமிழர்கள் வந்துள்ளனர்.

புரிந்துணர்வு அடிப்படையில் கல்முனை பட்டின சபையின் தலைவர் பதவி தமிழருக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்துள்ளன. உண்மையில், கல்முனையில் அன்றைய காலத்தில் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் மிக நல்லுறவு நிலவி வந்தது.

ஆனால், மேற்சொன்ன 04 உள்ளூராட்சி சபைகளையும் சேர்ந்த மக்களின் அபிப்பிராயம், ஒப்புதல் ஆகியவற்றைப்பெறாமல் இவற்றை ஒன்றாகச்சேர்த்து 1987 ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. அது காலவோட்டத்தில் நகர சபையாகவும், மாநகர சபையாகவும் மாற்றப்பட்டது.

ஆனால், சாய்ந்தமருது பிரதேச மக்கள் அவர்களுக்குத் தனியான பிரதேச சபை வேண்டுமென்று அண்மைய பல வருடங்களாகத் தொடர்ச்சியாக கோரி வருகின்றனர். இவ்வாறு கோருவதற்கான உரிமை அவர்களுக்குள்ளதென்பதில் மறுப்போ, மாற்றமோ எமக்குக்கிடையாது.

ஆனால், கல்முனையில் இயங்கி வந்த 04 உள்ளூராட்சி சபைகளும் மக்களின் அபிப்பிராயம், ஒப்புதல் பெறப்படாமல் ஒன்றாகச் சேர்க்கப்பட்டதால், மாற்றீடாக 04 பிரதேச சபைகள் கட்டாயம் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.

மாறாக, சாய்ந்தமருதுக்கு மாத்திரம் பிரதேச சபை அமைத்துக்கொடுக்கப்படுவது மற்றைய மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகத்தான் இருக்கும். ஆகவே தான், நாம் அவசரமாக கொழும்புக்குச்சென்று அமைச்சர்களைச் சந்தித்து கல்முனையில் 04 பிரதேச சபைகளை உருவாக்கித்தாருங்கள் என்கிற கோரிக்கையை வலியுறுத்தினோம்.

அவர்களும் எமது கோரிக்கையில் நியாயமுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்து எமது கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பார்கள் என்று உறுதிமொழி வழங்கினார்கள். இதையடுத்தே சாய்ந்தமருதை தனியான பிரதேச சபையாக பிரகடனப்படுத்துகின்ற வர்த்தமானி அறிவித்தல் இன்னமும் வெளிவரவில்லை.

ஆனால், 04 பிரதேச சபைகளையும் உருவாக்கித்தருகின்ற நடவடிக்கையில் ரவூப் ஹக்கீம் முழுமையான நழுவல் போக்கையே கைக்கொள்கின்றார் என்பதும், இவருக்கு கல்முனையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் ஒத்து ஊதுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ரவூப் ஹக்கீம், ஹரிஸ் ஆகியோர் காரணமாகத்தான் இவ்விடயத்தில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படுவதாக இல்லை. இன்று கல்முனை, சாய்ந்தமருது மக்களுக்கிடையில் பிரதேசவாதம், பிரிவினைவாதம் ஆகியன தலை விரித்தாடுகின்றன என்றால், அதற்கு அடிப்படைக்காரணி ரவூப் ஹக்கீமேயாவார். கிழக்கிலங்கையில் நாகரிகத்தின் கருவூலமாக கல்முனை மண் அறியப்படுகின்றது. இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் கேந்திர நிலையமாக விளங்குகின்றது.

ஆகவே தான் ஸ்ரீலங்கா முஸ்லிம்களுக்கான தீர்வுகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் அஷ்ரப்பால் வலியுறுத்தப்பட்ட பெரும்பான்மை முஸ்லிம் மாகாணக்கோரிக்கையாக இருக்கட்டும், தென் கிழக்கு அலகாக இருக்கட்டும், கரையோர மாவட்டக்கோரிக்கையாக இருக்கட்டும் அவை கல்முனையை மையப்படுத்தியவையாகவுள்ளன.

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உண்மையான அரசியல் எழுச்சி கல்முனை மண்ணிலிருந்தே இடம்பெறுமென்பதையும் யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில் தான் கல்முனை மண்ணிலிருந்து இலங்கை முஸ்லிம்களின் உண்மையான தலைவன் தோற்றம் பெற்று விடுவான் என்கிற நியாயமான அச்சம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை பீடித்துள்ளது. எனவே, இவரின் தலைமைப்பதவியையும், இருப்பையும் பாதுகாக்க ரவூப் ஹக்கீம் கல்முனை மண்ணைத் திட்டமிட்டு சிதைத்து வருகின்றார். கல்முனை மக்கள் அரசியல் விழிப்பு பெறக்கூடாதென்பதில் குறியாகவுள்ளார்.

கடந்த கல்முனை மாநகர சபைத்தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப்பெற்று சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராஷாகிப் கல்முனை மாநகர முதல்வராக வந்தார். இவர் மிகத்திறமையாகவும், அருமையாகவும் முதல்வராகச் செயற்பட்டு வந்த நிலையில், இவரிடமிருந்து இப்பதவியை பிடுங்கியெடுத்து நிசாம் காரியப்பருக்கு வழங்கினார் ஹக்கீம்.

ஆனால் நிசாம் காரியப்பர் பிரதி மேயராகப்பதவி வகித்த காலத்திலும் சரி, முதல்வராகச் செயற்பட்ட காலத்திலும் சரி கல்முனையில் காணப்பட்ட நாட்களை விட கொழும்பில் காணப்பட்ட நாட்களே அதிகம். இவருடைய காலத்தில் கல்முனை கெட்டு குட்டிச்சுவராகி விட்டதென்பதுடன், கல்முனை மாநகர சபையின் வரலாற்றில் மிக மோசமான முதல்வர் இவரேயாவார்.

மீராஷாகிப் வகித்த முதல்வர் பதவி அடாத்தாகப் பறிக்கப்பட்டு நிசாம் காரியப்பருக்கு கொடுக்கப்பட்டதிலிருந்தே கல்முனை, சாய்ந்தமருது மக்களுக்கிடையில் பிரதேசவாதம், பிரிவினைவாதம் ஆகியன தலைதூக்கின. சாய்ந்தமருதைச் சொந்த இடமாகக்கொண்டு கல்முனைக்குடியில் திருமணம் செய்த எம். சி. அஹமட் கல்முனை பட்டின சபையின் தலைவராக விளங்கிய அந்த நாளை நினைத்துப்பாருங்கள்.

கல்முனை மண்ணுக்கு உருப்படியான ஒரு தலைமை இருக்கக்கூடாதென்பதால் தான் ஹரிஸ் எம். பி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் ஆகிய பலவீனமானவர்களை ஹக்கீம் கல்முனை மக்களின் பிரதிநிதிகளாக உலாவ விட்டுள்ளார். மேலும், ஹரிஸ், ஜவாத் ஆகியோரைப் பிரித்தாளும் தந்திரத்தினூடாகப்பிரித்து வைத்து, இருவரையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கின்றார்.

கல்முனை, சாய்ந்தமருது மக்களை நிரந்தரமாகப் பிரித்து வைப்பதற்காக சாய்ந்தமருது மக்களின் தனியான பிரதேச சபை கோரிக்கையை கையிலெடுத்தார் ஹக்கீம். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கல்முனைக்குக் கொண்டு வந்து சாய்ந்தமருது மக்களுக்கு தனியான பிரதேச சபையை உருவாக்கிக் கொடுப்பார் என்று அவரைச்சொல்ல வைத்தார்.

சாய்ந்தமருது மக்களுக்கு தனியான பிரதேச சபையை அமைத்துக்கொடுக்க ஹாரிஸ் இணங்கியதில் முழுக்க சுயநலமேயுள்ளது. இதன் மூலமாக வருகின்ற பாராளுமன்றத்தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் பேராதரவைப்பெற முடியுமென்று ஹரிஸ் கனவு காண்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here