இலங்கை முஸ்லிம்களின் அரசியலுக்கு சாணக்கியமான ஒரு தலைவனை வழங்கிய ஹாஜியானி ஹாஜரா உம்மாவின் வபாத்தினால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினரின் சோகத்தில் அனைத்துப்போராளிகளுடன் இணைந்து நாமும் பங்கேற்கின்றோம் என கிழக்கு முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எம் சமூகத்தின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் பல்வேறு யாப்பு ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதெல்லாம் தைரியமாக நம் சமூகத்துக்காக அச்சமின்றி குரல் கொடுக்கும் ஆளுமையுள்ள ஒரு தலைவனை இந்த சமூகத்துக்கு வழங்கியமைக்கு நாம் என்றும் நன்றிக்கடன் பட்டவர்கள்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் தமது பல்வேறு முக்கியமான தருணங்களை ஹாஜரா உம்மாவின் துஆ உடனேயே ஆரம்பித்த சம்பவங்களை மீட்டிப்பார்க்கையில் எங்கள் உள்ளங்களும் கலங்குகின்றன.
தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடியான காலகட்டங்கள் வந்த போதிலும், ஹாஜரா உம்மா வழங்கிய தைரியமும் ஊக்குமுமே அவரை இன்று சர்வதேசம் போற்றும் ஒரு தலைவராக உருவாக்கியுள்ளது. அத்தகையதொரு உயர்ந்த தாயின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்பதை நாமறிவோம்.
எனவே எல்லாம் வல்ல அல்லாஹ் ஹாஜியானி ஹாஜரா உம்மாவை பொருந்திக் கொண்டு அவரின் பாவங்களை மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக எனப் பிராத்திப்பதாக கிழக்கு முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.