நச்சுப் பாம்மை வளர்க்கும் நல்லாட்சி!

0
217

( ஏ.எஸ். முஹமட் சியாம் )

downloadஒரு இடத்துக்கு திடீரென ஆஜராகி விட்டால் ‘டான்’ ணு வந்துவிட்டார்’ என்று சொல்வதுண்டு.
இப்போதெல்லாம் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதக் கருத்து எங்கெல்லாம் கிளம்புகிறதோ அங்கெல்லாம் டான்ணு வந்து விடுகிறார்; “டான் பிரசாத்”

யுத்த வெற்றிக்குப் பின்னரான இலங்கை அரசியலில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதக் கும்பல்களின் நடவடிக்கைகள் அவ்வப்போது எழுந்தும் அடங்கியும் வருவதினைக் காணமுடிகிறது. புரையோடிப் போன யுத்தத்தை இந்த நாட்டில் மீண்டும் புதுப்பித்து குளிர்காய நினைக்கும் மேற்கின் சதிக்கு தீனி போடும் இனவாதக் கும்பல்கள் பல வந்து கொண்டுதான் இருக்கின்றன.

பொதுபலசேனாவை உருவாக்கி ஞானசார தேரர் போட்ட ஆட்டமும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளும் கொஞ்சநஞ்சமல்ல. அதனால் முஸ்லிம் சமூகமும் இந்த நாடும் எதிர்நோக்கிய இழப்புகளும் அதிகமாகும். ஆனால், இந்த இனவாதத் திட்டத்தை புதினம் பார்த்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் அவர்களுக்கெதிராக எடுத்த நடவடிக்கையின் சீத்துவம் நமக்கு தெரிந்ததுதான்.
மஹிந்த அரசு இனவாதிகளுக்கு பாலூற்றி வளர்க்கிறது என்ற விமர்சித்து நல்லாட்சியைக் கொண்டு வந்த சிறுபான்மைக் மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் என்ன கைமாறு செய்து வருகிறது என்பதும் வெள்ளிடை மலைதான்.

காவி உடைக்குள் இருந்து கொண்டு மதத் தலைவர்களாக சித்தரித்துக் கொண்ட தேரர்களின் இனவாதத்தை அரசியல் இலாபத்துக்காக கண்டு கொள்ளாத அரசின மெத்தனப் போக்கு இன்று ‘குட்டிப் பிசாசுகளையும்’ வீதிக்கு இறக்கியிருக்கிறது.

ஆம் டான் பிரசாத் என்ற இனவாதப் பிசாசு!

ஞானசார தேரர் அளவிற்கு அறியப்படாதவர்தான் இந்த டான் என்றாலும்இ கிரேன்பாஸ் பொலிஸில் ஹெல்மட் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினார் என்ற குற்றத்தில் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி அறிமுகமான ஞானசார தேரர் இன்று டிபன்டர்கள் சூழ ப்ராடோ வாகனத்தில் வளம் வருமளவு இனவாதக் கருத்துக்களால் பிரபல்யம் அடைந்து விட்டிருக்கிறார் என்றால், டானும் நாளை ‘நாட்டாமை’ ஆகலாம் இனவாதக் கருத்துக்கள் பேசுவோரை இந்த நாடு அப்படித்தான் வளர்த்து விட்டிருக்கிறது. அரசின் மெத்தனப் போக்கு இதற்குத்தான் வழிவகுக்கிறது.

சமூக ஊடகங்கள் வாயிலாக முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை அவ்வப்போது விதைத்து வந்த டான் பிரசாத்தின் இனவாதத்தை முளையிலேயே கிள்ளியெரிய தவறி விட்டதன் விளைவு இன்று வெள்ளம்பிட்டி சந்தியில் ரிவால்வாருடன் கர்ச்சிக்குமளவு அவருக்கு தைரியத்தை கொடுத்திருக்கிறது.

ஞானசார தேரர்
ஹலால் பிரச்சினையைக் கையிலெடுத்தபோது அதற்கு ஆதரவாக கருத்து சொல்லி இனவாதத்தை ஆரம்பித்த டான் பிரசாத் அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களைப் பரப்பி சிங்கள மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

வெள்ளம்பிட்டியவில் இயங்கி வந்த முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ரெஸ்டோரன்ட் ஒன்றிற்கு கைத் துப்பாக்கியுடன் நுழைந்து அதனை மூடுமாறு மிறட்டல் விடுத்தார்.

வெள்ளம்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் நின்று முஸ்லிம்களை மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் திட்டியமையை அடுத்து அதற்கெதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டார்.
“இனிமேல் இனவாதக் கருத்துக்களை பேசக்கூடாது” என நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட நிலையில், அண்மையில் நிறுவனமொன்றிற்காக தகவல் திரட்ட சென்ற முஸ்லிம் யுவதி ஒருவரை போலி குற்றச்சாட்டில் மிரட்டி பொலிஸில் முறைப்பாடும் செய்தார்.

சிங்கள பெண்கள் மத்தியில் கருத்தடை மருந்துகள் கலந்த பால் வக ஒன்றினை வினியோகிக்கிறார் என்று குற்றம்சாட்டி சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகத்தை விதைத்ததுடன் பொலிஸிலும் முறைப்பாடொன்றை செய்தார். ஆதாரமற்ற இச்செய்தியை பூதாகரப்படுத்தி தவறான இனவாதக் கருத்தைப் பரப்பிய டான் பிரசாத்தை ஏன் கைது செய்யவில்லை? அவருக்கெதிராக ஏற்கனவே நீதிமன்ற கண்டிப்பு இருந்த பின்னரும் பொலிஸார் இதனை சாதாரண விடயமாக கடந்து போனது ஏன்?

அவ்வப்போது முஹம்மது நபியவர்களைப் பற்றியும் அல்குர்ஆனையும் மிகக் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு பேசிவருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் டான். இது முஸ்லிம்களின் உணர்வுகளை மிகவும் காயப்படுத்துகிறது. இதன் மூலம் முஸ்லிம்களை சீண்டி அவர்களை வம்புக்கிழுத்து ரத்த ஆற்றை ஓட்ட வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பு. “நாங்க ரெடியாகத்தான் இருக்கிறோம்” என்று அவர் அடிக்கடி கூறும் ஓர் வார்த்தை முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட ஓர் குழு செயற்பாட்டையே காட்டி நிற்கிறது.

தற்போது மியன்மாரில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தூண்டி விடப்பட்டிருக்கும் இனவாதக் கும்பல்களின் அட்டூழியங்களை ஆதரித்து கருத்து வெளியிட்டிருக்கிறார் டான்.
“நாங்கள் ஒன்றுசேர்ந்து அவர்களைக் கொன்று விடுவோம்” என்று தனது முகநூல் பக்கத்தில் பகிரங்கமாகவே கருத்து சொல்லியிருந்தார். மனிதாபிமானமற்ற இந்த காட்டுமிராண்டி வசனத்தை இனவாதக் கருத்தாகப் பார்க்கவில்லையா நீதிமன்றம்?

மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து கொழும்பில்கடந்த 14.09.2017 அன்று நடத்திய பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கடுமையாக விமர்சித்ததுடன் இனவாதக் கருத்துக்களையும் பரப்பி வருகிறார் டான் பிரசாத்.

மியன்மாரில் காட்டு தர்பார் நடத்தி வரும் அதிகாரத்தைக் கண்டிக்க திராணியற்ற நமது நல்லாட்சி அரசாங்கம் குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட. மக்களுக்கு ஆதரவாக கூட்டபட்ட ஆர்ப்பாட்டத்தை கொச்சைப்படுத்திய இனவாதியை அடக்கவும் திராணியற்றிருப்பது தான் கவலைக்குரிய விடயமாகும்.
குமரிகளுடன் கும்மாளமிட்டு போட்டோ பிடித்து முகநூலில் இட்டு லைக் வாங்கிக் கொண்டிருக்கும் சாதாரண ஒரு கூத்தாடியின் அருவறுக்கத்தக்க இனவாதக் கருத்தை முளையிலேயே கிள்ளி எறியாமல் விட்டு வைத்திருப்பது நல்லாட்சி அரசு நச்சுப் பாம்புகளைதான் வளர்த்து வருகிறதா என்ற சந்தேத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here