43 வது தேசிய விளையாட்டுப் பெருவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள்

0
277

67(அகமட் எஸ். முகைடீன்)
43 வது தேசிய விளையாட்டுப்  பெருவிழாவின் இறுதி நாள் நிகழ்வு மாத்தறை கொட்டவில விளையாட்டு மைதானத்தில் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதன் போது, ஜனாதிபதி வெற்றிக்கிண்ணத்தை அதிகூடிய தங்கப் பதக்கங்களைப் பெற்ற மேல் மாகாணம் சுவீகரித்துக் கொண்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ள இருந்த போதிலும், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கூட்டத்தில் கலந்து கொள்ளச்சென்றுள்ளதால் அவரது பிரதிநிதியாக விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சட்டத்தரணி சுசில் பிரேம்ஜயந்த கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் விஷேட மற்றும் கௌரவ அதிதிகளாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், தென் மாகாண முதலமைச்சரும் அம்மாகாண விளையாட்டுத்துறை அமைச்சருமான சான் விஜயலால் டீ சில்வா, அரச தொழில் முயற்சி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, மாகாணங்களின் விளையாட்டுத்துறை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்கள உயரதிகாரிகள், மாகாண விளையாட்டுத்துறை அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

43வது தேசிய விளையாட்டுப்போட்டியில் மேல் மாகாணம் 102 தங்கம், 81 வெள்ளி, 76 வென்கலப்பதக்கங்களைப் பெற்று முதலாமிடத்தையும் மத்திய மாகாணம் 46 தங்கம், 41 வெள்ளி, 45 வென்கலப்பதக்கங்களைப் பெற்று இரண்டாமிடத்தையும் வடமேல் மாகாணம் 27 தங்கம், 28 வெள்ளி, 52 வென்கலப்பதக்கங்களைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன. சப்ரகமுவ, தென், வட மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் முறையே 4 தொடக்கம் 9 வரையிலான இடங்களைப் பெற்றுக் கொண்டன.

இந்நிகழ்வில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையை அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, தயாசிறி ஜெயசேகர, பிரதியமைச்சர் ஹரீஸ் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். இவ்வணிவகுப்பில் 9 மாகாணங்களைச் சேர்ந்த வீர வீராங்கணைகள், விளையாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இத்தேசிய விளையாட்டுப் பெருவிழாவின் சிறந்த வீரராக மத்திய மாகணத்தைச் சேர்ந்த ஜி.ஜே.பி விமலசிறியும் (உயரம் பாய்தல் 7.83) சிறந்த வீராங்கணையாக மேல் மாகாணத்தைச் சேர்ந்த விதூஷா லக்ஷனியும் (முப்பாய்ச்சல் 13.32) தெரிவு செய்யப்பட்டு கிண்ணங்கள் வழங்கப்பட்டது.

44வது தேசிய விளையாட்டுப் பெருவிழா சப்ரகமுவ மாகாணத்தில் நடாத்துவதற்கான பிரகடனம் இதன் போது வெளியிடப்பட்டது. இந்நிகழ்வின் போது, பாரம்பரிய கலை கலாசார கண்காட்சி நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய விளையாட்டுப் பெருவிழா பல வர்ண, வான வேடிக்கையோடு இனிதே நிறைவடைந்தது. 1 2 4 6 7 8 9 10 11 12 (2) 12 13 16 17 18 19 20 21 23 24 25 26 27 28 51 52 53 54 55 58 59 64 65 66 67 68 69 70 75 76 77 78 79 80 87

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here