மதுசார உற்பத்திக்கெதிராக அமைச்சரவையில் ரவூப் ஹக்கீம் போர்க்கொடி

0
167

RH(பிறவ்ஸ்)
கல்லோயா பிளான்டேஷன் நிறுவனம் மதுசாரம் உற்பத்தி செய்வதற்கு அனுமதிகோரி நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று (27) அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கெதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார்.

இந்நிறுவனத்துக்கும் விவசாயிகளுக்குமிடையில் பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன. குறித்த நிறுவனம் விவசாயிகளுக்கு கரும்பு கொள்வனவின் போது நியாயமான விலையை வழங்குவதில்லை. கரும்பு கொள்வனவுக்கு நிர்ணய விலை வழங்கப்படாத காரணத்தினால் விவசாயிகள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இந்த நிறுவனத்தைப் பொறுப்பேற்ற போது, திறைசேரியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்பதை முதலில் பரிசீலிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கின்ற இந்நிறுவனம், தனது வருமானத்தை மட்டும் தான் பார்க்கின்றது.

விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு எவ்வித முயற்சிகளையும் செய்யாத இந்நிறுவனம், அப்பாவி விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டும் வேலையைத்தான் தொடர்ந்தும் செய்து கொண்டு வருகிறது. இதனால் குறித்த நிறுவனத்துக்கு மதுசாரம் உற்பத்தி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தைக் கொடுத்து மீண்டும் மீண்டும் உழைப்பைச் சுரண்டுகின்ற வேலையைச் செய்ய வேண்டாமென்று ரவூப் ஹக்கீம் தனது கடுமையான எதிர்ப்பை அமைச்சரவையில் வெளியிட்டார்.

இதே வேளை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று (27) நடைபெற்ற சந்திப்பில், இறக்காமம் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்க அதிபர் துசித வணிகசிங்விடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுத்துரைத்தார்.

கரும்பு செய்கையாளர்களுக்கு நிர்ணய விலை வழங்கப்படாத காரணத்தினால், அவர்கள் நெல் பயிரிடுவதையே விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் கரும்புச்செய்கை பண்ணுவதிலிருந்து 700 ஏக்கர் காணியை நெல் பயிரிடுவதற்கு விடுவித்து தருமாறு கோருகின்றனர். அப்படி இல்லாவிடின், கரும்புக்கு நிர்ணய விலையைப் பெற்றுக்கொடுங்கள் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here