விடைபெறும் முதலமைச்சர்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

0
131

க்ஸ்மதிப்புக்குரிய ஹாபிஸ் ஷைனுலாப்தீன் நசீர் அஹ்மத் இதற்போதைய கிழக்கு முதலமைச்சராகவும் முஸ்லிம் காங்கிரஸின்  பிரதித்தலைவராகவும் உள்ளார். இவர் நஜீப் ஏ.மஜீதின் இராஜினாமாவிற்குப்பின்னர் 06.02.2015ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சரானார். இன்றும் ஓரிரு நாட்களில் பதவி முடிவடையவுள்ளது.

உண்மையில், 1997-1999ம் ஆண்டு காலப்பகுதியில் பொரளையில் இவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்கிடைத்தது. நான் பல்கலைக்கழகத்திலிருந்த போது இலங்கை முஸ்லீம்கள் தொடர்பில் ஆவணம் தயாரிக்கும்  வகையில் அமைப்[பொன்றை உருவாக்கினார்.

பின்னர் இவரது வியாபாரம் மற்றும் இதர விடயங்களால் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர் இவரது அரசியல் பிரவேசம் ஆரம்பமானது. பேரியல் அஷ்ரபின் நுஆ கட்சியில் முக்கிய நபராகவும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவாகவும் பதவி வகித்தார்.

வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி வியாபரங்களில் ஈடுபட்ட இவர், அரசியலை வியாபாரத்தை நகர்த்தும் மார்க்கமாகவே வைத்திருந்தார். குறிப்பாக, தாருஸலாம் கட்டடமும் அதற்கு அண்மித்த இவருக்குச்சொந்தமான பல கோடிப்பெறுமதியான கட்டடமும் சர்ச்சைக்குள்ளானது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஹக்கீம் தன்வசப்படுத்தினாலும் கட்சிக்கட்டடம் நசீர் அஹமட் சார்பான அணியிடமே இருந்தது. இதற்காக உயர்நீதிமன்றத்தில் வருடக்கணக்காக வழக்கு நிலுவையிலிருந்தது. இந்நிலையில், பேரியல் அஷ்ரப் அணி முற்றாக அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டது.

இதனால் நசீர் அஹமட்டிடம் கட்டடம் வசமானது. பலமுறை முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கு முயன்றும் ஹக்கீம் அணியினர் குறிப்பாக பஷீர் இடம்கொடுக்கவில்லை.

தனது எதிர்கால அரசியலை அடைந்து கொள்ள ஹக்கீமிடம் செஸ் ஆட்டம் ஆடத்தொடங்கினார். இதற்காக பசீருக்கும்  தலைமைக்குமிடையில் விரிசல் ஆரம்பமானது. அதே நேரம், கட்சிக்கட்டடத்தை ஏதோவொரு வகையில் ஒப்படைக்க வேண்டிய நிர்ப்பந்தம் பலரிடமிருந்து நசீர் அஹமட்டுக்கு நெருக்கடியானது.

இந்த பல  கொடுக்கல் வாங்களுக்கு மத்தியில் பிரதித்தலைவர் மற்றும் தேசியப்பட்டியல் நிபந்தனைகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் இணைந்தார். தேசியப்பட்டியலுக்குப் பதிலாக முதலமைச்சரானார். பசீர் சேகுதாவுது வெளியே போனார்.

இவரை முதலமைச்சராக்கும் நிர்ப்பந்தம் தலைமைக்கு இருந்தது. உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இவரை முதலமைச்சராக்கிய விடயத்தில் சரியான முடிவே எடுத்தார் என்றே கூற வேண்டும்.

ஏனெனில்,
1-கட்சிக்குள் நிலவிய தேசியப்பட்டியல் பிரச்சனைக்கு இவரது நியமனத்தால் ஓரளவு நிம்மதி
2-TNA கட்சியின் தலைமைகளுடன் இவரது தொடர்பு இரகசியமாக நிலவி வந்தது. இந்த ஆளுமையால் பெரும்பான்மை TNA உறுப்பினர்களை வைத்தே ஆட்சியைச் சிறப்பாக முடித்தார்.
3-முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை மட்டுமல்ல, ஆரிப் ஷம்சுதீன், சிப்லி பாறுக் போன்றவர்களை சில சலுகைகளை வழங்கி தொடர்ந்து பொம்மைகளாக வைத்திருக்கும் வசதி இருந்தது.
4-முஸ்லீம் முதலமைச்சர் என்ற முஸ்லிம் காங்கிரஸ் கோஷத்தைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம்
5-கிழக்கில் செல்வாக்குள்ளவர்களை முதலமைச்சராக்கினால், அது தலைமைத்துவத்திற்கு ஆப்பு. இதனால் செல்வாக்கில்லாதவரை முதலமைச்சராக்கினார்.

இருந்தும் முன்னைய முதலமைச்சர் சந்திரகாந்தனை விட குறைவான செயற்பாடும் நஜீபை விட வேகமான செயற்றிறனுமுள்ளவராக சேவையாற்றினார். சந்திரகாந்தனுக்கு மாகாண சபையில் போதிய பெரும்பான்மை மற்றும் மஹிந்த குடும்பத்துடன் பூரண ஆதரவும் பலமும் இருந்ததே முக்கிய காரணமாகும்.

அதே நேரம், மாகாண சபைக்குரிய அதிகாரம் மற்றும் அந்தஸ்தை எந்தச்சந்தர்ப்பத்திலும் எவருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்றார். ஆளுமைமிக்க முதலமைச்சராக இவரால் மட்டுமே செயற்பட முடிந்தமை பாராட்டத்தக்கது.

அதே நேரம், அபிவிருத்தி விடயத்தில் மாகாணத்தின் முதலமைச்சர் என்பதை மறந்து தனது ஊருக்கே அதிக முக்கியத்துவம் வழங்கியதே இவரது பலவீனமாகும். மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புள்ளா, பிரதியமைச்சர் அமீரலி, அலிஸாஹிர் மௌலானா எம்பி, பசீர் சேகுதாவூத் போன்றவர்கள் தங்களுக்கான வாக்கு வங்கியை பிரதேச ரீதியாக வைத்துள்ளனர். எந்தவித அரசியல் பின்னணியோ, வாக்கு வங்கியோ வைத்திருக்காத முதலமைச்சர் தனக்கான இடத்தை அமைத்துக் கொள்ள மிகவும் தீவிரமாக இருந்தார். இதன் விளைவு மாகாணத்தின் மற்றைய இடங்களில் பாராபட்சமாகவே செயற்பட்டார்.

மேலும், சமூகம் சார்ந்த விடயங்களில் மாகாண சபையில் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, கிழக்கு முஸ்லீம்களின் காணிப்பிரச்சனை, மீள்குடியேற்றம், மீன்பிடி மற்றும் விகிதாசார அடிப்படையிலான வேலைவாய்ப்பு விடயங்களில் தனது அரசியலில் அனுபவமற்ற தன்மையைப் பிரதிபலித்தார்.

இவர் பிரதமர் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடான நெருங்கமான உறவுகளால், தனது கட்சி முஸ்லீம்களின் உரிமைகளை வென்றெடுக்குமென மக்களின் எதிர்பார்ப்பை வீணாக்கினார். தனது பதவியை எப்படியும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் காட்டிய ஆர்வமும், சூழ்ச்சிகளாலும் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் வெறுப்புக்குள்ளானார்.

கடந்த மாகாண சபைத்திருத்தச்சட்டம் மற்றும் (18, 20) இதர சட்டங்களை மனச்சாட்சிக்கு முரணாக நின்று ஆதரித்தார். இந்த சமூகத்தின் எதிர்காலப் பிரதிநிதித்துவ அரசியல் அதிகாரத்தை குழி தோண்டிப்புதைக்க இவரே இறுதி நேரத்தில் காரணமானார். நாளை இவருக்கே இந்த சட்டத்தால் பிரதிநிதித்துவம் இல்லாது போனாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.

வடமாகாண சபை தமிழ் மக்களின் உரிமை மற்றும் அதிவிருத்திக்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தேவையான போது, மத்திய அரசுடன் இணைந்தும் எதிர்த்தும் செயலாற்றுகிறது. இவரோ மத்திய அரசுக்கு இயலுமானவரை தன்னை நல்லவராகக் காட்டுவதற்கு எடுத்த முயற்சிகளால் முஸ்லீம் சமூகம் காட்டிக்கொடுக்கப்பட்டது.

இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் இந்த சமூகத்திற்கு முஸ்லீம் முதலமைச்சரை கிழக்கில் அமைத்தமை சாதனையே. தூரதிஷ்டவசமாக இனி வருங்காலங்களில் நடக்கவிருக்கும் புதிய தேர்தல் முறையில் இதனைக்குறிப்பாக முஸ்லீம் முதலமைச்சர் என்ற பதவிக்கே இடமில்லையென்பதே உண்மையாகும்.

ஆகவே, முஸ்லீம் சமூகம் தன்னை பிரதேச மற்றும் இனரீதியாக கூறுபோட்டு அரசியல் நடாத்துவது ஆபத்தானதாகும். தங்களின் இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்தி தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைவதே பாதுகாப்பாக இருக்கலாம். இதற்காக முஸ்லீம்களுக்கிடையில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும். இதன் மூலம் தேசிய அரசியலில் நாம் பலமானவர்களாக இருக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here