முஸ்லிம் சமூகம் விழிப்படையாத வரை… எம்.எம்.ஏ.ஸமட்

0
404

samad -2 (2)தெற்காசியாவில் பல சரித்திர வரலாறுகளைத் கொண்ட இலங்கை 1505 ஆண்டு முதல் அந்நியர்களின் ஆட்சிக்குட்படத் தொடங்கியது.

அதாவது, 16ஆம் நூற்றாண்டில் அந்நியர்கயர்கள் இந்நாட்டை தங்களது ஆட்சிக்குட்படுத்தினர். இந்நாட்டில் அந்நியர்கயர்கள் காலூண்டுவதற்கு  நூற்றாண்டுக்கு முன்னதாக 15ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் இந்நாட்டில் கால் பதித்துள்ளதாக சரித்திர வரலாறுகள் கூறுகின்றன.

ஏறக்குறைய 443 வருடங்கள் இத்திருநாடு; ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சிக்குட்பட்டு 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

தங்களை தங்களால் ஆளும் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. இந்நாடு சுதந்திரமடைவதற்கு இந்நாட்டில் வாழும் பல்லின சமூகத்தலைவர்கள் பங்காற்றியுள்ளனர். தியாகங்கள் பல புரிந்துள்ளனர். அவர்களில் முஸ்லிம் தலைவர்களினதும் பகிபங்கும் அளப்பெரியது.

சுதந்திரத்தின் பின்னரான காலங்களில் இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இனக்குரோத செயற்பாடுகள் சுதந்திரத்தைப் பெற ஒன்றுமைப்பட்டிருந்த இலங்கை மக்களை தனித்தனியாக, இனங்களுக்காகச் சிந்திக்கச் செய்தது.

சிங்களப்பெரும்பான்மை சமூகங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளும்   கட்சித்தலைவர்களும் சிங்கள மக்களையும் பௌத்த மத்ததையும் அக்கறையுடன் கவனிக்கத் தொடங்கியதன் விளைவு சிறுபான்மை சமூகத்தை இரண்டாம் தரப் பிரஜைகளாக நோக்கும் மனப்பாங்கை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவித்தது. அன்று தோற்றுவிக்கப்பட்ட இச்சிந்தனைப்போக்கு இன்றும் பெரும்பான்மை சமூகத்திலுள்ள கடும்போக்காளர்கள் மத்தியில் தொடர்கிறது.

அவற்றின் வெளிப்பாடு இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் நீண்ட கால அபிலாஷைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை சமூகங்களின் இருப்பு உட்பட உரிமைகளுக்கு பங்கம் ஏற்படும் வகையிலும் வரலாற்று நெடுங்கிலும் செயற்பட்டு வருவதைக்காண முடியும்.

கடந்த காலங்களில் கடும்போக்களர்களின் செயற்பாடுகள். விஷ்வரூபமெடுத்து ஆடத்தொடங்கியதனால், அவ்வாட்டமானது  சகோதர இனமான தமிழ் மக்களை நசுக்கவும் உரிமைகளை மறுக்கவும் தலைப்பட்டது. இதன் விளைவாக  இன ரீதியாகச்சிந்தித்து, இனத்தின் பெயரில் அரசியல் கட்சிகளை ஆரம்பித்து, அக்கட்சிகளின் சார்பில் மக்கள் வாக்குகளைப் பெற்று  மக்கள் மன்றுகளுக்குச் சென்று, அந்த மக்கள் மன்றில் தமது இனத்திற்காக குரல் கொடுக்கச் செய்யவும் அதற்காக  போராட்டங்களை மேற்கொள்ளவும் தமிழ் தலைமைகளுக்கு வழிகோலியது.

இக்காலகட்டங்களில் தமிழ் பேசும் மற்றுமொரு சமூகமான முஸ்லிம்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நசுக்கப்பட்ட போதிலும் அவை முஸ்லிம் தலைமைகளால் ஒரு பொருட்டாகக்கவனத்திற் கொள்ளப்படவில்லை.

காத்திரமான செயற்பாடுகளுடன் செயற்பட்டு தமது சமூகத்திற்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து ஒரு அரசியல் தனித்துவக்கட்சியொன்றை உருவாக்க முடியவில்லை.

இந்நிலையில், முஸ்லிம்கள் பச்சை என்றும் நீலம் என்றும் பெரும்பான்மைக் கட்சிகளில் தொங்கியிருந்தனர். இத்தேசமெங்கும் பரந்து வாழ்ந்த முஸ்லிம்களை அரசியல் ரீதியில் ஒன்றிணைக்க முடியாமையானது அரசியல், சமூக, கல்வி, பொருளாதார ரீதியில் பின்னடைவு ஏற்பட வழியமைத்தது.

முஸ்லிம்களின் பரம்பல் 2011ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் ஏறக்குறைய 22.2 மில்லின் மக்கள் தொகையை இந்நாடு கொண்டுள்ளர். இத்தொகையில் 1967227 பேர் முஸ்லிம்களாவர். 9.7 வீதமான முஸ்லிம்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிலும் கிழக்கு மாகாணத்தில் அதிகளவிலான முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் 245085 முஸ்லிம்களும் திருகோணமலை மாவட்டத்தில் 15854 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 133844 பேரும் என கிழக்கின் மாவட்ட ரீதியிலான முஸ்லிம்களின் குடித்தொகைப்பரம்பல் சுட்டிக்காட்டுகிறது.

ஆக 2011ஆண்டின் கணக்கெடுப்பின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 575936 முஸ்லிம்கள் உள்ளனர்.

புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2011ஆண்டு கணக்கெடுக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட குடித்தொகைக்கேற்ப மாவட்ட ரீதியிலான குடித்தொகைப் பரம்பல் பின்வருமாறு காணப்படுகிறது.

மாவட்டம்     இலங்கைச் சோனகர்    மலே இனத்தினர்
கொழும்பு    292728    12463
கம்பஹா     95501     1168
களுத்துறை    112276      597
கண்டி    191159     2062
மாத்தளை     44113      335
நுவரெலியாக     17422      492
காலி     38591       79
மாத்தறை     25300       54
அம்பாந்தோட்டை      6556     8210
குருநாகல்    113560     1083
புத்தளம்    146820      592
அனுராதபுரம்     70248      158
பொலனறுவை     29060       46
மாவட்டம்     இலங்கைச் சோனகர்    மலே இனத்தினர்
பதுளை     45342    1286
மோனறாகலை      9852       46
இரத்தினபுரி     21901      270
கேகாலை     57952      168
யாழ்பபாணம்      2139       05
மன்னார்     16082       10
வவுனியா     11700       05
முல்லைத்தீவு      1760       12
கிளிநொச்சி       678       00
மட்டக்களப்பு    133844       16
அம்பாறை    282484      176
திருகோணமலை    152854      364

இக்குடிப்பரம்பலை நோக்குகின்ற போது கிழக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களிலும்  மற்றும் கொழும்பு, புத்தளம், கண்டி, களுத்துறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.

வட மாகாணத்தில் ஏறக்குறைய 2 இலட்சம் முஸ்லிம்கள் உள்ள போதிலும் இவர்கள் இடம்பெயர்ந்து வாழ்வதனால் அவர்களின் குடிப்பரம்பல் இம்மாகாண மாவட்டத்தில் கணக்கெடுப்பில் கொள்ளப்படவில்லை என்பது புள்ளிவிபரங்களில் காணக் கூடியதாகவுள்ளது.

நாடளாவிய ரிதியில் 9.71 வீதம் வாழ்கின்ற முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும் ஆன்மீக கொள்கைகளின் அடிப்படையிலும் பிரிந்து செயற்படுவது இந்நாட்டில் முஸ்லிம்களின் சகல விடயங்களையும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது என்பதும் எதிர்காலத்தில் இந்நிலையை மோசடடையச் செய்யும் என்பதும் இன்னும் இந்நாட்டில் பரந்து வாழும் முஸ்லிம்களால் உணரப்படாது அவை தொடர்பில் விழிப்படையாது உள்ளமை ஆரோக்கிமற்ற நிலையாகும். சமூகம் இவை தொடர்பில் விழித்துக்கொள்ளாத வரை சமூக ஆரோக்கியம் கேள்விக்குறியாகவே காணப்படும் என்பதை மறுப்பதற்கில்லை.

குறிப்பாக, முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் ஒன்றுபடுவது காலத்தின் தேவையாகவுள்ளது. தனிக்கட்சிகளை ஆரம்பித்து கட்சி  நலன்களுக்காக செயற்படுவதும் பெரும்பான்மைக் கட்சிகளில் தொங்கிக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதோடு பிரதிநிதித்துவங்களில் பாதிப்பை ஏற்படுத்தவும் செய்யும் என்பதை சகல தரப்புக்களும் எதிர்கால சந்ததிகளின் நலன் கருதி சிந்தித்துச் செயற்பட வேண்டிதொரு கால கட்டத்தில் உள்ளோம் என்பது உணரப்படுவதும் இவை தொடர்பில் சமூகத்தின் அடிமட்டம் முதல் உயர் மட்டம் வரை விழிப்படையச் செய்வது அவசியமாகும்.

சமகால அரசியல் ஏற்பாடுகளும் எதிர்காலமும்

மாகாண சபைத்தேர்தல் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மாநகர, நகர மற்றும் பிரதேச சபை தொடர்பான சட்ட மூலத்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்தோடு,  புதிய அரசியலைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையும் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், இவ்வேற்பாடுகள் தொடர்பாக சந்தேகங்களும், எதிர்க்கருத்துக்களும், ஆதரவான கருத்தாடல்களும் தினமும் வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், இவ்வேற்பாடுகளுக்கு தங்களது கரங்களை உயர்த்திய முஸ்லிம் அரசியல் தலைமைகளும், மக்கள் பிரதிநிதிகளும் இவற்றின் சாதக பாதங்கள் குறித்து மக்களை தெளிவுபடுத்தவில்லை.

இந்த ஏற்பாடுகள் எத்தகைய தாக்கங்களை, அரசியல், பொருளாதார, சமூக இருப்புக்களில் ஏற்படுத்தும் என்ற தெளிவுகளை தலைமைகள் தெளிவுபடுத்தாது அபிவிருத்திக் கோஷங்களை முன்வைத்து வரும் சூழலில், சமூகத்தின் பெரும்பாலானேர் இவற்றின் சமகால மற்றும் எதிர்கால சாதக, பாதகங்கள் குறித்து அக்கறை கொள்ளாத நிலை காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

தத்தமது பதவி பட்டங்களை உயர்த்திக்கொள்ளவும் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும் என சமூக அக்கறையானது தனி நபர் முன்னேற்ற நிகழ்ச்சி நிரல்களுக்காக ஒரே திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இன்னும் சிலர் சமூக வலைத்தளங்களின் தங்களது கருத்துக்களை மொழிப்புலமைகளினூடக முன்வைத்துக் கொள்வதோடு நிசப்பதமாகிவிடுகின்றனர்.

விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே சமூக அக்கறையுடன் செயற்பாட்டுப் பொறிமுறைகளினூடக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், முழுச்சமூகமும் இப்புதிய ஏற்பாடுகளின் தாக்கம் எத்தகையதாக  அமையும் எனச்சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இப்புதிய ஏற்பாடுகள் குறித்து மக்கள்  விழிப்படையாமல் இருப்பதும், விழிப்படையச் செய்யப்படாமல் இருப்பதும் சமூக அரசியல், பொருளாதார ரீதியில் எதிர்கால சமூக ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும் என்பது உணரப்படுவது முக்கியமாகும்.

குறிப்பாக, எல்லை நிர்ணைய ஏற்பாடுகளும், தேர்தல் முறை மாற்றங்களும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? அவ்வாறு ஏற்படுத்தினால் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், உலமாக்கள் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதோடு இவை தொடர்பில் சமூகத்தின் சகல அங்கத்தவர்களையும் விழிப்படைச் செய்வது சமூக ஆரோக்கியத்தை வலுவூட்டுவதற்கு உதவும்.

தேர்தல்களும் பிரதிநிதித்துவமும்

இந்நாட்டின் சுதந்திரத்திற்காக பங்களிப்புச் செய்த முஸ்லிம் தலைவர்களின் கால கட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய சவால்களுக்கும் 1980களின் பிற்பாடு முஸ்லிம்கள் எதிர்நோக்கிய சவால்களுக்கும் நிறையவே வேறுபாடுகள் காணப்படுகிறது.

அந்த வேறுபாட்டிலிலுருந்து இந்நாட்டு முஸ்லிம்கள் தனித்துவ அரசியல் அடையாளங்களுடன் வாழ வேண்டுமென்பதற்காக மாத்திரமின்றி ஒன்றுபட்ட வாக்குப்பலத்தினூடாக சமூகத்தின் உரிமைகளைப் பெற்றெடுப்பதற்காக  மறைந்த  தலைவர் அரஷ்ரபினால் உருவாக்கப்ட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரின் மரணத்துடன் பிளவு பட ஆரம்பித்தது என்பது தெரிந்த கதை.

இக்கதையின் தொடரானது ஒன்றுபட்ட முஸ்லிம்களின் அரசியல் யுகத்தைக் கேள்விக்குறிகள் நிறைந்ததாக வடிவமைத்திருக்கிறது. தலைமைத்துவம் உட்பட விட்டுக்கொடுக்கப்படாத சுயநல பதவிப் போட்டிகள் இக்கட்சியை துண்டுதுண்டாக சிதறச் செய்தது. ஒரு தனித்துவ அரசியல் பலத்துடன் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸானது தேசிய காங்கிரஸ் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்றும் பிரிந்து சென்றது, இந்தப் பிரிதலுக்கான பொறுப்பை தற்போதை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை சுமக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு வருகின்றமையை சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்நிலைமைகள் முஸ்லிம்களின் வாக்குகளைச்சிதறச் செய்ததுடன், முஸ்லிம்களிடையேயான அரசியல் பலத்தையும், பலவீனப்படுத்தியிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இந்த அரசியல் நிலைமைகளினால் இழக்கப்படுகின்ற முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின்  வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டிய தேவையுள்ளது. அதாவது முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச்  மாதம் அல்லது ஜுன் மாதத்தில் நடைபெறலாம் எனவும் அரச தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளிவந்துள்ள நிலையில், எப்போது எவ்வாறு தேர்தல்கள் நடைபெற்றாலும் அத்தேர்தல்களில் முஸ்களின் குடிப்பரம்பலுக்கு ஏற்ப பிரதிநிதித்துவங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சகல தரப்புக்களையும் சார்ந்தது என்ற யதார்த்தம் உணரப்படுவது அவசியமாகும்.

எந்நிலைமைகள் காணப்பட்டாலும் எவ்வைகயான ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் தேர்தல்கள் இடம்பெற்றாலும் அத்தேர்தல்களுக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களும் முகங்கொடுக்க உள்ளனர் என்பதனால், அத்தேர்தல் களத்தில் பிரிந்து நின்று  செயற்படுவது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களைக் குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

“நான் விழித்திருக்கும் போது சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது. நான் தூங்கும் போது சமுதாயம் விழித்துக்கொள்ளும்” என்று கூறிய மறைந்த தலைவர் அஷ்ரப் “தலைவர்கள் உருவாகுவதில்லை உருவாக்கப்படுகிறார்கள்” என்றும் கூறிச் சென்றுள்ளார். சமுதாயத்திற்காக சிந்திக்கின்ற, செயற்படுகின்ற, பதவிகளுக்கு சோரம் போகாத, தன்நலன்களை மேன்மைப்படுத்தாத, சமுதாய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற, பிரதேச, பிராந்திய வேறுபாடுகள் காண்பிக்காத தலைவர்கள் சமூதாயத்திலிருந்து உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது.

ஆனால், இத்தேவையை இன்றோ அல்லது நாளையோ நிறைவேற்ற முடியாது. ஆதலால், முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி அதன் மூலம் ஒரு முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டிய தேவையும் அதற்காக  சமூகத்தை விழிக்கச் செய்வதும், செயற்படுவதும் காலத்தின் முக்கிய கடப்பாடாகும்..

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பிரிந்து நின்று செயற்படும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்று சேர்க்கவும் அவற்றை ஒரு முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட வைக்கவும் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள உலமாப் பெரும்தகைகளும், சிவில் அமைப்புக்களும், புத்திஜீவிகளும் ஒன்றுபடுவதும் இக்கட்சிகளின் தலைமைத்துங்களை ஒன்றிணைத்து ஒரு முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற வழியமைப்பதும் இன்றியமையாததாகவுள்ளது.

சமகால அரசியல் சூழ்நிலைகளையும், அரசினால் முன்னெடுக்கப்பட்ட அல்லது முன்வைக்கப்படுகின்ற புதிய ஏற்பாடுகளையும் அவற்றின் சாதக, பாதக நிலைகள் தொடர்பிலும் விழிப்படையாது,  தனி நபர் நிகழ்ச்சி நிரல்களுக்கு முன்னுரிமை வழங்கி சமூக அங்கத்தவர்கள் செயற்படுவார்களையானால் இவற்றின் பாதிப்புக்களை சந்ததி சந்ததிகளாக எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

ஆதலால், இவை தொடர்பில் சமூகம் விழித்துக் கொள்ளுவதும் சமூகத்தை விழித்துக்கொள்ளச் செய்வதும் காலத்தின் கட்டாயமாகும். தற்கால அரசியல் ஏற்பாடுகள் குறித்து சமூகம் தெளிவு கொண்டு விழித்துக்கொள்ளாத வரை சமூக ஆரோக்கியம் கேள்விக்குறியாக்கப்படும் என்பது நிதர்சனமாகும்.

விடிவெள்ளி – 28.09.2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here