நமக்கான அரசியலை நோக்கி நாமே நகர்வோம்-திருமலை சகோதரத்துவ அமைப்பு

0
284

gநமது முஸ்லீம் தலைமைத்துவங்கள் நம்மை அடமானம் வைத்து நடாத்துகின்ற வங்குரோத்து அரசியலை நிறுத்துவது கடினமான ஒன்றாகி விட்டது. இருந்தும், திருகோணமலை மாவட்டத்தில் அதிகமான முஸ்லீம்கள் வாழ்ந்த போதும் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளோம்.

ஒரு புறம் மாவட்டத்தில் சிங்களப்பேரினவாதம் மறுபுறம் தமிழ் தீவிர சக்திகளின் அடக்குமறைகளால் இடையில் சிக்குண்டு சிதறடிக்கப்படுகிறோம். நமக்கான இருப்பு, அந்தஸ்து மற்றும் தனித்துவம் இன்று விலை போன ஒன்றாகி விடடது.

உள்ளூர் அரசியல்வாதிகளின் பிற்போக்கானதும் உழைப்பையோ நோக்கமாகக் கொண்டு நடாத்துகின்ற குடும்ப அரசியலால் எதிர்காலத்தை சூன்யமாக்கியுள்ளோம். அரசியலை எதிர்க்கின்றவர்கள், விமர்சிக்கின்றவர்கள் மற்றும் முற்போக்கான படித்த இளைஞர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறோம் அல்லது சந்தர்ப்பம் வழங்கப்படாமல் ஒதுக்கப்படுகிறோம்.

அபிவிருத்திகளெல்லாம் கமிஷனை இலக்கு வைத்தும் தனக்கு தேர்தலில் செலவு செய்யும் கொந்தராத்து மூட்டைப்பூச்சிகளை இலக்காக வைத்தே நகர்த்தப்படுகிறது.

மாவட்டத்தின் சகல முஸ்லீம் பிரதேசங்களிலும் பிரதேசவாதமும் குட்டித்தலைவர்களின் அதிகரிப்பும் நம்மை நமக்கே எதிரிகளாக்கியுள்ளது. உலக முஸ்லீம்களுக்காக கண்ணீர் சிந்தும் நம்மால் பக்கத்து வீட்டு முஸ்லீமின் உணர்வுகளை புரிய முடியாதுள்ளது.

மார்க்கத்தைப்பேசுபவர்கள், மார்க்கம் சார்ந்த சபைகள் எல்லாம் அரசியல்மயமாகி விளம்பரம் தேடும் அமைப்பாகி விட்டது. தலைமைத்துவக்கட்டுப்பாடும் சமூக ஒற்றுமையும் சீர்குலைந்துள்ளது. முற்போக்காக எழுதும் பேசுகின்றவர்களெல்லாம் காலத்துக்காலம் மட்டும் வந்து போகும் ஈசல் பூச்சிகளாகவேயுள்ளனர்.

இந்நிலை மாற்றப்பட வேண்டும். இது மிகவும் கடினமானதும், சவால்கள் நிறைந்ததுமான பயணம். ஏனெனில், மனித நோயமற்ற நடமாடும் மிருகங்களோடு மோத வேண்டிய போராட்டம். இருந்தும், எவரேனும் ஆரம்பித்து வைத்தேயாக வேண்டுமென்ற நிலை உருவாகியுள்ளது. ஆகவே, தீக்குச்சியாக உருமாறியாக வேண்டும்.

இந்நிலையில், மாவட்ட முஸ்லீம்களை தனித்துவமிக்கவர்களாகவும் பலமான கட்டமைப்புடனும் ஒன்றிணைக்கும் பயணத்தை இன்ஷா அல்லாஹ் ஆரம்பித்துள்ளேன்.

பல்வேறு ஆய்வுகள், கருத்துப்பறிமாறல்கள் மற்றும் நீண்ட காலச்சிந்தனையோட்டத்தின் விளைவாக இந்தத்தீர்மானத்தை எடுத்துள்ளேன். இறைவன் துணை நிச்சயம் கிடைக்குமென்ற நம்பிக்கையுண்டு.

அந்த வகையில், மாவட்ட முஸ்லீம் பிரதேசங்களில்
1-பிரதிநிதித்துவம்
2-அபிவிருத்தி ஆகியவற்றைச் சமமானதும் சாத்தியமானதுமான முறையில் பங்கீடும் பகிர்ந்தளிப்பும் செய்து, நமக்கான பலமிக்க சமூகக்கட்டமைப்பை உருவாக்குவோம்.

நம்மை பகடைக்காய்களாகவும், நமது மண்ணை அரசியல் விபசாரமடமாகவும் மாற்றிய துரோகிகளை வெளியேற்றுவோம். எங்கள் வாக்குகளால் தேசியப்பட்டியலும், அமைச்சரவைப் பதவியும் சுகபோகமும் அனுபவிக்கும் வழிப்போக்கு அரசியல்வாதிகளைத் துரத்தியடிப்போம்.

தேசியக்கட்சிகள் மற்றும் தேசிய அரசியலில் பங்காளர்களாக இருப்போம். உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத்தேர்தலில் மாவட்டத்தில் தனித்துவமாக நின்று நமக்கான பேரம் பேசும் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம்.

ஆகவே, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மண்ணையும் மக்களையும் மீட்கும் பயணத்தில் உங்கள் கருத்துக்கள், ஆதரவு மற்றும் ஆரோக்கியமான விமர்சனங்கள் அவசியமாகும்.

நமக்கான அரசியல்
நமது மண்ணில்
நம்மாலே முன்னெடுக்கப்பட வேண்டும். எமது இலட்சியங்கள் மற்றும் கனவுகள் மீது எவரையும் சவாரி செய்யவும் நாட்டாமை செய்யவும் இனி மேலும் அனுமதிக்க முடியாது.

அடி வாங்கியதும்
அடிமையாக வாழ்ந்ததும் போதும்
திருப்பி அடிப்போம்.

ஆகவே, இனி வருங்காலங்களில் எமது சமூக மற்றும் அரசியல் சார்ந்த விடயங்களில் தனித்துவமும் பாதுகாப்பானதுமான அமைப்பு ரீதியான கட்டமைப்பு உருவாக்க பலரும் ஆர்வமாகவுள்ளனர். மாவட்டத்தில் சகலரையும் உள்வாங்கி வெளிப்படையான கலந்துரையாடல்கள் மூலம் இதனை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாக உலமாக்களின் அதிக பங்களிப்பு அவசியமாகவுள்ளது. உங்களின் ஆலோசனைகளும், பங்களிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here