கூலிப்படைகளின் வெற்றுக்கூச்சல்களால் நாங்கள் ஒரு போதும் பலவீனப்படமாட்டோம்-அமைச்சர் ரவூப் ஹக்கீம்

0
146

22050226_2083052958594708_5222754247625400069_n(நாச்சியாதீவு பர்வீன்)
கூலிப்படைகளின் வெற்றுக்கூச்சல்களால் நாங்கள் ஒரு போதும் பலவீனப்பட்டுப்போகமாட்டோம் என நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) கல்லொழுவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்யப்பட்ட  கல்லொழுவை இளைஞர் காங்கிரசின் ஏழாமாண்டு நிறைவையொட்டிய  விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்

தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,

எமது கட்சி அரசியல் ரீதியாகவும், அபிவிருத்தி தொடர்பிலும் உச்சத்திலிருக்கின்ற இந்த சாதகமான காலகட்டத்தில் இந்தப்பிரதேசத்துக்கும் எமது அபிவிருத்திப்பணிகளின் கணிசமான பங்களிப்பினைச் செய்ய வேண்டுமென்கின்ற மனவுறுதி என்னிடம் வந்திருக்கிருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நீண்ட கால வரலாற்றிலே மூத்த உறுப்பினர்களைக் கௌரவப்படுத்துகின்ற பாரம்பரியம் தொடராக இருந்து வந்துள்ளது. அந்தப்பாரம்பரியத்தை இன்றைய இந்த இளைஞர்கள் நிறைவேற்றி வைக்கின்ற இந்த சம்பிரதாயம் மனதுக்கு மிகவும் ஆறுதல் தருகின்ற விஷயமாகும்.

புதிய கள நிலவரம் ஆங்காங்கே காளான்களாக முளைத்த சிலர் இந்த தேசிய இயக்கத்திலே வந்து அரசியல் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் தங்களுக்கென்று தனியாகக் கட்சியமைத்துக் கொண்டு இந்தக்கட்சிக்கு குழி பறிக்க ஓடித்திருக்கின்ற நிலைமையில், இக்காட்சியிலேயே அரசியல் அந்தஸ்த்துப்பெற்று அவசரப்பட்டு வேறு கட்சிகளிலே அடைக்கலம் தேடுகின்ற நிலவரத்தில், இளைஞர்கள் மத்தியில் இந்த பேரியக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு உருவாகியிருக்கின்ற ஆர்வம், ஊக்கம் இந்தப்பிரதேசத்தில் இவ்வளவு தீவிரமாக இருக்கின்றதென்பதனைப் பார்க்கும் போது நாங்கள் மிகவும் பூரிப்படைகிறோம்.

கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியலில் பங்களிப்புச்செய்த எத்தனையோ கிராமங்கள் இருக்கலாம். ஆனால், இந்த கல்லொழுவைக்கு என்று தனியான இடம் எமது ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை இருக்கிறதென்றால் அது மிகையாகாது என்று நினைக்கிறேன்.

பழைய பெருமைகளைப் பேசிக்கொண்டே காலம் கடத்துகின்ற ஒரு இயக்கமாக நாம் இருந்து விட முடியாது. புதிய யுகம் சவால் மிகுந்த யுகமென்பதை நாங்கள் முதலில் மனங்கொள்ள வேண்டும். தகவல் பறிமாற்றம் வித்தியாசமான பரிணாமத்தைக் கொண்டிருக்கின்ற காலகட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாட்டு நடப்புக்களை மிகக்குறுகிய நேரத்தில் உலகின் மூலைமுடுக்குக்கெல்லாம் கொண்டு செல்கின்றளவிற்கு இன்று தகவல் பரிமாற்றம் பாரிய வளர்ச்சியை அடைந்துள்ள காலகட்டத்தில் அரசியலும், அரசியல்வாதிகளும் நியாயமாகவும், அநியாயமாகவும் விமர்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனவே, நம்பக்க நியாயங்களை மக்கள் மயப்படுத்துகின்ற முயற்சியில் நாங்கள் கூட்டம் நடத்திதான் இவற்றையெல்லாம் செய்ய வேண்டுமென்றில்லை. பாரம்பரிய தேவைகளுக்காக கூட்டம் நடத்துகிறோம். கொடிகட்ட,  ஊர்வலங்களைச் செய்கின்றோம். வீடு வீடாகச்சென்று பிரசாரம் செய்கின்றோம். ஆனால், இந்தப்பிரசார யுக்திகளெல்லாம் மாறிப்போயுள்ளது.

இன்று ஒரு சிலரை கூலிக்கமர்த்தி எங்கோ ஒரு மூலையில் குந்த வைத்து அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து, பொய்யான இட்டுக்கட்டல்களைச் செய்கின்றதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டுள்ள இந்தக்கூலிப்படையின் அடாத்தான செயற்பாடுகளின் மூலம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மக்கள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தவும், இந்தக்கட்சியின் வேரறுக்கவும், கட்சியை குழி தோண்டிப்புதைக்கவும் சில அரசியல்வாதிகள் முனைகிறார்கள்.

தனிக்கட்சி அமைத்தால் மாத்திரமே அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதற்காக பிரதேசத வாதத்தை விதைத்து, அந்தஸ்துள்ள அமைச்சுக்களைப் பெற்றுக்கொண்டவர்கள், இப்போது இந்த பாரிய விருட்சத்தை வீழ்த்தி விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அந்தக்கனவுகளின் பிரதிபலிப்பே இந்தக்கூலிப்படைகளின் செயற்பாடுகளாகும்.

இந்த அபத்தமான செயற்பாட்டினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கம் செய்யாது. இந்த குறுநில மன்னர்கள்  செய்கின்ற இந்த குருட்டுத்தனமான பிழைப்புவாத அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் செய்ய வேண்டிய எந்தத்தேவையும் எமக்கு கிடையாது. ஒரு வங்குரோத்து அரசியல் செய்ய வேண்டிய கடப்பாடு எங்களுக்க்கில்லையென்பது எங்களது உறுதியான  நிலைப்பாடாகும்.

எமது கட்சியின் ஊடகத்துறையினர் மாதமொருமுறை “சாட்சியம்” எனும் மாதாந்த சஞ்சிகையை வெளிக்கொணர்கிறார்கள். அதனை கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கொண்டு செல்வதன் மூலம் எமது கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலான விபரங்களை அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதனை அமைத்துள்ளோம்.

ஆனால், கூலிப்படையை அமைத்து மூன்றா ந்தரமாக நடந்து கொள்கின்ற விதமாக நாம் ஒரு போதும் நடக்கப்போவதில்லை. மாறாக, எமது கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் இந்த இயக்கத்தின் கவசங்களாக இருக்கின்ற இளைஞர்கள் .

அவ்வப்போது கட்சிக்கெதிரான கூலிப்படைகளின் செயற்பாடுகளுக்கு பதிலளித்துக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் இந்த இயக்கத்தின் மீதான பற்றினாலும், மெய்யான விசுவாசத்தினாலுமே இதனைச் செய்கிறார்கள். மாறாக, தலைவர் இதனைப்பார்க்க வேண்டுமென்றோ அல்லது தலைவரின் பாராட்டைப்பெறவேண்டுமென்றோ இல்லை. சுயநலமில்லாமல் செயற்படுகின்ற இவ்வாறான பல்லாயிரக்கணக்கானவர்கள் நாட்டின் மூலை முடுக்களிலிருந்தும் மற்றும் நாடு கடந்திருக்கின்ற தளங்களிலிருந்தும் இதனைச்செய்து கொண்டிருக்கிறார்கள்.

கூலிப்படைகளின் வெற்றுக்கூச்சல்களால் நாங்கள் ஒரு போதும் பலவீனப்பட்டுப்போகமாட்டோம். இந்தக்கட்சிக்கென ஒரு பூர்வீகமிருக்கிறது. இதை  வளர்த்ததற்கான ஒரு வரலாறு இருக்கிறது. இந்தக்கட்சியானது, தீவிரமாக மக்கள் மயப்படுத்தப்பட்ட காலங்களிலே மறைந்த எம் தலைவர் எதிர்கட்சி அரசியல் செய்த காலத்தில் செய்த தியாகங்களை நாம் இன்னும் நினைத்து பார்க்கின்றவர்களாக இருக்கின்றோம். அன்றும் இன்றும் இந்தக்கட்சியினை காக்கின்ற கவசமாக இளைஞர்கள் இருந்துள்ளார்கள். இருக்கின்றார்கள் என்பதனை இந்த நிகழ்வு நிறுவி நிற்கின்றது எனக்கூறினார்.

பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தல், கட்சியின் மூத்த போராளிகளைக் கௌரவித்தல், மாற்று அரசியல் தளத்திலுள்ளவர்களின் சேவைகளைப் பாராட்டிக்கௌரவித்தல், மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களின் நிதியுதவியில் கையடக்கத்தொலைபேசி திருத்தல் பயிற்சியை நிறைவு செய்த 50 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல், தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டுபகரணங்களை வழங்குதல் மற்றும் மர்ஹூம் அஸ்ரப்இ, தலைவர் ரவூப் ஹக்கீமின் தாயாரான ஹாஜரா உம்மா ஆகியோருக்கான துஆப்பிரார்த்தனை  எனப்பல்வேறு நிகழ்வுகள் இதன் போது இடம்பெற்றன.

இந்நிகழ்வில், மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம், சிரேஷ்ட ஊடகவியலாளரும் லேக் ஹவுஸ் தமிழ் மொழிமூல பிரசுரங்களுக்கான ஆலோசகர் கலாபூசணம் நிலாம், கலாபூசணம் மு.பஷீர் மற்றும் கட்சியின் கல்லொழுவை பிரதேசத்து உயர்பீட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப்பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.22046857_2083052665261404_117662522290005448_n 22050226_2083052958594708_5222754247625400069_n 22089634_2083049198595084_7862738382476600386_n 22090099_2083051451928192_5885331311083219292_n 22141113_2083049188595085_5444546271510011119_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here