மக்களுக்குரிய தேசியப்பட்டியலை மக்களே தீர்மானிக்க வேண்டும்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

0
119

IMG_2055அன்புள்ள நாபீர் பவுன்டேசன் தலைவரே!!

அடிக்கடி அறிக்கை விடும் உங்களது செயற்பாடுகள் உலமாக்கட்சித் தலைவரைத்தான் ஞாபகப்படுத்துகிறது. இருந்தும், உங்களது கிழக்கு தேசியப்பட்டியல் தொடர்பான அறிக்கையில் நிசாம் காரியப்பருக்கு வழங்க வேண்டுமென தெரிவித்திருந்தீர்கள் .

இந்தச்சமூகத்திற்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் நிசாம் காரியப்பர் எப்போது அறிமுகமானார்? எத்தகைய அர்ப்பணிப்புச் செய்தார்? என்பதை பட்டியலிட்டுக்கூற முடியுமா?

கல்முனை மற்றும் கொழும்பைத்தவிர நாட்டின் ஏதாவது பிரதேசங்களுக்குச்சென்று கட்சியின் பிரசாரம் மற்றும் மறுசீரமைப்புகளில் பங்கெடுத்தாரா? இவரை விட ஆயிரம் மடங்கு பிரதி மேயர் முழக்க மஜீத் கட்சிக்கான போராளியாகவும், உண்மையாகவும் உள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரையில், பொதுச்செயலாளர் பதவி எப்போதும் தலையாட்டும் பொம்மையே. இருந்தும், ஹஸனலி கட்சியின் ஆரம்ப காலப்போராளியாகவும், விசுவாசியாகவும் இருந்ததால், தேசியப்பட்டியல் வழங்கப்பட்டது. நிசாம் காரியப்பர் கட்சியின் போராளியாகவோ, கட்சிக்கு விசுவாசியாகவோ இருந்தது கல்முனை நகர சபைத்தேர்தலுக்குப் பின்னர் என்பதே உண்மை.

விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிழக்கில் உயிர்களைத்தியாகம் செய்து, போராளிகள் கட்சி வளர்த்தனர். அந்த நேரம் ஆங்கிலம் பேசி கொழும்பில் வாழ்ந்தவர் நிசாம்.

2002ம் ஆண்டு காலப்பகுதியில் சந்திரிக்கா மற்றும் ரணிலால் கட்சி பல கோணங்களில் உடைக்கப்பட்டது. அந்த நேரம் பேரியல் அஷ்ரபுடன் துணை நின்று கட்சிக்கும் போராளிகளுக்கும் துரோகம் செய்தது யார்?

ஒரு சட்டத்தரணியாக இருப்பதால் தேசியப்பட்டியல் வழங்குவது நியாயமென்றால், கிழக்கில எத்தனையோ கலாநிதி மற்றும் கல்விமான்கள் உள்ளனர். இவர்கள் சமூகத்திற்காக பல்துறைசார் அர்ப்பணிப்புகளைச் செய்கின்றனர். நிசாம் காரியப்பர் கிழக்கு முஸ்லீம்களின் குடியேற்றம், காணிப்பிரச்சனை, பௌத்த தீவிரவாதம் மற்றும் வடகிழக்கு இணைப்பு தொடர்பில் குறைந்தபட்சம் தனக்குத்தெரிந்த சட்டத்தையாவது வாய் திறந்தாரா?

தற்போது ஹக்கீமுடன் சேர்ந்துள்ள புதிய கூட்டாளி சுமேந்திரனுக்கு ஆமா போடுபவரே நிசாம். ஒரு கல்விமானாக இவரை மதிக்கின்றோம். பராட்டுகிறோம். ஆனால், சமூகத்தை வழிநடாத்தும் தேசியப்பட்டியலுக்கு அருகதையற்றவர்.

ஏற்கனவே கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் தொடர்ச்சியாக பாராளுமன்ற ஆசனங்களை அடைந்துள்ளது. ஆகவே, கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத இடங்களுக்கு வழங்க வேண்டிய கடப்பாடுள்ளது. அறிக்கை விட வேண்டுமென்பதற்காக எதையும் பேச முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைக்குரிய கட்சியல்ல. முஸ்லீம்களின் கட்சி.

இத்தகைய அறிக்கை விடுவதைவிட உங்களுக்கே தேசியப்பட்டியலை கேட்டிருக்கலாமே? கிழக்கில் அதிகமானவர்கள் அறிக்கை விடுவதற்கு சில இணையத்தளங்களைச் சொந்தமாக்கியுள்ளனர்.

மேலும் ஏற்கனவே பிரதிநிதித்துவம் இருந்து, தற்போது கிடைக்கப்பெறாது முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரத்திற்குள்ளான புத்தளம் மற்றும் வன்னி கட்சிக்கு முக்கியமாகவுள்ளது. இப்பிரதேசத்தில் கட்சியை ஏனைய இடங்களைவிட, ACMC மற்றும் PA முஸ்லீம் வாக்காளர்களுக்கு மத்தியில் பலப்படுத்த வேண்டிய கடமை கட்சிக்குண்டு.

அத்துடன் கட்சியின் உயர்பீடத்தைக் கூட்டாமல் பொதுச்செயலாளராக நிமித்தது இரண்டு காரணங்கள்:

1-ரணில் மற்றும் சுமேந்திரனின் நிர்ப்பந்தம். இதன் மூலம் கிழக்கை இணைக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி
2-பிரதியமைச்சர் ஹரீஸுக்கு கட்சியிலும் கிழக்கிலும் உருவாகியுள்ள ஆதரவைத்தடுக்க கல்முனையில் தேவைப்பட்ட தலையாட்டு பொம்மை.

ஆகவே, நிசாம் காரியப்பரை கிழக்கில் தேசியப்பட்டியல் வழங்குமாறு ஒருபோராளி கூட யோசிக்கமாட்டான். உங்கள் சுயவிளம்பரத்துக்காக இப்படியான காமடி அறிக்கையை விடவேண்டாம். அடுத்து கிழக்கில் வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியல் திருகோணமலைக்கு கௌரவ தௌபீக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் திரும்பப்பெற்று வழங்க வேண்டுமென்று கூறியுள்ளீர்கள்.

கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாக இருக்கின்ற ஒரு போராளி தௌபீக் மட்டுமே. தலைமையின் கட்டளையை மீறாது கூட்டுப்பொறுப்புடன் செயற்படுகின்ற ஒரு மக்கள் பிரதிநிதி. உங்களிடம் இருந்திருந்தால் பறித்து இவருக்கு வழங்க வேண்டுமே தவிர, இவரிடமிருந்து உங்களுக்கு வழங்குவது கோழைத்தனம். இதனை கட்சியின் அடிமட்டப் போராளிகூட விரும்பமாட்டான்.

கிழக்கில் வழங்கப்பட்ட பசீர் மற்றும் ஹஸனலி போன்றவர்களின் தேசியப்பட்டியல் தனிப்பட்ட விருப்பில் தவறுதலாக நடந்த வரலாற்றுத்தவறுகள். ஆனால், தௌபீக்கின் தேசியப்பட்டியல் நியாயமாகவும், நேர்மையாகவும் கட்சிக்குரிய தார்மீகப் பொறுப்பில் வழங்கப்பட்டவை.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்புரிமைகூட இல்லாத உங்களால், பொறுப்பும் பெறுமதியுமிக்க இப்பதவி தொடர்பில் அறிக்கைவிடும் உள் அர்த்தம் என்ன? உங்கள் கருத்தை ஒரு உண்மையான போராளியால் கூட ஜீரணிக்க முடியாது.

முஸ்லிம் காங்கிரஸ் தையல் இயந்திரம் மற்றும் பாடசாலை உபகரணம் வழங்க உருவாக்கப்பட்ட கட்சியல்ல. உங்கள் மாவட்டத்தை விட பல உயிர்களை இழந்து, அகதிகளாகி, உடமை இழந்து வளர்த்த கட்சி. அஷ்ரப் உங்கள் மாவட்டத்தில் உருவாக்கி இருக்கலாம். அதற்கு இரத்தத்தால் உரமூட்டி வளர்த்தது திருகோணமலை மாவட்ட முஸ்லீம்கள் என்பதே வரலாறு.

நீங்கள் எங்களிடமிருந்து திருப்பி எடுப்பதற்கு அறிக்கை விடுவதைவிட, வழங்கியதை தரமாட்டோம் என்று அடம்பிடுக்கும் தார்மீகக்கடமை எமது மாவட்டத்தற்குண்டு. இருந்தும், எமது மவட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலையும் போராளிகளும் கட்சிக்கு தலை வணங்குபவர்கள். எங்கள் கண்ணியத்தையும் கட்டுப்பாடுகளையும் உங்கள் சில்லறைத்தன அறிக்கைகளுக்காக தவறாக வழிநடாத்த ஒரு போதும் விடமாட்டோம்.

2000ம் ஆண்டு வரை பிரதிநிதித்துவமில்லாதிருந்த கட்சியை 15588 வாக்குகளுடன் பாராளுமன்ற ஆசனத்தை சுவீகரிக்கச் செய்தார். அதன் பின்னரான பல மாகாண மற்றும் பாராளுமன்றத்தேர்தல்களில் வெற்றி பெற்றதோடு, 2010 தேர்தலில் அதிகூடிய 23588 வாக்குகளை மாவட்டத்தில் பெறுவதற்கு காரணமாக இருந்தார்.

கிழக்கில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய சேவைகளைச் செய்து பல சவால்களுக்கு மத்தியில் கட்சியை வளர்க்கின்ற தௌபீக்கிடமிருந்து தேசியப்பட்டியல் மீளெடுக்கப்படுவது கட்சியின் எதிர்காலத்திற்கு பாரிய சவாலாகவும் தோல்வியாகவும் அமையும்.

குறிப்பாக, ஐதேக மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்றப் பிரதிநிதிகள் சுதந்திரக்கட்சியின் மாகாண சபை முஸ்லீம் பிரதிநிதிகளுக்கு மத்தியில் ஏனைய மாவட்டங்களைவிட கட்சியைப் பலப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் தௌபீக்கிற்கு உள்ளது. இதற்கு இருக்கின்ற பாராளுமன்றப் பிரதிநிதித்துவமே துணையாகவுள்ளது.

மேலும், கிழக்கு மாகாண சபை திருகோணமலை மாவட்டத்திற்கு செய்த துரோகங்களால் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அத்துடன், கடந்த பாராளுமன்றத்தேர்தலில் மூதூருக்கான வேட்பாளர் விடயத்தில் கட்சித்தலைமையின் பிழையான செயற்பாட்டால் கட்சியின் கோட்டையான மூதூரில் சரிவினைக் கண்டுள்ளது. இவற்றை ஓரளவேனும் சமாளித்துக்கொள்ள திருகோணமலை மாவட்ட தேசியப்பட்டியல் தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டும்.

இம்முறை தேசியப்பட்டியல் வழங்கப்படாது விட்டிருந்தால், எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் 1000 வாக்குகளைப் பெறுவது கூட கடினமாக இருக்கும்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்திற்கு மேலதிகமானது. ஏனெனில், தனி நபராக அஷ்ரப் செய்த சேவைகளில் 50 வீதம் கூட 3 உறுப்பினர்களால் செய்ய முடியவில்லை. போதாக்குறைக்கு 4வது நிசாம் காரியப்பருக்கு வழங்குவது நேரத்தை வீணடிக்கும் ஒன்றாகும்.

அதே நேரம், மற்றவர்களைப் போலன்றி கௌரவ தௌபீக் அவர்கள் கட்சித்தலைமை வேண்டினால், பதவியை இராஜினாமாச் செய்யத்தயாராகவேயுள்ளார். அப்படி நடந்தால் இதற்கான பதிலீடு புத்தளம், குருணாகல் அல்லது வன்னிக்கே வழங்கப்பட வேண்டும்.

மாறாக, கட்சித்தலைமை தனது மன இச்சைக்கு நிசாம் காரியப்பர் போன்றவர்களுக்கு வழங்கினால், கட்சி படுதோல்விக்கு தயாராக வேண்டும்.

குறிப்பு:
இக்கட்டுரை கட்சித்தலைமை மீதோ, கௌரவ தௌபீக் மீதோ உள்ள ஈடுபாட்டால் எழுதவில்லை. ஏனெனில், பல முரண்பாடுகள் மற்றும் எதிர்மறைக்கருத்துள்ளவன் நான். திருகோணமலை மாவட்ட முஸ்லீம் பிரதிநிதித்துவத்தின் மீதுள்ள அதீத அக்கரையுடன் கூடிய கட்சித்தலைமைக்கான ஆலோசனையாகவே எழுதியுள்ளேன்.

சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்
திருமலை சகோதரத்துவ அமைப்புIMG_2055 IMG_2071 IMG_2072

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here