ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை எதிர்காலத்தில் எங்களுக்கும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள்- தொடர் 4

0
79

14555683_1771626293107297_2105494033_nமுகம்மத் இக்பால் சாய்ந்தமருது

இரு தேசியக்கட்சிகளுக்கிடையிலுள்ள அதிகாரப்போட்டி காரணமாக இந்நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் அரசியல் சக்தியாக முஸ்லிம்கள் உள்ளார்கள். இது பௌத்த தீவிரவாத கடும்போக்கினைக் கொண்டவர்களுக்கு ஜீரணித்துக்கொள்ள முடியாத விடயமாகும்.

இதனால் விகிதாசாரத்தேர்தல் முறைமையினை மாற்ற வேண்டுமென்பதற்காக பௌத்த கடும்போக்குவாதிகள் ஆட்சியாளர்களுக்கு பின்னணியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களைப் பகைத்துக்கொள்ள எந்தவொரு தேசிய கட்சிகளும் விரும்புவதில்லை.

அவ்வாறு பகைத்தால், அது சிங்கள வாக்குகளில் பாரிய வீழ்ச்சிகளை ஏற்படுத்துமென்பதே இரு தேசியக்கட்சிகளது நிலைப்பாடாகும். இவ்வாறு இனவாதிகளுக்கு தாராளமாக களமமைத்துக் கொடுத்ததனாலேயே சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்சவுக்கு அதிகம் செல்வாக்கு உருவாவதற்கு காரணமாகும்.

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் மிகவும் சுதந்திரமான முறையில் பொதுபலசேனா இயக்கம் செயற்பட்டு வந்தது. அவர்களது முஸ்லிம்களுக்கெதிரான சதித்திட்டங்கள் கட்டங்கட்டமாக அதிகரித்துக்கொண்டு வந்திருந்த வேளையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மஹிந்த ராஜபக்ஸ தோல்வியடைந்தார்.

மகிந்தவின் தோல்வியானது, பொதுபலசேனா இயக்கத்துக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அவர்களால், மியன்மாரின் 969 இயக்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் திட்டமிட்டபடி முஸ்லிம்களுக்கெதிராக இனச்சுத்திகரிப்பினை இலங்கையில் மேற்கொள்வதற்கு தடையை ஏற்படுத்தியிருந்தது.

இன்றைய மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் பொதுபலசேனாவின் செயற்பாடுகள் காணப்பட்டாலும், மகிந்தவின் ஆட்சியுடன் ஒப்பிடுகையில் குறைவு என்றே கூற முடியும். அவர்களது செயற்பாடுகள் முடியுமானளவு கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றது.

அதாவத, மகிந்தவின் ஆட்சியில் முழு அதிகாரத்துடன் பொதுபலசேனா இயக்கத்தினர் முஸ்லிம்களுக்கெதிராகச் செயற்பட்டார்கள். பாதாள உலகத்தினர் என்ற போர்வையில் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்ததுடன், கொழும்பில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல பெறுமதியான சொத்துக்கள் சூறையாடப்பட்டது.

ஆனால், இன்றைய நல்லாட்சியில் சத்தமின்றி அரசியல் யாப்பின் மூலமாக சிறிதளவாக இருக்கின்ற முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்க முற்படுவதுடன், தொகுதிவாரி முறைமூலம் தேர்தல்களை நடாத்தி முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியை அரசியல் யாப்பு மூலமாக இல்லாதொழிக்க முற்படுகின்றது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், இன்று சிங்கள இளைஞர்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கெதிரான துவேச மனப்பான்மைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதனால் எதிர்காலத்தில் இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமாகும்.

இவ்வாறான நிலையில், சிறிதளவாக இருக்கின்ற அரசியல் பேரம் பேசும் சக்தியை நாங்கள் இழந்தால் எங்களது எதிர்காலச் சந்ததிகளின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதமுள்ளது?

எனவே தான் போராட்டங்கள் இன்றியும், இழப்புக்கள் இன்றியும் எதிர்கால எமது சந்ததிகளுக்கான பாதுகாப்பினை உருவாக்குவதற்கோ, உரிமையினைப் பெற்றுக்கொள்ளவோ முடியாது. தனிப்பட்ட அரசியல் சுயலாபங்களுக்காக ஒருவர் மீது ஒருவர் எங்களுக்குள்ளேயே கருத்து வேறுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இக்கருத்து வேறுபாடானது, எங்களது அரசியல் பலத்தினை இழக்கச்செய்வதுடன், வளர்ந்து வரும் பௌத்த தீவிரவாதம் எதிர்காலத்தில் இன்னுமொரு மியன்மாராக உருவாக்குவதற்குரிய சாத்தியக்கூறுகளே அதிகமாகக் காணப்படுகின்றது.

முற்றும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here