ஆசிரியப்பணியும் அண்ணலாரும்-எம்.ஐ அன்வர் (ஸலபி)

0
429

14068245_935158379963239_4518066858913707632_nஎதிர்காலத்தலைவர்கள் இன்றைய இளைஞர்கள். தலைவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டுமானால், இளைஞர்கள் நல்லவர்களாக உருவாக வேண்டும். நல்ல இளைஞர்களை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களுடன் ஆசிரியர்களுக்கும் உரியது. இதனால் அரசும் நற்பிரஜைகளை உருவாக்குவதே கல்வியின் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆசிரியர் தொழில் ஓர் உன்னதமான தொழில். மனித உறவுகளோடு உறவாடும் தொழில். இதனால் தான் “சிறந்த ஆசிரியர் கல்வியை ஊட்டுபவராக மட்டுமல்லாது, ஆலோசகராக, ஒழுங்கமைப்பவராக, ஊக்குவிப்பவராக, உதவுபவராக இருக்க வேண்டும்” என கல்வியல் அறிஞரான லூயிஸ் கோகலே என்பவர் குறிப்பிடுகின்றார். ஆசிரியர்கள் பொறுப்பாக செயற்படும் போது தான் சிறந்த மாணவர்களை உருவாக்கலாம்.

ஆசிரியர் வகுப்பறையொன்றில் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பிக்கும் போது, பாடங்கள் பற்றிய அறிவு மாத்திரம் ஆசிரியருக்குப் போதுமானதல்ல. பாடத்துடன் சம்பந்தப்பட்ட எவ்வளவு தேர்ச்சியுள்ளதோ அதே போல் மாணவர்கள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அவர்களின் குடும்பச்சூழல், மனநிலை, கிரகிக்கும் தன்மை என அவர்களை விளங்கிக்கொள்ளும் நிலையினையும் அடைய வேண்டும்.

கிரகித்தல், விளங்கிக்கொள்ளல் போன்றவற்றில் மாணவர்கள் மாணவர்களுக்கு வேறுபடுவர். “ஜோனுக்கு லத்தீன் கற்பிப்பதற்கு ஆசிரியர் லத்தீன் மொழியை மாத்திரம் தெரிந்தவராக இருந்தால் மாத்திரம் போதாது. ஜோனைப் பற்றியும் நன்றாக அறிந்திருக் வேண்டும்” என சேர் ஜேம்ஸ் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வகுப்பறையிலுள்ள மாணவர்கள் பல இக்கட்டான சூழலிருந்தும் பொருளாதார நெருக்கடிக்குள்ளிருந்தும் வரும் போது, ஆசிரியர் வெறுமனே கற்பித்தல் பணியை மாத்திரம் செய்து விட்டு அவர்களின் உள்ளுணர்வுகளை, தேவைகளை அவாக்களை கடினத்தன்மைகளைப் புரியாதவராக செல்வாரெனில், அதனால் மாணவர்களின் சிந்தனைத் தூண்டலுக்கு இடமில்லாமற் போகலாம். சில வேளைகளில் மாணவர்களின் விருப்பு, வெறுப்புகளுக்கும் உள்ளாக வேண்டிய நிலைமைகளும் மாணவர்களின் விமர்சனத்துக்கு சிக்குப்பட வேண்டிய நிலமையும் ஏற்படலாம்.

ஆசிரியர் மாணவருக்கு பாடங்களை இலகுபடுத்தி ஆர்வமூட்டும் வகையில் போதிப்பது மாணவர்கள் மீது ஆசிரியர்கள் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாக அமையும். முஸ்லிம் சமுதாயத்தின் முதல் ஆசனாகிய நபி (ஸல்) அவர்கள் மக்களை அன்பின் அடிப்படையில் வழிநடத்துபவர்களாகவே இருந்தார்கள். இதனைப் பின்வரும் திருமறை வசனம் உணர்த்துகிறது

(விசுவாசிகளே!) உங்களிலிருந்து நிச்சயமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் கஷ்டத்துக்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிகவும் வருத்தமாகவே இருக்கும். அன்றி உங்களைப் பெரிதும் விரும்புகின்றவராகவும் விசுவாசிகள் மீது அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கின்றார். (09:28)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இலகுபடுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள். ஆசையூட்டுங்கள், வெறுப்படையச் செய்யாதீர்கள்” (புஹாரி)

பொதுவாக மாணவர்கள் எதிர்பார்க்கும் நல்லாசிரியர் யார்? இவ்வினாவிற்கு பல கோணங்களிலிருந்தும் விடைகள் ஏவுகணைகளாகப் பாயலாம். ஆயினும், இறுதியாக மாணவர்களின் உள்ளங்களை வென்றவரே மாணவர்களால் எதிர்பார்க்கப்படும் நல்லாசிரியர் என்ற முடிவுக்கு வரலாம்.

உள்ளங்களை வெல்லுதல் எனும் போது, மாணவர்களுடன் சுமூகமாக மட்டுமன்றி, அவர்களின் அந்நியோன்யத் தேவைகளைக் கூட அறிந்து அவற்றை நிவர்த்தி செய்யப்பாடுபடுபவரை மாணவர்கள் பெரிதும் விரும்புவர். அவர்களை தம் வாழ் நாள் பூராவும் மறக்கமாட்டார்கள்.

கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மாணவர்களின் உள நிலையை அறிதல் வேண்டும். மெல்லக்கற்கும் மாணவர்களையும் மீத்திரன் கூடிய மாணவர்களையும் சராசரி மாணவர்களையும் இனங்காணுதல் அவசியமாகின்றது.

எனவே, ஆசிரியர்கள் எவ்வகையான மாணவர்களுக்கும் பொருத்தமானவாறு நடு நிலையைக் கைக்கொள்பவராக காணப்பட வேண்டும். மாணவர்களுக்கு சலிப்மேற்படுமளவுக்கு கற்பித்தல் அமையக்கூடாது. மாணவர்கள் தவறு செய்தால், அவர்களைப் பரிகாசித்து தண்டித்து, கடுமையாக நடந்து கொள்வதை விட அவர்கள் மீது அனுதாபம் கொள்வதே சிறந்த வழியாகும். ஆசிரியர்கள் மாணவர்களை அன்பாகவும் பண்பாகவும் நடத்த வேண்டும்.

ஒரு முறை ஒரு நாட்டுப்புற மனிதர் பள்ளியில் நுழைந்து சிறுநீர் கழிக்க முற்பட்டார். இதனைக்கண்ட நபித்தோழர்கள் அவரைக்கண்டிக்க முனைந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அவர்களைத்தடுத்து நிறுத்தி “அவரைக் கண்டிக்காது விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். அவரை அணுகி “இப்பள்ளிவாயல்கள் சிறுநீர் கழிப்பது அசுத்தப்படுத்துவது போன்ற கருமங்களுக்கு தக்க இடங்களல்ல. இவை அல்லாஹ்வை திக்ர் செய்வது தொழுவது போன்றவற்றிற்குரிய இடங்களாகும்” என்று கூறி விட்டு, ஒருவரை அழைத்து ஒரு வாளித்தண்ணீர் கொண்டு வந்து அவ்விடத்தில் ஊற்றுமாறு பணித்தார்கள். (முஸ்லிம்)

இங்கு நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரின் பிறந்து வளர்ந்த நாட்டுப்புறப் பின்னணியைக் கவனத்திற்கொண்டு அவரது தவறை அனுதாபத்துடன் நோக்கி மிக நாசுக்காக அவரை நெறிப்படுத்தினார்கள் என்பதைக் காண்கிறோம்.

மாணவர்களுக்கு அன்பு காட்டுவது, அவர்களின் தவறுகளை அனுதாபத்துடன் நோக்கி நாசுக்காகத் திருத்துவதுடன் மாணவர்களின் திறமைகளைச் மெச்சுவதும் அவர்களின் நன்னடத்தைகளைப் பாராட்டுவதும் மிக முக்கியமானவைகளாகும். எப்போதும் ஆசிரியர்கள் திறமைகளை வெளிக்காட்டும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பையும் உற்சாகத்தையும் கொடுப்பவராக இருத்தல் வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் அழகாக அல்-குர்ஆனை ஓதக்கூடியவராக இருந்த அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்களைப் பாராட்டினார்கள். (புஹாரி)

ஆற்றல்களையும் திறமைகளையும் பொறுத்தமட்டில் மாணவர்கள் பல தரத்தினவர்களாகக் காணப்படுவார்கள். விளங்கும் தன்மை கிரகிக்கும் ஆற்றல் போன்றவற்றில் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நிற்பர். ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக அவதானித்து தேவையான அறிவை அவசியமான அளவிலும் தரத்திலும் பொருத்தமான நேரத்திலும் வழங்கும் ஆளுமையுள்ளவரே சிறந்த ஆசிரியராவார்.

நபி (ஸல்) அவர்களிடம் பலர் வந்து தமக்கு உபதேசிக்குமாறு வேண்டிய போது, அவர்கள் வித்தியாசமான உபதேசங்களைச் செய்தார்கள்.

ஒருவருக்கு “நீ அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனுக்கு ஷிர்க் வைக்கக்கூடாது” மற்றொருவருக்கு “நீர் எங்கிருந்த போதிலும், அல்லாஹ்வைப் பயந்து கொள்வீராக” மேலும் ஒருவருக்கு “கோபப்படாதீர்” என அவர்களின் வேறுபாட்டிற்கேற்ப பதில்களை வழங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தனது கல்விப்போதனைகளின் போது தமது தோழர்களின் தனியாள் வேறுபாடுகளை கவனத்திற் கொண்டு அவர்களுக்கு கற்பித்துள்ளார்கள் என்பதைக் காணலாம்.

கற்பித்தல் பணியைச்செய்பவர் வெறுமனே பாட விதானங்களை பரிவர்த்தனம் செய்பவராக மட்டும் இருந்து விடலாகாது. மாறாக, மாணவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் திகழ்வது அவசியமாகும். ஏனெனில், வெறும் கல்வியை மட்டும் போதிப்பதால் அவர்கள் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை மாத்திரம் பெறலாம். ஆயினும், சமூகத்தில் சிறந்த ஒழுக்க விழுமியங்களுடன் நடந்து கொள்பவர்களாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள நற்பிரஜைகளாகத் திகழ்வார்களா? என்பது கேள்விக்குறியாகி விடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நான் நபியாக (ஆசிரியராக) அனுப்பப்பட்டதன் நோக்கம் (இப்பூமிப்பந்தில்) நற்போதனைகளை (செயல் வடிவில்) பரிபூரணப்படுத்தவேயாகும்” (புஹாரி)

அதனால் தான் கற்பித்தல் பணியை ஒரு தொழில் என்பதற்குப்பதிலாக ஆசிரியம் ஒரு சிறந்த நற்பணி ஈருலகத்திற்கும் பயனளிக்கும் சேவை என இஸ்லாம் கருதுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ ஒரு மனிதர் மரணித்து விட்டால், அவரை விட்டும் அவரது அமல்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும். மூன்று விடயங்களைத்தவிர. அதிலொன்று அவரால் பிறருக்கு பயனளிக்கப்பட்ட கல்வி” (புஹாரி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here