இலங்கை முஸ்லிம்களின் சமூக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் சர்வதேச ரீதியில் பங்காற்றுவதே இலக்கு-ஐக்கியத்திற்கான சுயாதீன மக்கள் அமைப்பு

Spread the love

sprit_ohtff_bangla_join_hand_489962bc14b9(எஸ்.அஷ்ரப்கான்)
முஸ்லிம் மக்களின் நியாயமான சமூக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், அனைத்து நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்ட விடயங்களில்  தமது குரலை இணைத்துக் கொள்ளவும் சர்வதேச ரீதியிலான பங்களிப்பினை ஆற்றுவதையும் தமது இலக்காக வரையறுத்து செயற்படவுள்ளதாக ஐக்கியத்திற்கான சுயாதீன மக்கள் அமைப்பு (Independent Civil Society For Unity)  விடுத்துள்ள முதலாவது ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வாழும் இலங்கை முஸ்லிம் மக்களிடையே அண்மைக்காலமாக இலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல், சமூக மாற்றங்கள், செயற்பாடுகள், புறமொதுக்கல்கள்  தொடர்பாக அதிக கவனக்குவிப்பும் அக்கறையும் ஏற்பட்டு வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இதன் வெளிப்பாடாகவே இவ்வமைப்பு அங்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை வாழ் அனைத்து மக்களும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளாகட்டும், முஸ்லிம் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தங்களாகட்டும்  இவை  ஒட்டு மொத்த  இலங்கை மக்களையும்  பாதிக்கும் அம்சங்களாக இன்று மாறியுள்ளது.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எனச்சொல்லிக் கொள்ளும் பாராளுமன்றக்கட்சி அரசியல்வாதிகள் யாருமே நாட்டின் வளர்ச்சிக்கோ, முஸ்லிம் மக்களின் அரசியல், சமூகப்பாதுகாப்புக்கோ பங்களிப்புச்செய்ய முடியாத தோல்வி நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதுடன், சொந்த மக்களையும் விற்றுப்பிழைக்கும் கடை நிலையை எட்டியிருக்கின்றனர். இந்த அரசியல்வாதிகளிடம்  இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிகழ்காலத்தினையும் எதிர்காலத்தினையும் இனியும் ஒப்படைக்க முடியாதென்கிற சிந்தனை வெளிப்பாடு சமூக மட்டங்களில் அழுத்தமாகப் பதிந்து வருகிறது.

இந்த உண்மையின் வெளிப்பாடாகவே இலங்கையைத் தாயகமாகக் கொண்ட வெளிநாட்டில் வாழும் சமூக சக்திகளிடம் இனியும்  மௌனமாக இருக்க முடியாது. தம்மால் முடிந்த சிறு பங்களிப்பினையாவது சொந்த மக்களுக்குச் செய்ய வேண்டுமென்ற உணர்வை விதைத்துள்ளது. கட்சி சார்பில்லாது, எந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் வழிபாடாகக் கொள்ளாது, சுயாதீனமாக இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்தினைப் பலப்படுத்துவதுடன், அனைத்து இன மக்களுடனும் ஐக்கியமாக வாழும் நோக்கினை முன்னிலைப்படுத்தி இயங்குவதை ஊக்கப்படுத்த வேண்டிய அவசியம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதற்கமைய, ஒக்டோபர் 01ம் திகதி பிரித்தானியாவில் “ஐக்கியத்திற்கான சுயாதீன மக்கள் அமைப்பு“ (Independent Civil Society For Unity) என்கிற சுயாதீனமான மக்கள்சார் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் கிழக்கு மாகணத்தினைச் சேர்ந்த சமூக ஈடுபாட்டாளர்களை அங்கத்துவமாகக் கொண்ட இந்த அமைப்பு, இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் நியாயமான சமூக உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளவும், அனைத்து நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்ட விடயங்களில்  தமது குரலை இணைத்துக் கொள்ளவும், சர்வதேச ரீதியிலான பங்களிப்பினை ஆற்றுவதையும் தமது இலக்காக வரையறுத்துள்ளது. இதனடிப்படையில், இவ்வமைப்பின் வேலைத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு இலங்கை மக்களுக்குள்ளும், சர்வதேச மட்டத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே, இதற்கான இதயபூர்வமான ஒத்துழைப்புக்கள் மற்றும் காத்திரமான பங்களிப்புக்களை கிழக்கு வாழ் மக்கள் வழங்கி, எமது எதிர்காலச் சந்ததியினருக்கு சிறந்ததொரு அடித்தளத்தினை இட்டுச்செல்ல அனைவரும் கைகோர்க்குமாறு இவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*